தமிழக சட்டசபை தேர்தல் மே மாதம் 16-ந்தேதி நடைபெறுகிறது.
தேர்தலுக்கான அனைத்து பணிகளும் முழுவீச்சில் நடந்து வருகிறது.
22-ந்தேதி மனு தாக்கல்
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் 22-ந்தேதி (வெள்ளிக்கிழமை) முதல் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம்.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி நேற்று சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
எஸ்.எம்.எஸ். அனுப்ப தடை
வாக்குப்பதிவு தினமான மே மாதம் 16-ந்தேதிக்கு 48 மணி நேரத்துக்கு முன்பாக ஒட்டு மொத்த எஸ்.எம்.எஸ்.களுக்கு (பல்க் எஸ்.எம்.எஸ்.) தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி மே மாதம் 14-ந்தேதி மாலை 6 மணி முதல் 48 மணி நேரத்துக்கு ஒட்டுமொத்தமாக எஸ்.எம்.எஸ்.களை அனுப்பக்கூடாது என்று செல்போன் நிறுவனங்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதேபோல ஒட்டுமொத்தமாக வாய்ஸ் எஸ்.எம்.எஸ்.சும் அனுப்பக்கூடாது. அரசியல் கட்சியினர் ரேடியோ மூலம் பிரசாரமும் செய்யக்கூடாது.
பார்வையாளர்கள் இன்று வருகை
சட்டமன்ற தேர்தலையொட்டி, தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு வரும் தேர்தல் பார்வையாளர்களுக்கு டெல்லியில் இன்று (நேற்று) ஒருநாள் பயிற்சி அளிக்கப்படுகிறது.
தமிழகத்துக்கு முதல் கட்டமாக செலவின பார்வையாளர்கள் 12 பேர் நாளை(இன்று) தமிழகம் வருகிறார்கள். ஐ.ஆர்.எஸ். அதிகாரிகளான இவர்கள் தமிழகத்தில் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களின் செலவினங்களை தீவிரமாக கண்காணிப்பார்கள். அதன் பின்னர் மற்ற பார்வையாளர்கள் படிப்படியாக தமிழகம் வருகிறார்கள்.
அதிகாரிகள் மாற்றம்
தற்போது அரசு அதிகாரிகள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளனர். அவர்களை மாற்ற வேண்டுமென்றால் அரசிடம் கேட்டுத்தான் மாற்ற முடியும். ஆனால் வேட்புமனு தாக்கல் தொடங்கும் தினமான 22-ந் தேதி முதல், தமிழக அரசின் அனைத்து அதிகாரிகளும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் வந்து விடுவார்கள்.
அதற்கு பிறகு அவர்களை தேர்தல் ஆணையம் மாற்ற எந்த ஆட்சேபனையும் இருக்காது. எனவே அரசு அதிகாரிகளை மாற்றுவது பற்றி இந்திய தலைமை தேர்தல் ஆணையம் உரிய உத்தரவை பிறப்பிக்கும்.
6 மாதம் சிறை
வேட்பு மனு தாக்கல் செய்யும்போது வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுவில் சரியான தகவலை அளிக்க வேண்டும். குறிப்பாக சொத்து மதிப்பு குறித்து வேட்பாளர்கள் தெரிவிக்கும் தகவல் உடனடியாக வருமானவரித்துறை மூலம் சரி பார்க்கப்படும். அந்த தகவல்கள் தவறாக இருந்தால் வேட்பாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும்.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 125-ஏ பிரிவின்படி குற்றம் நிரூபிக்கப்பட்டால் 6 மாதம் வரை சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். இது தவிர மற்ற தகவல்களையும் வேட்பாளர்கள் சரியாக அளிக்க வேண்டும். வேட்பாளர்களின் தேர்தல் செலவினங்களும் ஆன்லைனில் பதிவேற்றப்படும். அவற்றை செலவின பார்வையாளர்கள் உடனுக்குடன் ஆய்வு செய்வார்கள்.
சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அந்தந்த தொகுதி தேர்தல் அதிகாரிகளிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்ய வேண்டும். இதற்காக தேர்தல் அதிகாரிகளின் அலுவலகங்களும் அந்தந்த தொகுதிக்குள் அமைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இது வேட்பாளர்களுக்கு உதவியாக இருக்கும். மேலும் தேர்தல் அதிகாரிகள் பணி நேரத்தில் அவரவர் அலுவலகத்தில் கண்டிப்பாக இருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கூடுதல்வாக்குச்சாவடிகள்
தமிழக சட்டசபைக்காக மொத்தம் 65 ஆயிரத்து 616 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன. தற்போது தங்கள் பகுதியில் கூடுதலாக வாக்குச்சாவடிகள் அமைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வருகின்றன.
அவற்றை பரிசீலித்து தேவைப்பட்டால் கூடுதல் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும். எத்தனை வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன என்ற விவரம் வேட்பு மனு தாக்கல் தினத்தன்று இறுதியாக தெரிவிக்கப்படும்.
ஏஜெண்டுகள்
ஓட்டுப்பதிவின்போது வாக்குச்சாவடிகளில் அரசியல் கட்சிகள் சார்பில் ஏஜெண்டுகள் நியமிக்கப்பட்டிருப்பார்கள். அந்த ஏஜெண்டுகள் வாக்குப்பதிவு தினத்தன்று மதியம் 3 மணிக்கு பிறகு வாக்குச்சாவடியை விட்டு வெளியேறவோ அல்லது அவருக்கு பதில் வேறு ஒருவரை மாற்றி விட்டு செல்வதற்கோ தேர்தல் ஆணையம் அனுமதிக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment