Wednesday, 13 April 2016

tnelections2016:சட்டமன்ற தேர்தலில் திருவாரூர் தொகுதியில் மீண்டும் கருணாநிதி போட்டி



:
சட்டமன்ற தேர்தலில் திருவாரூர் தொகுதியில் மீண்டும் தி.மு.க. தலைவர் கருணாநிதி போட்டியிடுகிறார். வரும் 25-ந் தேதி அவர் வேட்புமனு தாக்கல் செய்கிறார். 

5 முறை முதல்-அமைச்சர்

தமிழ்நாடு முதல்-அமைச்சராக 5 முறை இருந்தவர் என்ற சிறப்பை பெற்றவர், தி.மு.க. தலைவர் கருணாநிதி. இவர் 1957-ம் ஆண்டு முதல் முறையாக குளித்தலை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டசபைக்கு வந்தவர். தொடர்ந்து, 1962-ம் ஆண்டு தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட்டார். 

பின்னர், 1967-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் சென்னையில் உள்ள சைதாப்பேட்டை தொகுதியில் கருணாநிதி போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1971-ம் ஆண்டு அதே சைதாப்பேட்டை தொகுதியிலும், 1977 மற்றும் 1980-ம் ஆண்டுகளில் அண்ணாநகர் தொகுதியிலும், 1989 மற்றும் 1991-ம் ஆண்டுகளில் துறைமுகம் தொகுதியிலும், 1996, 2001, 2006-ம் ஆண்டுகளில் சேப்பாக்கம் தொகுதியிலும் போட்டியிட்டு கருணாநிதி தொடர் வெற்றி பெற்றார். 

திருவாரூரில் மீண்டும் போட்டி

கடந்த 44 ஆண்டுகளாக சென்னையில் உள்ள தொகுதியிலேயே போட்டியிட்ட கருணாநிதி, கடந்த சட்டமன்ற தேர்தலில் (2011-ம் ஆண்டு) திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 

சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிட்டு தொடர்ச்சியாக 12 வெற்றிகளை பெற்றுள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதி, நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலிலும் திருவாரூர் தொகுதியிலேயே மீண்டும் போட்டியிட இருக்கிறார். 

இதை, அவரது தேர்தல் சுற்றுப்பயண அறிக்கை நேற்று உறுதிப்படுத்தியது. திருவாரூரில் உள்ள திருக்குவளையில் தான் கருணாநிதி பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, 2-வது முறையாக தனது சொந்த தொகுதியில் அவர் களம் இறங்குகிறார். 

வேட்புமனு தாக்கல்

வரும் 25-ந் தேதி திருவாரூர் செல்லும் தி.மு.க. தலைவர் கருணாநிதி அன்று காலை வேட்புமனு தாக்கல் செய்கிறார். அன்று இரவு அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகிறார்.

No comments:

Post a Comment