Monday, 25 April 2016

திருவாரூர் மாவட்டத்தில் 5,586 வாக்குச்சாவடி அலுவலர்கள் பணியில் ஈடுபடுகின்றனர் கலெக்டர் மதிவாணன் தகவல்












திருவாரூர் மாவட்டத்தில் 5,586 வாக்குச்சாவடி அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுகின்றனர் என்று கலெக்டர் மதிவாணன் கூறினார்.

பயிற்சி முகாம்

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நன்னிலம், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட வாக்குச்சாவடிகளில் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி முகாம் நேற்று நடந்தது. திருவாரூர் தொகுதி வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் வேலுடையார் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.

முகாமில் வாக்குச்சாவடி மையங்களில் கடைப்பிடிக்க வேண்டிய தேர்தல் நடைமுறைகள், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை கையாளும் முறைகள் குறித்து அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. முகாமை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான மதிவாணன் கலந்து கொண்டு பார்வையிட்டார். அப்போது வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான உறுதிமொழி வாசிக்கப்பட்டு அனைத்து அலுவலர்களும் ஏற்றுக்கொண்டனர். பின்னர் கலெக்டர் மதிவாணன் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

1,152 வாக்குச்சாவடிகள்

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளில் 1,152 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் ஒரு தலைமை அலுவலரும், 3 வாக்குச்சாவடி அலுவலர்களும் பணியில் அமர்த்தப்பட உள்ளனர். மேலும் 1,200-க்கு மேல் வாக்காளர்கள் உள்ள வாக்குச்சாவடிகளில் கூடுதலாக வாக்குச்சாவடி அலுவலர் ஒருவரும் நியமிக்கப்பட உள்ளார்.

திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் 1,378 வாக்குச்சாவடி அலுவலர்களும், நன்னிலம் சட்டமன்ற தொகுதியில் 1,582 வாக்குச்சாவடி அலுவலர்களும், மன்னார்குடி சட்டமன்ற தொகுதியில் 1,359 வாக்குச்சாவடி அலுவலர்களும், திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் 1,267 வாக்குச்சாவடி அலுவலர்களும் என மொத்தம் 5,586 வாக்குச்சாவடி அலுவலர்கள் பணியில் ஈடுபடுகின்றனர். தேர்தல் பணியாளர்கள் தபால் வாக்களிக்க வசதியாக படிவம் 12 அந்தந்த தேர்தல் நடத்தும் அலுலர்களால் வழங்குவற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் சட்டமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துமீனாட்சி(திருவாரூர்), செல்வசுரபி (மன்னார்குடி), நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் அழகிரிசாமி, மாவட்ட வருவாய் அலுவலர் நில எடுப்பு(தேசிய நெடுஞ்சாலை) மணிமேகலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மன்னார்குடி

மன்னார்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளில் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி முகாம் மன்னார்குடியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நடந்தது. இந்த பயிற்சி முகாமை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான மதிவாணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதைப்போல நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளில் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான முதல் கட்ட பயிற்சி முகாம் குடவாசலை அடுத்த மஞ்சக்குடியில் உள்ள தனியார் கல்லூரியில் நடந்தது. முகாமில் நன்னிலம் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அசோகன் கலந்து கொண்டு பல்வேறு தேர்தல் பணிகள் குறித்த கேள்விகளுக்கு பதில் அளித்தார். வீடியோ மூலம் தேர்தல் பணிகள் குறித்து முழு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் விஜயலட்சுமி, திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) ஸ்ரீலேகா, தாசில்தார்கள் தங்கமணி, கண்ணன், ராஜகணேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment