Tuesday, 5 April 2016

திருவாரூர் மாவட்ட அ.தி.மு.க. வேட்பாளர்களின் வாழ்க்கை குறிப்பு

சட்டசபை தேர்தலில் போட்டியிடும் திருவாரூர் மாவட்ட அ.தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியலை முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ளார். 
அவர்களின் வாழ்க்கை குறிப்பு விவரம் பின்வருமாறு:-

நன்னிலம்

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியம் எளவனூர் சோத்திரியம் கிராமத்தை சேர்ந்த ராஜகோபால்-சிவானந்தம்மாள் ஆகியோரின் மகன் ரா.காமராஜ் (வயது55). எம்.ஏ. படித்தவர். இவர் நன்னிலம் தொகுதியில் போட்டியிடுகிறார். 1982-ம் ஆண்டு மன்னார்குடி ராஜகோபாலசாமி அரசு கலைக்கல்லூரியில் படித்தபோது, மாணவர் தலைவராக தேர்வு செய்யப்பட்ட காமராஜ், அ.தி.மு.க.வில் கோட்டூர் ஒன்றிய இணைச்செயலாளர், கோட்டூர் ஒன்றிய செயலாளர், திருவாரூர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்தார். 1998-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை அ.தி.மு.க. மாவட்ட செயலாளராகவும், அதைதொடர்ந்து 2002-ம் ஆண்டு முதல் 2003-ம் ஆண்டு வரை ஜெயலலிதா பேரவை செயலாளராகவும் இருந்தார். 2001-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரை பாராளுமன்ற ராஜ்யசபா உறுப்பினர் மற்றும் கொறடாவாக பதவி வகித்தார். 2006-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் மன்னார்குடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். 2011-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் நன்னிலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காமராஜ், தற்போது உணவு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார். இவருக்கு கே.லதாமகேஷ்வரி என்ற மனைவியும், எம்.கே.இனியன், கே.இன்பன் ஆகிய 2 மகன்களும், 3 சகோதரர்கள், 4 சகோதரிகளும் உள்ளனர். மகன்கள் 2 பேரும் டாக்டர்கள் ஆவர்.

திருவாரூர்

நன்னிலம் அருகே உள்ள ஆனைக்குப்பம் கிராமத்தை சேர்ந்த ராஜமாணிக்கம்-சரோஜா ஆகியோரின் மகன் ஏ.என்.ஆர்.பன்னீர்செல்வம் (56). தற்போது திருவாரூர் தென்றல் நகரில் வசித்து வரும் இவர், பி.ஏ. படித்தவர். 1980-ம் ஆண்டு முதலே அ.தி.மு.க.வில் இருந்து வருகிறார். அ.தி.மு.க. கிளை செயலாளர், மாவட்ட விவசாய அணி பொருளாளர் போன்ற பொறுப்புகளை வகித்தவர். தற்போது அ.தி.மு.க. மாவட்ட பொருளாளராகவும், திருவாரூர் லெட்சுமிநாராயண கூட்டுறவு வங்கி தலைவராகவும் பதவி வகித்து வரும் இவருக்கு சிவகாமசுந்தரி என்ற மனைவியும், சண்முகசுந்தரம் என்ற மகனும், பிரியதர்ஷினி என்ற மகளும் உள்ளனர்.

மன்னார்குடி

மன்னார்குடி நடராஜபிள்ளை தெருவை சேர்ந்த தியாகராஜன்-தவசுந்தரி ஆகியோரின் மகள் தி.சுதாஅன்புச்செல்வன் (வயது39). இவருடைய கணவர் வி.என்.அன்புச்செல்வன் (41). இவர் அ.தி.மு.க. நகர துணை செயலாளராக பதவி வகித்து வருகிறார். இவர்களுக்கு கடந்த 2006-ம் ஆண்டு திருமணம் நடந்தது. மிதுனாஸ்ரீ (8), தன்யஸ்ரீ(4) ஆகிய 2 மகள்கள் உள்ளனர். கடந்த 2011-ம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சுதாஅன்புச்செல்வன் தற்போது மன்னார்குடி நகரசபை தலைவராக பதவி வகித்து வருகிறார். அ.தி.மு.க.வில் மன்னார்குடி நகர மகளிர் அணி செயலாளராகவும் உள்ளார். முன்னதாக 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை நகரசபை உறுப்பினராக இருந்தார். 1997-ம் ஆண்டு முதல் அ.தி.மு.க.வில் இருந்து வரும் சுதாஅன்புச்செல்வன் வக்கீல் ஆவார்.

திருத்துறைப்பூண்டி

திருத்துறைப்பூண்டி அருகே உள்ள அரியலூர் திராவிடர் தெருவை சேர்ந்தவர் கி.உமாமகேஷ்வரி கிருஷ்ணமூர்த்தி (42). இவருடைய பெற்றோர் பாலகிருஷ்ணன்- ராஜேஷ்வரி. இவர்கள் அ.தி.மு.க.வை சேர்ந்தவர்கள் ஆவர். திருத்துறைப்பூண்டி புனித தெரசாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி படிப்பை முடித்த உமாமகேஷ்வரி கிருஷ்ணமூர்த்தி தற்போது பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வருகிறார். 1990-ம் ஆண்டு முதலே அ.தி.மு.க.வில் இருந்து வரும் இவர், கடந்த 2011-ம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு திருத்துறைப்பூண்டி நகரசபை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவருடைய கணவர் கிருஷ்ணமூர்த்தி (52). லாரி உரிமையாளரான இவர் கடந்த 1984-ம் ஆண்டு முதல் அ.தி.மு.க.வில் இருந்து வருகிறார். தற்போது அ.தி.மு.க. அமைப்பு சாரா ஓட்டுனர் அணி மாவட்ட பொருளாளராக பதவி வகித்து வருகிறார். இவர்களுடைய மகள் சுஜிதா (18) என்ஜினீயரிங் படித்து வருகிறார். மகன் சுஜித்ராஜா(16) 12-ம் வகுப்பு படித்து வருகிறார். 

No comments:

Post a Comment