Monday, 4 April 2016

பி.இ. கலந்தாய்வு: ஏப்ரல் 15 முதல் இணையத்தில் மட்டுமே பதிவு: விண்ணப்ப விநியோகம் கிடையாது

2016-17 கல்வியாண்டு பொறியியல் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வுக்கு ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் www.annaunivtnea.edu  என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
 இந்த முறை விண்ணப்பப் படிவம் விநியோகம் செய்யப்பட மாட்டாது என்றும் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
 இதுதொடர்பாக சென்னையில் அண்ணா பல்கலை. பதிவாளர் கணேசன் செவ்வாய்க்கிழமை நிருபர்களிடம் கூறியதாவது:-
 தொழில்நுட்ப வளர்ச்சி மேம்பட்டுள்ள இந்தக் காலக்கட்டத்தில், விண்ணப்பப் படிவத்தைப் பெறுவதற்காக மாணவர்கள் அலைகழிக்கப்படுவதையும், நீண்ட வரிசையில் காத்திருப்பதையும் தவிர்க்கும் வகையில் முதல் முறையாக இணையத்தில் மட்டுமே விவரங்களைப் பதிவு செய்யும் நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 
 இதற்கான அறிவிப்பு ஏப்ரல் 14-ஆம் தேதி வெளியிடப்படும். 15-ஆம் தேதி முதல் இணையத்தில் விவரங்களைப் பதிவு செய்யலாம். பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியானதற்குப் பிறகு, 7 நாள்கள் வரை கால அவகாசம் அளிக்கப்படும். பிளஸ்-2 மதிப்பெண் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அனைத்து ஆவண நகல்களையும் இணைத்து -செயலர், தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை, அண்ணா பல்கலைக்கழகம், சென்னை- என்ற முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ சமர்ப்பிக்க வேண்டும்.
 பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியானதற்குப் பிறகு கால அவகாசம் அளிக்கப்படும். தேவைப்பட்டால் இந்த கால அவகாசம் நீட்டிக்கப்படும்.
 60 உதவி மையங்கள்: விண்ணப்பதாரர்களுக்கு உதவும் வகையில் அரசு பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக்குகள், பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் என 60 இடங்களில் உதவி மையங்கள் செயல்படும். இவற்றில் சந்தேகங்களை அறிவதோடு, விவரங்களை பதிவையும் செய்து கொள்ள முடியும்.
 கட்டணம் எவ்வளவு? பொதுப் பிரிவினர் ரூ. 500-க்கான வரைவோலையை விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும். சிறப்புப் பிரிவினருக்கான கட்டணம் ரூ. 250-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார்.
7 நாள்களில் பதிவு செய்து விண்ணப்பிக்க முடியுமா?
 இணையத்தில் பதிவு முறை மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான பிறகு 7 நாள்களுக்குள் பிளஸ்-2 மதிப்பெண்களைப் பதிவு செய்து விண்ணப்பிப்பது சாத்தியமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. விண்ணப்பதாரர் மற்ற விவரங்களை ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் பதிவு செய்துவிட முடியும் என்றபோதும், பிளஸ்-2 மதிப்பெண்களைத் தேர்வு முடிவு வெளியான பிறகே பதிவு செய்ய முடியும்.
 இதனால், கடைசி 7 நாள்களில் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் மதிப்பெண்களை பதிவு செய்ய முற்படுவர். இதனால், இணையதளம் முடங்க வாய்ப்பு உள்ளது என்ற அச்சம் எழுந்துள்ளது.
 இதுதொடர்பாக அண்ணா பல்கலை. பதிவாளர் கணேசனிடம் கேட்டபோது, இதுகுறித்து ஆலோசிக்கப்பட்டு உரிய தீர்வு காணப்படும். தேவைப்பட்டால் கால அவகாசம் நீட்டிக்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment