234 உறுப்பினர்களை கொண்ட தமிழக சட்டசபைக்கு மே 16-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது.
மனு தாக்கல் தொடங்கியது
வாக்குப்பதிவு 16-ந் தேதி காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறும் என்றும், இந்த தேர்தலுக்கு வாக்குப்பதிவு நேரம் ஒரு மணி நேரம் நீட்டிக்கப்பட்டு இருப்பதாகவும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி அறிவித்து உள்ளார்.
சட்டசபை தேர்தலுக்கான அறிவிக்கையை தேர்தல் கமிஷன் நேற்று வெளியிட்டது. இதைத்தொடர்ந்து நேற்று வேட்புமனு தாக்கல் தொடங்கியது.
82 பேர் மனு தாக்கல்
முதல் நாளான நேற்று பெரும்பாலும் சுயேச்சை வேட்பாளர்களும், சில சிறிய கட்சிகளின் வேட்பாளர்களும் மனு தாக்கல் செய்தனர். சில தொகுதிகளில் தி.மு.க. வேட்பாளர்களும் தங்கள் வேட்புமனுவை தாக்கல் செய்தனர். தமிழகம் முழுவதும் நேற்று முதல் நாளில் 7 பெண்கள் உள்பட மொத்தம் 82 பேர் மனு தாக்கல் செய்தனர். இவர்களில் ஒரு சிலர் ஒன்றுக்கு மேற்பட்ட மனுக்களை தாக்கல் செய்துள்ளதாக தெரிகிறது.
காஞ்சீபுரம் தொகுதியில் போட்டியிட காந்திய மக்கள் இயக்கத்தின் கொள்கைபரப்பு செயலாளர் தினகரன் என்ற தர்ம தினகரன் தேர்தல் அதிகாரியும், காஞ்சீபுரம் சப்-கலெக்டருமான அருண் தம்புராஜிடம் நேற்று மனு தாக்கல் செய்தார்.
தி.மு.க. வேட்பாளர்கள்
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் (தனி) தொகுதி தி.மு.க. வேட்பாளர் அன்புமணி கணேசன், பாளையங்கோட்டை தொகுதி தி.மு.க. வேட்பாளர் டி.பி.எம். மைதீன்கான், ஈரோடு மேற்கு தொகுதி தி.மு.க. வேட்பாளர் சு.முத்துசாமி ஆகியோர் நேற்று தங்கள் வேட்புமனுக் களை தேர்தல் அதிகாரிகளிடம் தாக்கல் செய்தனர்.
நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பாளரும், பச்சை தமிழகம் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சுப.உதயகுமார், கடையநல்லூர் தொகுதியில் எஸ்.டி.பி.ஐ. கட்சி வேட்பாளர் ஜாபர் அலி ஆகியோர் நேற்று தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.
பாரதீய ஜனதா
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தொகுதி பாரதீய ஜனதா வேட்பாளர் செல்வராஜ், கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் தொகுதி பாரதீய ஜனதா வேட்பாளர் எஸ்.ஷீபா பிரசாத், விளவங்கோடு தொகுதி பாரதீய ஜனதா வேட்பாளர் சி.தர்மராஜ் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்
இதேபோல் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் ஆர்.நந்தகுமார், சேலம் மாவட்டம் ஏற்காடு (தனி) தொகுதி பாரதீய ஜனதா வேட்பாளர் பொன்ராசு ஆகியோர் தங்கள் வேட்புமனுக் களை தாக்கல் செய்தனர்.
திருப்பூர் வடக்கு தொகுதியில் காந்திய மக்கள் இயக்கத்தின் வேட்பாளர் ஏ.எஸ்.கிருஷ்ணமூர்த்தி மனு தாக்கல் செய்தார். தேனி மாவட்டம் கம்பம் தொகுதியில் எஸ்.டி.பி.ஐ. கட்சி வேட்பாளர் ரபீக் அகமது மனு தாக்கல் செய்தார்.
மாட்டு வண்டியில் வந்த வேட்பாளர்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஐந்து கோவிலான் மாட்டு வண்டியில் வந்து தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
கடலூர் மாவட்டம் புவனகிரி தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரத்தினவேல் மனு தாக்கல் செய்தார். விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் தொகுதியில் பகுஜன் சமாஜ் வேட்பாளர் மனு தாக்கல் செய்தார்.
தஞ்சை மாவட்டம் பாபநாசம் தொகுதியில் எஸ்.டி.பி.ஐ. கட்சி வேட்பாளர் முகமது பாரூக் வேட்புமனு தாக்கல் செய்தார்.
சேலம் மாவட்டம் மேட்டூர் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட ‘தேர்தல் மன்னன்’ பத்மராஜன் மனு தாக்கல் செய்தார்.
வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட மனிதன் என்பவர் பின்னோக்கி நடந்து வந்து மனு தாக்கல் செய்தார்.
இன்றும், நாளையும் விடுமுறை
இன்று (சனிக்கிழமை) நான்காவது சனிக்கிழமை என்பதால் வங்கிகளுக்கு விடுமுறை ஆகும். நாளை ஞாயிற்றுக்கிழமை ஆகும். எனவே இன்றும், நாளையும் வேட்புமனு தாக்கல் செய்ய முடியாது. இனி திங்கட்கிழமைதான் மனு தாக்கல் செய்ய முடியும்.
வேட்புமனு தாக்கல் செய்ய வருகிற 29-ந் தேதி (வெள்ளிக்கிழமை) கடைசி நாள் ஆகும். வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை 30-ந் தேதி நடைபெறும். போட்டியில் இருந்து விலக விரும்புவோர் தங்கள் மனுக்களை வாபஸ் பெற மே 2-ந் தேதி கடைசி நாள். அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
No comments:
Post a Comment