Saturday, 30 April 2016

சுட்டெரித்துப் போகிறது "எல் நீனோ' - மூழ்கடிக்க வருகிறது "லா நீனா'!

ஆசிய நாடுகளை வாட்டியெடுத்து வரும் வெப்ப சலனத்தின் (எல் நீனோ) தாக்கம் இந்த ஆண்டு மத்தியில் குறைந்தாலும், அதனைத் தொடர்ந்து வரும் "லா நீனா' சலனம் காரணமாக பலத்த மழையும், வெள்ளப் பெருக்கும் ஏற்படும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
 கடந்த ஆண்டு தொடங்கிய வெப்ப சலனம் காரணமாக, பிலிப்பின்ஸ், மலேசியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் வரலாறு காணாத கடும் வெப்பம் நிலவியது. உலகில் மிக அதிக அளவு நெல் உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்றான வியத்நாமில், கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குப் பஞ்சம் நிலவுகிறது.
 இந்தியாவில், 33 கோடி மக்களுக்கு குடிநீர் கிடைக்காத நிலை ஏற்படும் அபாயம் நிலவுகிறது. சீனாவில் உற்பத்தியாகி, 6 தெற்காசிய நாடுகள் வழியாக ஓடும் மேகாங் ஆற்றில், கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நீர் குறைந்து போனது. இதன் காரணமாக பல்வேறு நாடுகளில் வறட்சியும், உணவுப் பஞ்சமும் ஏற்பட்டது.
 இந்த நிலையில், வெப்ப சலனத்தின் இந்த ஆண்டு மத்தியில் குறைந்து விடும் என்று கூறும் விஞ்ஞானிகள், அதனைப் பின்தொடர்ந்து "லா நீனா' என்ற குளிர் சலனம் இந்த ஆண்டு இறுதியில் தொடங்கும் என்று தெரிவித்துள்ளனர். அந்த "லா நீனா' காரணமாக, கடுமையான மழையும், வெள்ளப் பெருக்கும் ஏற்படும் என்று அவர்கள் எச்சரித்துள்ளனர். இதனால், ஏற்கெனவே வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள வேளாண் உற்பத்தி, மேலும் கடுமையாக பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
 இதுகுறித்து மனித நேய விவகாரங்களுக்கான ஐ.நா. துணைப் பொதுச் செயலர் ஸ்டீஃபன் ஓபிரையன் கூறியதாவது: 
 வெப்ப சலனத்தைத் தொடர்ந்து இந்த ஆண்டு இறுதியில் வரவிருக்கும் "லா நீனா', மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும். வெப்ப சலனத்தால் ஏற்பட்ட பாதிப்புகளைவிட அது மிகக் கடுமையானதாக இருக்கக் கூடும். 
 வெப்ப சலனம் காரணமாக ஏற்கெனவே உலகம் முழுவதும் 6 கோடி பேர், அவசர நிவாரண உதவிகளைப் பெற வேண்டிய நிலைக்குத் தளப்பட்டுள்ளனர். 
 இந்த நிலையில், "லா நீனா'வால் ஏற்படும் வெள்ளப் பெருக்கில் விவசாய உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படலாம் என்றார் அவர்.

திருவாரூர் மாவட்ட நான்கு தொகுதிகளில் 120 வேட்பு மனுக்கள் தாக்கல்:இன்று பரிசீலனை


திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 4 பேரவைத் தொகுதிகளில் 86 வேட்பாளர்கள் 120 மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.
தமிழக மக்கள் முன்னேற்றக்கழக வடக்கு மாவட்ட செயலாளர் சு. கணேசன் (37), சுயேச்சையாக வடகரையைச் சேர்ந்த எஸ்.ராஜேந்திரன், மடப்புரம் த. செல்வராஜ் (52), சென்னை பட்டாபிராமபுரம் மீனாட்சிசுந்தரம் (34) ஆகியோர் வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.
திருத்துறைப்பூண்டி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் பிரேம்குமாரிடம் சுயேச்சையாக திருக்களாரைச் சேர்ந்த பசுபதி (42), திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த முருகேசன் (50) ஆகியோர் வெள்ளிக்கிழமை வேட்பு மனுத்தாக்கல் செய்தனர்.
நன்னிலம் சட்டப் பேரவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அசோகனிடம் வெள்ளிக்கிழமை சுயேச்சை வேட்பாளர்கள் மோகன், மூர்த்தி, ஆறுமுகம், வெங்கட சுப்பிரமணியன், விஜயன், கலைவேந்தன், பெர்னாட்ஷா ஆகிய 7 பேரும் வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.
மன்னார்குடி சட்டப் பேரவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் செல்வசுரபியிடம் பாமக வேட்பாளர் பாலசுப்பிரமணியன், அக்கட்சியின் மாற்று வேட்பாளர் கங்காதரன், தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர் ஜேஆர்எஸ்.பாண்டியன், பகுஜன் சமாஜ்வாதி வேட்பாளர் கலையரசன், சுயேச்சை வேட்பாளர்களான மாரிமுத்து, சம்பத், ராஜா ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
திருவாரூர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை மனுத்தாக்கல் இறுதி நாள் வரை அதிமுக 8, திமுக 6, காங். 2, பாஜ 6, பிஎஸ்பி 3, இந்தியக் கம்யூ. 4, மார்க்சிஸ்ட் 2, தேமுதிக 2, தமிழக தேவேந்திர குல மக்கள் எழுச்சி இயக்கம் 1, நாம் தமிழர் கட்சி 8, அன்பு உதயம் கட்சி 1, பாமக 8, இந்திய ஜனதா 2, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் 3, யூத் அண்டு ஸ்டூடண்ட் பார்ட்டி 2, பார்வர்டு பிளாக் 1, மக்கள் மனது கட்சி 1 மற்றும் சுயேச்சை 26 என மொத்தம் 86 பேர் 120 மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்கள் இன்று (சனிக்கிழமை) பரிசீலனை செய்யப்படுகிறது.

Friday, 29 April 2016

திருவாரூர் மாவட்டத்தில் அ.தி.மு.க. - பா.ஜனதா வேட்பாளர்கள் உள்பட 29 பேர் மனு தாக்கல்













திருவாரூர் மாவட்டத்தில் அ.தி.மு.க. - பா.ஜனதா வேட்பாளர்கள் உள்பட நேற்று ஒரே நாளில் 29 பேர் மனு தாக்கல் செய்தனர். 

திருவாரூர்

திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், நன்னிலம், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் பன்னீர்செல்வம் நேற்று தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துமீனாட்சியிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இவருக்கு மாற்று வேட்பாளராக விஜயகுமாரி மனுதாக்கல் செய்தார்.பா.ஜனதா கட்சி வேட்பாளர் ரெங்கதாஸ், இவருக்கு மாற்று வேட்பாளராக பிரமோத்ராஜன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தென்றல் சந்திரசேகரன், இவருக்கு மாற்று வேட்பாளர் கந்தன் என மொத்தம் 6 பேர் தேர்தல் அதிகாரியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

நன்னிலம்

அதேபோல நன்னிலம் தொகுதியில் போட்டுயிடுவதற்காக அ.தி.மு.க. வேட்பாளரும், அமைச்சருமான ஆர்.காமராஜ் தேர்தல் நடத்தும் அலுவலர் அசோகனிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

இவருக்கு மாற்று வேட்பாளராக சுவாதிகோபால், இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளராக சரவணன், இவருக்கு மாற்று வேட்பாளராக ராஜேந்திரன், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக அன்புச்செல்வன், மாற்று வேட்பாளராக சாமிநாதன், பா.ம.க. வேட்பாளராக இளவரசன், மாற்று வேட்பாளராக ராஜாராமன், பார்வர்டு பிளாக் கட்சி வேட்பாளர் பெர்னாட்ஷா, பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் முருகவேல், சுயேச்சை வேட்பாளர் குமார் என மொத்தம் 11 பேர் தேர்தல் அதிகாரியிடம் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

மன்னார்குடி

மன்னார்குடி தொகுதியில் போட்டியிடுவதற்காக அ.தி.மு.க. வேட்பாளர் எஸ்.காமராஜ் நேற்று தேர்தல் நடத்தும் அலுவலர் செல்வசுரபியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். இவருக்கு மாற்று வேட்பாளராக வக்கீல் சாமிநாதன், தே.மு.தி.க. வேட்பாளர் முருகையன்பாபு, மாற்று வேட்பாளர் கென்னடி, சுயேச்சை வேட்பாளர் சுந்தர் என மொத்தம் 5 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

திருத்துறைப்பூண்டி தொகுதியில் போட்டியிடுவதற்காக அ.தி.மு.க. வேட்பாளர் உமாமகேஸ்வரிகிருஷ்ணமூர்த்தி தேர்தல் நடத்தும் அலுவலர் பிரேம்குமாரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

இவருக்கு மாற்று வேட்பாளராக பாலதண்டாயுதம், பா.ம.க. வேட்பாளராக ராஜமோகன், மாற்று வேட்பாளராக வெண்ணிலா, நாம் தமிழர் கட்சியின் மாற்று வேட்பாளராக சரவணன், தமிழக மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளராக தங்க.அய்யப்பன், சுயேச்சை வேட்பாளர் புகழேந்தி என மொத்தம் 7 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் 29 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். 

Thursday, 28 April 2016

தேர்தல் விதிமீறலா?தகவல் கொடுங்க...


திருவாரூர் மாவட்டத்துக்குள்பட்ட 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் எங்கேனும் தேர்தல் விதி மீறல்கள், வாக்காளர்களுக்குப் பணம் அளிக்கும் நடவடிக்கைகள் நடைபெற்றால் அதுகுறித்து கீழ்க்கண்ட செல்லிடப்பேசி எண்களைத் தொடர்பு கொண்டு தொகுதியின் பறக்கும்படை அல்லது நிலையான கண்காணிப்புக்குழு அலுவலர்களுக்குத் தகவல் அளிக்கலாம்.
தொகுதி வாரியாக பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்புக் குழு அலுவலர்களின் செல்லிடப்பேசி எண்கள்:
திருவாரூர்: பறக்கும் படை அலுவலர்கள் - 7402607542, 7402607529, 7402607538.
நிலையான கண்காணிப்புக்குழு - 9789310906, 9443488871, 9842564812.
திருத்துறைப்பூண்டி: பறக்கும் படை அலுவலர்கள் - 7402607562, 7402607559, 7402607558.
நிலையான கண்காணிப்புக்குழு - 9489627903, 9585286521, 9578306406.
மன்னார்குடி: பறக்கும் படை அலுவலர்கள் - 7402607554, 7402607555, 9585269717.
நிலையான கண்காணிப்புக்குழு - 9786572917, 7373203370, 9750249037.
நன்னிலம்: பறக்கும் படை அலுவலர்கள் - 7402607534, 7402607539, 7402607533.
நிலையான கண்காணிப்புக்குழு - 9943807578, 9750698028, 9445000298.

Wednesday, 27 April 2016

நமதூர் மௌத் அறிவிப்பு 27/04/2016

நமதூர் ஜெயம் தெரு டீக்கடை ஜப்பார் அவர்களின் சகலை மகன் இம்ரான் அவர்கள் மௌத்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

மிஸ்டு கால்' கொடுத்தால் ரயில் சேவைகளின் விவரங்களை அறியலாம்


"மிஸ்டு கால்' கொடுத்தால், புறநகர் ரயில்களின் தாமதங்கள், திடீர் ரத்து ஆகியவற்றை பயணிகள் அறிந்து கொள்ளும் திட்டத்தை மேற்கு ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது.
 அன்றாடப் பயணங்களுக்கு, போக்குவரத்து நெரிசல், கட்டண உயர்வு உள்ளிட்டவற்றால் பேருந்துகளைக் காட்டிலும் பொதுமக்கள் ரயில் பயணத்தையே அதிகம் விரும்புகின்றனர்.
 மேலும், பெரும்பாலான நகரங்களில் தாங்கள் பணிபுரியும் அலுவலகங்கள் நீண்ட தூரத்தில் இருந்து அலுப்பு தெரியாமல் பயணம் செய்ய ரயில் போக்குவரத்தையே மக்கள் பெரிதும் விரும்புகின்றனர்.
 அவ்வாறு புறநகர் ரயில்களுக்காக காத்திருக்கும் பயணிகள் குறிப்பிட்ட நேரத்தில் ரயில்கள் வரவில்லையென்றால் ரயில் பழுது, சேவை திடீர் ரத்து, தாமதம் உள்ளிட்ட விவரங்களை அறிந்து கொள்ள முடியாமல், அவசர கதியில் பேருந்துகளையோ அல்லது கிடைத்த வாகனங்களிலோ தங்கள் பணியிடங்களுக்குச் செல்ல நேரிடுகிறது.
 இதைத் தடுக்க மேற்கு ரயில்வே புதிய திட்டத்தை திங்கள்கிழமை அறிமுகப்படுத்தியது.
 இதற்கு, புறநகர் ரயில் பயணிகள் 1800 212 4502 என்ற இலவச தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ள வேண்டும். அப்போது அந்த அழைப்பு தானாகவே துண்டிக்கப்படும்.
 இதையடுத்து, எந்த செல்லிடப்பேசி எண்ணில் இருந்து பயணிகள் அழைத்தனரோ அந்த எண்ணுக்கு, ரயில் சேவைகள் மற்றும் அதன் நிலவரங்கள் குறித்து குறுஞ்செய்தி அனுப்பப்படும்.
 இந்தத் திட்டத்துக்கு பயணிகள் பெரும் ஆதரவு தெரிவித்துள்ளதாக ரயில்வே துறை தெரிவித்தது.

திருவாரூர் நகராட்சிக் குப்பைக் கிடங்கு வேறு இடத்துக்கு மாற்றப்படுமா?


திருவாரூர் நகராட்சிக்குள்பட்ட 31 வார்டுகளில் சுமார் 3 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். மாவட்டத் தலைநகராக திருவாரூர் இருப்பதால் அண்மைக் காலமாக குடியிருப்புப்  பகுதிகள் வேகமாக வளர்ந்து வருகின்றன. நகர் முழுவதும் அள்ளப்படும் டன் கணக்கிலான குப்பைகள் நெய்விளக்குத் தோப்புப் பகுதியில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவிலான குப்பைக் கிடங்கில் கொட்டப்பட்டு அழிக்கப்படுகின்றன.
இங்கு கொட்டப்படும் குப்பைகள் அவ்வப்போது சிலரால் தீவைத்து கொளுத்தி விடப் படுகிறது. குப்பையில் பிடிக்கும் தீ, பல நாள்களுக்குத் தொடர்ந்து எரிகிறது. இதனால் ஏற்படும் புகை, சுற்றுப்புற குடியிருப்புப் பகுதிகளுக்குச்  செல்வதால் புகை மண்டலத்தில் மக்கள் வசிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மழைக் காலங்களில் நகராட்சியின் பல இடங்களிலிருந்து எடுத்துச் செல்லப்படும் கழிப்பறை கழிவுநீர் குப்பைக் கிடங்கின் முன்பகுதியில் கொட்டிவிட்டுச் செல்கின்றனர். அந்தக் கழிவுநீர் வழிந்தோடி அருகில் உள்ள குடியிருப்புப் பகுதிகளுக்கு வருவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
எரியூட்டப்படும் சடலங்கள்...
மேலும், குப்பைக் கிடங்கு அருகில் இருக்கும் மயானத்தில் நகராட்சிப் பகுதிக்கு உள்பட்ட சடலங்கள் 70 சதவீதம் எரியூட்டப்படுகின்றன.  மயானத்தில் இடைவிடாமல் சடலங்கள் எரிந்து கொண்டிருக்கிறது.
மயானத்தின் சுற்றுச்சுவர் பல இடங்களில் சேதமாகி இருக்கிறது. குப்பைக் கிடங்கு, மயானத்திலிருந்து வெளியேறும் புகையினால் இருதய நோய், பார்வையிழப்புகளை அப்பகுதி மக்கள் சந்தித்து வருகின்றனர்.
நெய்விளக்குத்தோப்பு பகுதி மக்கள் மனை வரி, குடிநீர் வரி என அரசின் அனைத்து வரிகளையும் செலுத்துகின்றனர். இருப்பினும், இவர்கள் குறைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை. எனவே, மக்களைப் பாதிக்காத வகையில் குப்பைக் கிடங்கு, மயானத்தைச்  சீரமைக்க வேண்டும் அல்லது வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
மறு சுழற்சியாக்கப்படுமா...
டன் கணக்கில் குவியும் குப்பைகளில் பிளாஸ்டிக் பொருள்கள் அதிகம் இருக்கின்றன. தவிர, உணவகக் கழிவுகள், வாழை இலை, காகிதத் தாள்களும் குவிகின்றன. இக்குப்பையிலிருந்து பிளாஸ்டிக் பொருள்களைத் தனியாகப் பிரித்து மறுசுழற்சிக்குக் கொண்டு வரலாம்.
அவற்றை பிளாஸ்டிக் சாலைகள் போட பயன்படுத்தலாம். இதற்கு மாவட்ட, நகராட்சி நிர்வாகங்கள் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்கின்றனர் இப்பகுதியினர்.

Tuesday, 26 April 2016

முதல்வர் ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு பிரமாணப் பத்திரத்தில் தகவல்


முதல்வர் ஜெயலலிதா வேட்புமனு தாக்கல் செய்தபோது, இணைப்பாக அளித்துள்ள பிரமாணப் பத்திரத்தில் அசையும், அசையா சொத்துகளின் மதிப்பு ரூ.113.73 கோடி எனத் தெரிவித்துள்ளார்.
 தனக்கு உறவினர்கள் யாரும் இல்லை எனத் தெரிவித்துள்ள அவர், 2014-15ஆம் நிதியாண்டில் தனது வருவாய் ரூ.95.23 லட்சம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
 இதுகுறித்து, பிரமாணப் பத்திரத்தில் அவர் தெரிவித்த தகவல்:
 ஜெயா பப்ளிகேஷன்ஸ், சசி எண்டர்பிரைசஸ், கோடநாடு எஸ்டேட், ராயல் ப்ளோரிடெக் எக்ஸ்போர்ட்ஸ், க்ரீன் டீ எஸ்டேட் போன்ற நிறுவனங்களில் பங்குதாரராக இருப்பதாகவும், அதில், மார்ச் 31-ஆம் தேதி வரையிலான காலத்தில் அவற்றில் செய்யப்பட்ட முதலீடு ரூ.27 கோடியே 44 லட்சத்து 55 ஆயிரம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
 என்னென்ன கார்கள்? 1980-ஆம் ஆண்டு முதல் அம்பாஸிடர் கார் இருப்பதாகவும், மகேந்திரா ஜீப், மகேந்திரா போலிரோ, டெம்போ டிராவலர், சுவராஜ் மஸ்தா மாக்ஸி, காண்டஸா, டெம்போ ட்ராக்ஸ், டயோடா ப்ராடோ (இப்போது பயன்படுத்தும் வாகனம்) ஆகிய 9 வாகனங்கள் இருப்பதாகவும் அவற்றின் சந்தை மதிப்பு ரூ.42.25 லட்சம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
 அசையும்-அசையா சொத்துகள்: நகை, முதலீடுகள், வாகனங்கள் என அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ.41 கோடியே 63 லட்சத்து 55 ஆயிரத்து 395 எனத் தெரிவித்துள்ளார்.
 இப்போது வசித்து வரும் போயஸ் தோட்ட இல்லமானது தன்னாலும், தனது தாயாலும் 1967-ஆம் ஆண்டு ஜூலை 15-ஆம் தேதி வாங்கப்பட்டது எனக் குறிப்பிட்டுள்ளார். ஹைதராபாத், சென்னை தேனாம்பேட்டை, மந்தைவெளி உள்ளிட்ட இடங்களில் குடியிருப்பு இருப்பதாகத் தெரிவித்துள்ள அவர், தனது அசையா சொத்துகளின் இப்போதைய மதிப்பு ரூ.72 கோடியே 9 லட்சத்து 83 ஆயிரத்து 190 எனக் கூறியுள்ளார்.
 மொத்தமாக, அசையும், அசையாத சொத்துகளின் மதிப்பு ரூ.113 கோடியே 73 லட்சத்து 38,585 எனத் தெரிவித்துள்ளார். 2 ஆண்டுகள், அதற்கு மேல் தண்டனை விதிக்கக் கூடிய அளவிலான குற்றச்சாட்டுகள் ஏதும் நீதிமன்றத்தில் நிலுவையில் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதியின் சொத்து மதிப்பு ரூ.13.43 கோடி

திமுக தலைவர் கருணாநிதியின் சொத்து மதிப்பு கடந்த 5 ஆண்டுகளில் ரூ.4.93 கோடியிலிருந்து ரூ.13.43 கோடியாக உயர்ந்துள்ளது.
திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் கருணாநிதி, வேட்புமனு தாக்கல் செய்தபோது, பிரமாணப் பத்திரத்தையும் தாக்கல் செய்தார். அதில் குறிப்பிட்டுள்ளதாவது:-
கடந்த 10 ஆண்டுகளில் அரசு குடியிருப்பு ஏதும் ஒதுக்கீடு செய்யவில்லை. கையில் உள்ள ரொக்கம் ரூ.50,000. அசையா சொத்து எதுவும் கிடையாது. மனைவி தயாளு அம்மாளிடம் கையிருப்பு ரூ.10,000, துணைவியார் ராசாத்தி அம்மாளிடம் கையிருப்பு ரூ. 56,850.
நீதிமன்றத்தில் விசாரணைக்கு 14 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. வாகனங்கள், வீடு ஏதும் கிடையாது.
தயாளு அம்மாளுக்கு 176 கிராம் தங்கம், ராசாத்தி அம்மாளுக்கு 640 கிராம் தங்கம் உள்ளன. ராசாத்தி அம்மாள் வங்கிக்குச் செலுத்த வேண்டிய கடன் தொகை ரூ.11.94 கோடியும், கனிமொழிக்குத் தர வேண்டிய கடன் ரூ.1.17 கோடியும் உள்ளது.
கருணாநிதியின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 13.43 கோடியாகவும், தயாளு அம்மாளின் மொத்த சொத்து மதிப்பு ரூ.7.52 கோடியாகவும், ராசாத்தி அம்மாளின் சொத்து மதிப்பு ரூ. 42 கோடியாகவும் உள்ளது. கருணாநிதியின் சொத்து மதிப்பு 2011-இல் ரூ. 4.93 கோடியாகவும், தற்போது ரூ. 13.43 கோடியாகவும் அதிகரித்துள்ளது.

Monday, 25 April 2016

திருவாரூர் மாவட்டத்தில் 5,586 வாக்குச்சாவடி அலுவலர்கள் பணியில் ஈடுபடுகின்றனர் கலெக்டர் மதிவாணன் தகவல்












திருவாரூர் மாவட்டத்தில் 5,586 வாக்குச்சாவடி அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுகின்றனர் என்று கலெக்டர் மதிவாணன் கூறினார்.

பயிற்சி முகாம்

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நன்னிலம், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட வாக்குச்சாவடிகளில் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி முகாம் நேற்று நடந்தது. திருவாரூர் தொகுதி வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் வேலுடையார் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.

முகாமில் வாக்குச்சாவடி மையங்களில் கடைப்பிடிக்க வேண்டிய தேர்தல் நடைமுறைகள், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை கையாளும் முறைகள் குறித்து அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. முகாமை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான மதிவாணன் கலந்து கொண்டு பார்வையிட்டார். அப்போது வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான உறுதிமொழி வாசிக்கப்பட்டு அனைத்து அலுவலர்களும் ஏற்றுக்கொண்டனர். பின்னர் கலெக்டர் மதிவாணன் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

1,152 வாக்குச்சாவடிகள்

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளில் 1,152 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் ஒரு தலைமை அலுவலரும், 3 வாக்குச்சாவடி அலுவலர்களும் பணியில் அமர்த்தப்பட உள்ளனர். மேலும் 1,200-க்கு மேல் வாக்காளர்கள் உள்ள வாக்குச்சாவடிகளில் கூடுதலாக வாக்குச்சாவடி அலுவலர் ஒருவரும் நியமிக்கப்பட உள்ளார்.

திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் 1,378 வாக்குச்சாவடி அலுவலர்களும், நன்னிலம் சட்டமன்ற தொகுதியில் 1,582 வாக்குச்சாவடி அலுவலர்களும், மன்னார்குடி சட்டமன்ற தொகுதியில் 1,359 வாக்குச்சாவடி அலுவலர்களும், திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் 1,267 வாக்குச்சாவடி அலுவலர்களும் என மொத்தம் 5,586 வாக்குச்சாவடி அலுவலர்கள் பணியில் ஈடுபடுகின்றனர். தேர்தல் பணியாளர்கள் தபால் வாக்களிக்க வசதியாக படிவம் 12 அந்தந்த தேர்தல் நடத்தும் அலுலர்களால் வழங்குவற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் சட்டமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துமீனாட்சி(திருவாரூர்), செல்வசுரபி (மன்னார்குடி), நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் அழகிரிசாமி, மாவட்ட வருவாய் அலுவலர் நில எடுப்பு(தேசிய நெடுஞ்சாலை) மணிமேகலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மன்னார்குடி

மன்னார்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளில் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி முகாம் மன்னார்குடியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நடந்தது. இந்த பயிற்சி முகாமை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான மதிவாணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதைப்போல நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளில் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான முதல் கட்ட பயிற்சி முகாம் குடவாசலை அடுத்த மஞ்சக்குடியில் உள்ள தனியார் கல்லூரியில் நடந்தது. முகாமில் நன்னிலம் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அசோகன் கலந்து கொண்டு பல்வேறு தேர்தல் பணிகள் குறித்த கேள்விகளுக்கு பதில் அளித்தார். வீடியோ மூலம் தேர்தல் பணிகள் குறித்து முழு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் விஜயலட்சுமி, திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) ஸ்ரீலேகா, தாசில்தார்கள் தங்கமணி, கண்ணன், ராஜகணேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Sunday, 24 April 2016

பண பரிவர்த்தனைகளை கண்காணிக்க வேண்டும் மத்திய தேர்தல் சிறப்பு பார்வையாளர் பேச்சு




தனியார் மற்றும் அரசு வங்கிகளில் நடைபெறும் பண பரிவர்த்தனைகளை கண்காணிக்க வேண்டும் என்று மத்திய அரசு தேர்தல் சிறப்பு பார்வையாளர் கூறினார்.

ஆய்வு கூட்டம்

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சட்டமன்ற தேர்தல் தொடர்பாக முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான மதிவாணன் முன்னிலை வகித்தார். மத்திய தேர்தல் சிறப்பு பார்வையாளர் சி.வி.ஆனந்த் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

டாஸ்மாக் கடைகளில் மொத்தமாக மது விற்பனை நடைபெறுகிறதா? என கண்காணிக்க வேண்டும். டாஸ்மாக்கில் மது விற்பனை அதிகரித்தால், அதற்கு காரணம் குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த 3 மாத விற்பனை விவரங்களை ஒப்பிட்டு பார்க்க வேண்டும். கடந்த மாதத்தை விட விற்பனை அதிகமாகாமல் நெறிப்படுத்த வேண்டும். மேலும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கி கடன்கள் வழங்கப்படுகிறதா எனவும், தனியார் வங்கிகள் மற்றும் அரசு வங்கிகளில் அன்றாட பண பரிவர்த்தனைகளையும் கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பறக்கும் படை குழுக்கள்

கூட்டத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள பறக்கும் படை குழுக்கள் குறித்தும், இதுவரை கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் பொருட்கள் குறித்தும் மத்திய தேர்தல் சிறப்பு பார்வையாளர் சி.வி.ஆனந்த் கேட்டறிந்தார். பின்னர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தேர்தல் கட்டுப்பாட்டு மையத்தை பார்வையிட்டு இதுவரை பெறப்பட்ட புகார்கள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார்.

கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயசந்திரன், கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் மோகன்ராஜ் மற்றும் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Saturday, 23 April 2016

தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது; முதல் நாளில் 82 பேர் மனுதாக்கல்


234 உறுப்பினர்களை கொண்ட தமிழக சட்டசபைக்கு மே 16-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

மனு தாக்கல் தொடங்கியது

வாக்குப்பதிவு 16-ந் தேதி காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறும் என்றும், இந்த தேர்தலுக்கு வாக்குப்பதிவு நேரம் ஒரு மணி நேரம் நீட்டிக்கப்பட்டு இருப்பதாகவும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி அறிவித்து உள்ளார்.

சட்டசபை தேர்தலுக்கான அறிவிக்கையை தேர்தல் கமிஷன் நேற்று வெளியிட்டது. இதைத்தொடர்ந்து நேற்று வேட்புமனு தாக்கல் தொடங்கியது.

82 பேர் மனு தாக்கல்

முதல் நாளான நேற்று பெரும்பாலும் சுயேச்சை வேட்பாளர்களும், சில சிறிய கட்சிகளின் வேட்பாளர்களும் மனு தாக்கல் செய்தனர். சில தொகுதிகளில் தி.மு.க. வேட்பாளர்களும் தங்கள் வேட்புமனுவை தாக்கல் செய்தனர். தமிழகம் முழுவதும் நேற்று முதல் நாளில் 7 பெண்கள் உள்பட மொத்தம் 82 பேர் மனு தாக்கல் செய்தனர். இவர்களில் ஒரு சிலர் ஒன்றுக்கு மேற்பட்ட மனுக்களை தாக்கல் செய்துள்ளதாக தெரிகிறது.

காஞ்சீபுரம் தொகுதியில் போட்டியிட காந்திய மக்கள் இயக்கத்தின் கொள்கைபரப்பு செயலாளர் தினகரன் என்ற தர்ம தினகரன் தேர்தல் அதிகாரியும், காஞ்சீபுரம் சப்-கலெக்டருமான அருண் தம்புராஜிடம் நேற்று மனு தாக்கல் செய்தார்.

தி.மு.க. வேட்பாளர்கள்

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் (தனி) தொகுதி தி.மு.க. வேட்பாளர் அன்புமணி கணேசன், பாளையங்கோட்டை தொகுதி தி.மு.க. வேட்பாளர் டி.பி.எம். மைதீன்கான், ஈரோடு மேற்கு தொகுதி தி.மு.க. வேட்பாளர் சு.முத்துசாமி ஆகியோர் நேற்று தங்கள் வேட்புமனுக் களை தேர்தல் அதிகாரிகளிடம் தாக்கல் செய்தனர்.

நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பாளரும், பச்சை தமிழகம் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சுப.உதயகுமார், கடையநல்லூர் தொகுதியில் எஸ்.டி.பி.ஐ. கட்சி வேட்பாளர் ஜாபர் அலி ஆகியோர் நேற்று தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

பாரதீய ஜனதா

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தொகுதி பாரதீய ஜனதா வேட்பாளர் செல்வராஜ், கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் தொகுதி பாரதீய ஜனதா வேட்பாளர் எஸ்.ஷீபா பிரசாத், விளவங்கோடு தொகுதி பாரதீய ஜனதா வேட்பாளர் சி.தர்மராஜ் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்

இதேபோல் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் ஆர்.நந்தகுமார், சேலம் மாவட்டம் ஏற்காடு (தனி) தொகுதி பாரதீய ஜனதா வேட்பாளர் பொன்ராசு ஆகியோர் தங்கள் வேட்புமனுக் களை தாக்கல் செய்தனர்.

திருப்பூர் வடக்கு தொகுதியில் காந்திய மக்கள் இயக்கத்தின் வேட்பாளர் ஏ.எஸ்.கிருஷ்ணமூர்த்தி மனு தாக்கல் செய்தார். தேனி மாவட்டம் கம்பம் தொகுதியில் எஸ்.டி.பி.ஐ. கட்சி வேட்பாளர் ரபீக் அகமது மனு தாக்கல் செய்தார்.

மாட்டு வண்டியில் வந்த வேட்பாளர்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஐந்து கோவிலான் மாட்டு வண்டியில் வந்து தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

கடலூர் மாவட்டம் புவனகிரி தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரத்தினவேல் மனு தாக்கல் செய்தார். விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் தொகுதியில் பகுஜன் சமாஜ் வேட்பாளர் மனு தாக்கல் செய்தார்.

தஞ்சை மாவட்டம் பாபநாசம் தொகுதியில் எஸ்.டி.பி.ஐ. கட்சி வேட்பாளர் முகமது பாரூக் வேட்புமனு தாக்கல் செய்தார்.

சேலம் மாவட்டம் மேட்டூர் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட ‘தேர்தல் மன்னன்’ பத்மராஜன் மனு தாக்கல் செய்தார்.

வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட மனிதன் என்பவர் பின்னோக்கி நடந்து வந்து மனு தாக்கல் செய்தார்.

இன்றும், நாளையும் விடுமுறை

இன்று (சனிக்கிழமை) நான்காவது சனிக்கிழமை என்பதால் வங்கிகளுக்கு விடுமுறை ஆகும். நாளை ஞாயிற்றுக்கிழமை ஆகும். எனவே இன்றும், நாளையும் வேட்புமனு தாக்கல் செய்ய முடியாது. இனி திங்கட்கிழமைதான் மனு தாக்கல் செய்ய முடியும்.

வேட்புமனு தாக்கல் செய்ய வருகிற 29-ந் தேதி (வெள்ளிக்கிழமை) கடைசி நாள் ஆகும். வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை 30-ந் தேதி நடைபெறும். போட்டியில் இருந்து விலக விரும்புவோர் தங்கள் மனுக்களை வாபஸ் பெற மே 2-ந் தேதி கடைசி நாள். அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். 

Friday, 22 April 2016

திருவாரூரில் சுட்டெரிக்கும் வெயில் நுங்கு, இளநீர் விற்பனை அமோகம்


திருவாரூரில் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் நுங்கு, இளநீர் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. 

சுட்டெரிக்கும் வெயில்

திருவாரூரில் இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே வெயில் வாட்டி வதைக்க தொடங்கி விட்டது. தற்போது கோடை காலம் தொடங்கி விட்ட நிலையில், நாளுக்கு நாள் வெயிலின் அளவு அதிகரித்து கொண்டே செல்கிறது. சுட்டெரிக்கும் வெயிலால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். நாள்தோறும் 95 டிகிரிக்கும் அதிகமாக வாட்டி வதைக்கும் வெயிலின் தாக்கத்தை சமாளிக்க பொதுமக்கள் குளிர்பானங்களையும், இயற்கையான நீர் ஆகாரங்களையும் நாடி செல்கின்றனர். இதில் வேதி பொருட்கள் கலந்த குளிர்பானங்களை பெரும்பாலானவர்கள் தவிர்த்து வருகிறார்கள். இதனால் பனை நுங்கு, இளநீர் போன்ற இயற்கை நீர் ஆகாரங்களுக்கு கிராக்கி அதிகரித்து உள்ளது.

உரத்தின் தேவை இல்லாமலேயே வளரும் தன்மை கொண்டது பனை மரம். அத்தகைய பனை மரத்தில் இருந்து கிடைக்கும் நுங்கில் சுண்ணாம்பு, கால்சியம், புரோட்டின் சத்துகள் நிறைந்திருக்கின்றன. அதேபோல இளநீரும் உடலுக்கு குளிர்ச்சி தரும். கோடை காலத்தில் உடல் சூட்டை தணித்து, பக்க விளைவுகளை ஏற்படுத்தாத உணவு பொருளாக விளங்குவதால் திருவாரூரில் நுங்கு, இளநீர் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.

விற்பனை அதிகரிப்பு

திருவாரூர் நகர பகுதிகளில் நுங்கு, இளநீர் கடைகள் ஆங்காங்கே புதிதாக முளைத்திருக்கின்றன. இதுபற்றி நுங்கு, இளநீர் வியாபாரிகள் கூறியதாவது:-

கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க உதவும் உணவு பொருட்களாக இளநீரும், நுங்கும் விளங்குகின்றன. திருவாரூர் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பனை மரம் நிறைந்து காணப்படுகிறது. இவற்றில் இருந்து தேவையான அளவு நுங்கை வெட்டி விற்பனை செய்து வருகிறோம். வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், கடந்த சில நாட்களாக திருவாரூரில் நுங்கு, இளநீர் விற்பனை அதிகரித்து இருக்கிறது. நுங்கு 5 சுளைகள் ரூ.10 வீதம் விற்பனை செய்து வருகிறோம்.

இவ்வாறு வியாபாரிகள் கூறினர். 

Thursday, 21 April 2016

திருவாரூர் தொகுதியில் இன்றுவரை உள்ள வேட்பாளர்கள்

திருவாரூர் தொகுதியில்  இன்றுவரை அறிவிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின்  வேட்பாளர்கள்  விபரம் :

மு கருணாநிதி - திமுக,
A N R பன்னீர்செல்வம் - அஇஅதிமுக,
P S மாசிலாமணி -இ.கம்யூ,
இரா. சிவகுமார் -பாமக ,
ரெங்கதாஸ் - பாஜக ,
தென்றல் சந்திரசேகர்  - நாம் தமிழர் .

#TNElections2016  #ac168thiruvarur  #tiruvarur

நமதூர் மௌத் அறிவிப்பு 21/04/2016

நமதூர் மேலத்தெரு ம மு ஜெஹபர் சே க் அலாவுதீன் அவர்களின் மனைவியும் அமீருதீன் அன்சாரி மற்றும் சலாவுதீன் இவர்களின் தாயாருமான சுல்தானி அம்மா சாஹிபா அவர்கள் மௌத் .

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா 21/04/2016 அன்று வியாழன் மாலை வெள்ளி இரவு 6.30 மணிக்கு மேலதெரு ஜாமியுள் மஸ்ஜித் பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்ய படுகிறது .

Wednesday, 20 April 2016

TNElections2016 சட்டமன்ற தேர்தலும் இஸ்லாமியர்கள் வாக்குவங்கி .


2016 ம் ஆண்டு ஏப்ரல் 4ம் தேதி துவங்கி மே 16ம் வரை தென் இந்திய மாநிலங்கள் கேரளா ,தமிழ்நாடு ,புதுச்சேரி  மற்றும் கிழக்கு மாநிலங்கள் அஸ்ஸாம்  மற்றும் மேற்கு வங்காளம்  ஆகியவை சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்டு இருக்கிறது.
இதில் அஸ்ஸாம் ,மேற்கு வங்காளம்  மற்றும் கேரளா ஆகிய மாநிலங்கள் முஸ்லிம் மக்கள் தொகை கணிசமான அளவில் இருக்கிறது.
    அஸ்ஸாம் மாநிலத்தில் மொத்த முஸ்லிம் மக்கட்தொகை 1,06,79,345 இது 34.2% சதவிதமாகும் . .
இந்த மாநிலத்தில் உள்ள சட்டபேரவை தொகுதிகள் 126 ஆகும் .இதில் முஸ்லிம்கள் 28 தொகுதிகள் பெற முடியும்
மேற்கு வங்காளம்  மாநிலத்தில் மொத்த முஸ்லிம் மக்கட்தொகை 2,46,54,825 இது 27.01% சதவிதமாகும் .
இந்த மாநிலத்தில் உள்ள சட்டபேரவை தொகுதிகள் 294 ஆகும்.இதில் முஸ்லிம்கள் 59 தொகுதிகள் பெற முடியும்
கேரளா மாநிலத்தில் மொத்த முஸ்லிம் மக்கட்தொகை 88,73,472  .இது 26.56 % சதவிதமாகும் .
இந்த மாநிலத்தில் உள்ள சட்டபேரவை தொகுதிகள் 140 ஆகும்.இதில் முஸ்லிம்கள் 36 தொகுதிகள் பெற முடியும் .

தமிழ்நாட்டு மாநிலத்தில் மொத்த முஸ்லிம் மக்கட்தொகை 42,29,479 .இது 5.86% சதவிதமாகும் .
இந்த மாநிலத்தில் உள்ள சட்டபேரவை தொகுதிகள் 234 ஆகும்.

புதுச்சேரி  மாநிலத்தில் மொத்த முஸ்லிம் மக்கட்தொகை 75,556.இது 6.05 % சதவிதமாகும் .
இந்த மாநிலத்தில் உள்ள சட்டபேரவை தொகுதிகள் 30 ஆகும்.

இவைகள் 2011 மக்கட்தொகை கணக்கெடுப்பு மூலமான தகவல் ஆகும் .

வெளிநாட்டு மௌத் அறிவிப்பு 20/04/2016

நமதூர் சின்னப்பள்ளிவாசல் தெரு துக்கான் வீட்டு ஜலீல் அவர்களின் மகனார் நூருல் அமீன் அவர்கள் சிங்கப்பூரில் மௌத் .

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

Tuesday, 19 April 2016

வேட்பாளர்களின் செலவுகளை கண்காணிக்க தேர்தல் பார்வையாளர்கள் இன்று வருகை


,2016, 6:00 AM IST


தமிழக சட்டசபை தேர்தல் மே மாதம் 16-ந்தேதி நடைபெறுகிறது.

தேர்தலுக்கான அனைத்து பணிகளும் முழுவீச்சில் நடந்து வருகிறது.

22-ந்தேதி மனு தாக்கல்

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் 22-ந்தேதி (வெள்ளிக்கிழமை) முதல் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம்.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி நேற்று சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

எஸ்.எம்.எஸ். அனுப்ப தடை

வாக்குப்பதிவு தினமான மே மாதம் 16-ந்தேதிக்கு 48 மணி நேரத்துக்கு முன்பாக ஒட்டு மொத்த எஸ்.எம்.எஸ்.களுக்கு (பல்க் எஸ்.எம்.எஸ்.) தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி மே மாதம் 14-ந்தேதி மாலை 6 மணி முதல் 48 மணி நேரத்துக்கு ஒட்டுமொத்தமாக எஸ்.எம்.எஸ்.களை அனுப்பக்கூடாது என்று செல்போன் நிறுவனங்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேபோல ஒட்டுமொத்தமாக வாய்ஸ் எஸ்.எம்.எஸ்.சும் அனுப்பக்கூடாது. அரசியல் கட்சியினர் ரேடியோ மூலம் பிரசாரமும் செய்யக்கூடாது.

பார்வையாளர்கள் இன்று வருகை

சட்டமன்ற தேர்தலையொட்டி, தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு வரும் தேர்தல் பார்வையாளர்களுக்கு டெல்லியில் இன்று (நேற்று) ஒருநாள் பயிற்சி அளிக்கப்படுகிறது.

தமிழகத்துக்கு முதல் கட்டமாக செலவின பார்வையாளர்கள் 12 பேர் நாளை(இன்று) தமிழகம் வருகிறார்கள். ஐ.ஆர்.எஸ். அதிகாரிகளான இவர்கள் தமிழகத்தில் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களின் செலவினங்களை தீவிரமாக கண்காணிப்பார்கள். அதன் பின்னர் மற்ற பார்வையாளர்கள் படிப்படியாக தமிழகம் வருகிறார்கள்.

அதிகாரிகள் மாற்றம்

தற்போது அரசு அதிகாரிகள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளனர். அவர்களை மாற்ற வேண்டுமென்றால் அரசிடம் கேட்டுத்தான் மாற்ற முடியும். ஆனால் வேட்புமனு தாக்கல் தொடங்கும் தினமான 22-ந் தேதி முதல், தமிழக அரசின் அனைத்து அதிகாரிகளும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் வந்து விடுவார்கள்.

அதற்கு பிறகு அவர்களை தேர்தல் ஆணையம் மாற்ற எந்த ஆட்சேபனையும் இருக்காது. எனவே அரசு அதிகாரிகளை மாற்றுவது பற்றி இந்திய தலைமை தேர்தல் ஆணையம் உரிய உத்தரவை பிறப்பிக்கும்.

6 மாதம் சிறை

வேட்பு மனு தாக்கல் செய்யும்போது வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுவில் சரியான தகவலை அளிக்க வேண்டும். குறிப்பாக சொத்து மதிப்பு குறித்து வேட்பாளர்கள் தெரிவிக்கும் தகவல் உடனடியாக வருமானவரித்துறை மூலம் சரி பார்க்கப்படும். அந்த தகவல்கள் தவறாக இருந்தால் வேட்பாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும்.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 125-ஏ பிரிவின்படி குற்றம் நிரூபிக்கப்பட்டால் 6 மாதம் வரை சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். இது தவிர மற்ற தகவல்களையும் வேட்பாளர்கள் சரியாக அளிக்க வேண்டும். வேட்பாளர்களின் தேர்தல் செலவினங்களும் ஆன்லைனில் பதிவேற்றப்படும். அவற்றை செலவின பார்வையாளர்கள் உடனுக்குடன் ஆய்வு செய்வார்கள்.

சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அந்தந்த தொகுதி தேர்தல் அதிகாரிகளிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்ய வேண்டும். இதற்காக தேர்தல் அதிகாரிகளின் அலுவலகங்களும் அந்தந்த தொகுதிக்குள் அமைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இது வேட்பாளர்களுக்கு உதவியாக இருக்கும். மேலும் தேர்தல் அதிகாரிகள் பணி நேரத்தில் அவரவர் அலுவலகத்தில் கண்டிப்பாக இருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கூடுதல்வாக்குச்சாவடிகள்

தமிழக சட்டசபைக்காக மொத்தம் 65 ஆயிரத்து 616 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன. தற்போது தங்கள் பகுதியில் கூடுதலாக வாக்குச்சாவடிகள் அமைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வருகின்றன.

அவற்றை பரிசீலித்து தேவைப்பட்டால் கூடுதல் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும். எத்தனை வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன என்ற விவரம் வேட்பு மனு தாக்கல் தினத்தன்று இறுதியாக தெரிவிக்கப்படும்.

ஏஜெண்டுகள்

ஓட்டுப்பதிவின்போது வாக்குச்சாவடிகளில் அரசியல் கட்சிகள் சார்பில் ஏஜெண்டுகள் நியமிக்கப்பட்டிருப்பார்கள். அந்த ஏஜெண்டுகள் வாக்குப்பதிவு தினத்தன்று மதியம் 3 மணிக்கு பிறகு வாக்குச்சாவடியை விட்டு வெளியேறவோ அல்லது அவருக்கு பதில் வேறு ஒருவரை மாற்றி விட்டு செல்வதற்கோ தேர்தல் ஆணையம் அனுமதிக்காது.

இவ்வாறு அவர் கூறினார். 

Monday, 18 April 2016

ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு விரைவில் ரூ10,000 குறைந்தபட்ச ஊதியம்

ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.10,000 ஊதியம் அளிக்கும் வகையில் மத்திய அரசு விரைவில் நிர்வாக உத்தரவைப் பிறப்பிக்கும் என்று மத்திய தொழிளாளர், வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா கூறியுள்ளார்.
ஹைதராபாதில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:
தொழிலாளர் சட்டத்தில் பல்வேறு திருத்தங்களைக் கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. முக்கியமாக குறைந்தபட்ச ஊதியத்தை அனைவருக்கும் சமமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.10,000 ஊதியம் அளிக்க விரைவில் நிர்வாக உத்தரவை மத்திய அரசு பிறப்பிக்க இருக்கிறது.
இந்தக் குறைந்தபட்ச ஊதியத்தை நாடாளுமன்றத்தில் சட்டமாக நிறைவேற்ற எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்காது. எனவே, தொழிலாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அதனை நிர்வாக உத்தரவாக நடைமுறைப்படுத்த அரசு முடிவெடுத்துள்ளது.
இது தொடர்பான விதிகளை வகுத்து, ஒப்புதலுக்காக சட்ட அமைச்சகத்துக்கு அனுப்பியுள்ளோம். விரைவில் இது தொடர்பான அறிவிக்கை வெளியாகும். அதைத் தொடர்ந்து மாநில அரசுகள் புதிய முடிவை அமல்படுத்தும்.
மொத்தவிலைக் குறியீட்டு எண், அகவிலைப் படி ஆகியவற்றைக் கவனத்தில்கொண்டு குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது. அதன் அடிப்படையிலேயே மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது என்றார் அவர்.

Sunday, 17 April 2016

5 நகரங்களில் 104 டிகிரி வெயில்: தமிழகம், புதுச்சேரிக்கு வெப்ப அலை எச்சரிக்கை ஏதுமில்லை


தமிழகத்தில் திருச்சி, சேலம் உள்பட 5 நகரங்களில் சனிக்கிழமை அதிகபட்சமாக 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிகழாண்டு மார்ச் மாதம் முதலே சென்னை, மதுரை, பாளையங்கோட்டை, கரூர் பரமத்தி, கோவை, சேலம், தருமபுரி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வந்தது.பல நகரங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெயில் பதிவாகியது.
இந்த நிலையில், மார்ச் மாதத்தின் இறுதி நாள்களில் வெப்பத்தின் தாக்கம் குறைந்து ஓரிரு மாவட்டங்களில் மழை பெய்தது.அதைத் தொடர்ந்து, மீண்டும் வெப்பத்தின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. தமிழகம், ஓடிசா, ஆந்திரம், ராயலசீமா, தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில், வெப்பத்துடன் கூடிய அனல் காற்று வீசி வருகிறது.
தமிழகம், புதுச்சேரி உள்பட ஓரிரு மாநிலங்களுக்கு வெப்ப அலையின் தாக்கம் அதிகமாக இருக்கும் என, வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதன்படி, 107 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பம் நிலவியது.வெப்ப அலை எச்சரிக்கை இல்லை...சனிக்கிழமை மாலை நிலவரப்படி, கரூர் பரமத்தி, திருச்சி, சேலம், தருமபுரி உள்பட 5 மாவட்டங்களில் அதிகபட்சமாக 104 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பம் நிலவியது. அதற்கு அடுத்தப்படியாக வேலூர், மதுரை, பாளையங்கோட்டை ஆகிய நகரங்களில் 100  டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் மேல் வெப்பம் நிலவியது.
அடுத்து வரும் நாள்களுக்கு பெரும்பாலான நகரங்களில் வறண்ட வானிலை நிலவும். சென்னையில் வானம் ஒரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். தமிழகம், புதுச்சேரிக்கு வெப்ப அலை எச்சரிக்கை ஏதுமில்லை. அதிகப்பட்ச வெப்பநிலை 99 டிகிரி ஃபாரன்ஹீட் வரை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சனிக்கிழமை பதிவான வெயில் நிலவரம் (டிகிரி ஃபாரன்ஹீட்டில்)கரூர் பரமத்தி, தருமபுரி, திருப்பத்தூர், திருச்சி, சேலம்  104வேலூர், மதுரை 103பாளையங்கோட்டை 102சென்னை மீனம்பாக்கம், கோவை 99

Saturday, 16 April 2016

வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: வெளியே செல்வதைத் தவிர்க்கவும்: திருவாரூர் ஆட்சியர் வேண்டுகோள்


வெயிலின் தாக்கம் வழக்கத்தைவிட அதிகமாக உள்ளதால், பொதுமக்கள் நண்பகல் 12 முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை கூடியவரை தவிர்க்க வேண்டுமென திருவாரூர் மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. எனவே, பொதுமக்கள் நண்பகல் 12 முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதைத் தவிர்ப்பது நல்லது. தினமும் பருகும் குடி தண்ணீரை விட கூடுதலாகப் பருக வேண்டும். இரவு நேரங்களில் வீட்டின் ஜன்னல் கதவுகளை திறந்து வைத்து வெயிலின் தாக்கத்தைக் குறைத்துக் கொள்ளவும். பொது மக்கள் தங்களது கால்நடைகளை கொட்டகையில் வைத்து பராமரித்துக் கொள்ள வேண்டும்.
மக்கள் உடுத்தும் ஆடைகள் மிக எடை குறைந்த இளம் வண்ணங்கள் உள்ள சட்டைகள் தளர்வாகவுள்ள ஆடைகள், காட்டன் சட்டைகள், குடைகள், ஷு மற்றும் காலணிகள் அணிந்து செல்ல வேண்டும்.
பணி நிமித்தமாக வெளியில் செல்லும்போது ஈரமான துணியை தலை, கழுத்து, முகம் மற்றும் மூட்டுகளில் படும்படியாக போட்டுக் கொள்ளவும்.  டீ, காபி, கார்போனேட்டம் குளிர்பானங்களைத் தவிர்க்க வேண்டும்.
குழந்தைகள் மற்றும் வீட்டு பிராணிகளை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனத்தில் விட்டுச் செல்ல வேண்டாம். குளுக்கோஸ் பவுடர், லெசி, நீராகாரம், எலுமிச்சை சாறு கலந்த தண்ணீர், தயிர் மற்றும் இதர வெயிலுக்கு ஏற்ற பானங்களை அவ்வப்போது பருகிக் கொள்ளலாம். உடல் மிகவும் சோர்வு மற்றும் இதர வெயில் தாக்கத்தினால் ஏற்பட்டுள்ள பிரச்னைகளை உடனடியாக மருத்துவரிடம் சென்று காண்பிக்க வேண்டும்.

திருவாரூரில் இருந்து பொதுவினியோக திட்டத்துக்கு 1,200 டன் அரிசி சரக்கு ரெயிலில் அனுப்பிவைக்கப்பட்டது


ரல் 16,2016, 4:30 AM IST
திருவாரூரில் இருந்து சேலத்திற்கு பொது வினியோக திட்டத்திற்காக சரக்கு ரெயிலில் 1,200 டன் அரிசி அனுப்பி வைக்கப்பட்டது.

1,200 டன் அரிசி

திருவாரூர் மாவட்டத்தில் குறுவை, சம்பா சாகுபடி பணிகள் முடிவடைந்தது. விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் பல மாவட்டங்களுக்கு அரவைக்காக அனுப்பி வைக்கப்பட்டன. மேலும் திருவாரூர் மாவட்டத்தில் அரசு அங்கீகரிக்கப்பட்ட அரவை மில்லுக்கு நெல் அனுப்பி வைக்கப்பட்டு அரிசி மூட்டைகளாக தயாரானது. இந்த அரிசி மூட்டைகள் பொது வினியோக திட்டத்திற்காக பல்வேறு மாவட்டங்களுக்கு ரெயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றது. இதனை தொடர்ந்து நேற்று 1,200 டன் அரிசி மூட்டைகள் 110 லாரிகள் மூலம் திருவாரூர் ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. அதனை தொடர்ந்து லாரிகளில் இருந்து அரிசி மூட்டைகளை தொழிலாளர்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த சரக்கு ரெயில் பெட்டிகளில் ஏற்றினர். பின்னர் 21 பெட்டிகளில் ஏற்றப்பட்ட 1,200 டன் பொதுரக அரிசி மூட்டைகள் திருவாரூரில் இருந்து சேலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. 

Friday, 15 April 2016

திருவாரூர் மாவட்டத்தில் 8,731 பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம்

திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, நன்னிலம் ஆகிய பேரவைத்  தொகுதிகளில் 8,731 பேர் இறந்ததையடுத்து, அவர்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான எம். மதிவாணன் தெரிவித்தார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளிடம் துணை வாக்காளர் பட்டியலை வெளியிட்டு, அவர் பேசியது:
தமிழக பேரவைத் தேர்தல் மே மாதம் நடைபெறவுள்ளதையடுத்து தேர்தல் ஆணையம் தேர்தலை சுமுகமாக  நடத்தவும், இம்முறை தமிழகத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.
இப்பணிகளின் தொடர்ச்சியாக வாக்காளர்  பட்டியலில் போலி வாக்காளர்களை நீக்கும் பணியை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு கடந்த 20.1.2016 அன்று இறுதிப் பட்டியலை வெளியிட்டது. இதையடுத்து கடந்த பிப்ரவரி 15 முதல் 29.2.16 வரை தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் இறந்தவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கும் பணியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு, பிப்ரவரி 29-ஆம் தேதி தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் அலுவலக வலைதளத்தில் இதன் விவரம் வெளியிடப்பட்டுள்ளன.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 4 பேரவைத் தொகுதிகளில் 8,731 பேர் இறந்ததையடுத்து, அவர்களின் பெயர் நீக்கப்பட்டதின் விவரத்தின் அச்சுப்பிரதி அரசியல் கட்சி பிரதிநிதிகளிடம் புதன்கிழமை வழங்கப்பட்டன.
மாவட்டத்தில் இறந்தவர்களின் பெயர் நீக்கப்பட்ட பிறகு 4 பேரைவைத் தொகுதியில் மொத்தம் 9,60,110 வாக்காளர்கள் உள்ளனர் என்றார் மதிவாணன்.
நிகழ்ச்சியில், மாவட்டக் காவல்  கண்காணிப்பாளர் த. ஜெயச்சந்திரன், மாவட்ட திமுக செயலர் பூண்டி கே.  கலைவாணன், நகர காங்கிரஸ் தலைவர்  சம்பத், நகராட்சித் தலைவர் வெ. ரவிசந்திரன் (அதிமுக) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Thursday, 14 April 2016

ஒ.என்.ஜி.சி. நிறுவனம் புதிய ஆழ்குழாய் அமைக்கும் பணி தடுத்து நிறுத்தம் வாகனங்களை கிராம மக்கள் சிறைபிடித்தனர்



திருவாரூர் அருகே ஒ.என்.ஜி.சி. நிறுவனம் புதிய ஆழ்குழாய் அமைக்கும் பணியை கிராம மக்கள் தடுத்து நிறுத்தினர். மேலும் வாகனங்களை சிறைபிடித்தனர். 

சாலைமறியல்

காவிரி டெல்டா மாவட்டங்களான திருவாரூர், நாகை, தஞ்சை ஆகிய 3 மாவட்டங்களில் ஒ.என்.ஜி.சி. சார்பில் பூமிக்கு அடியில் ஆழ்குழாய் அமைத்து ஆயில், கியாஸ் எடுத்து வருகிறது. இதில் திருவாரூர் மாவட்டத்தில் அதிகமாக ஆழ்குழாய் அமைக்கப்பட்டு உள்ளது. ஒ.என்.ஜி.சி. நிறுவனம் எண்ணெய் எடுத்து செல்லும் குழாய் அடிக்கடி சேதம் அடைந்து விளைநிலங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றது. இதனால் ஒ.என்.ஜி.சி. நிறுவனம் காவிரி டெல்டா மாவட்டங்களை விட்டு வெளியேற்ற வேண்டும் என விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் திருவாரூர் அருகே உள்ள பெருந்தரக்¢குடி ஊராட்சி கடலங்குடியில் பூமியில் ஆழ்குழாய் அமைத்து பல ஆண்டுகளாக கச்சா எண்ணையை எடுத்து வருகிறது. இந்த இடத்தின் அருகில் புதிதாக ஆழ்குழாய் அமைக்க திட்டமிட்டு, அதற்கு தேவையான கருவிகளை லாரிகள் மூலம் கொண்டு வரப்பட்டது. இதனால் விவசாய நிலங்கள் முற்றிலும் பாதிக்கப்படும் என்பதால் அப்பகுதி கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டதிற்கு மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன், ஊராட்சி மன்ற தலைவர் உமாசங்கர், தி.மு.க. பிரமுகர் ராஜேந்திரன் தலைமையில் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது விளைநிலங்களை விட்டு ஒ.என்.ஜி.சி. நிறுவனத்தை வெளியேறிட வேண்டும். புதிய ஆழ்குழாய் அமைக்க கூடாது என்கிற கோரிக்கை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வாகனங்கள் சிறைபிடிப்பு

தகவல் அறிந்த தாசில்தார் தங்கமணி, போலீஸ் துணை சூப்பிரண்டு சுகுமார், இன்ஸ்பெக்டர் சுவாமிநாதன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் தற்காலிகமாக பணிகளை நிறுத்தி வைக்கப்படும் எனவும், தேர்தல் முடிந்தவுடன் மாவட்ட நிர்வாகத்துடன் பேசி உரிய தீர்வு செய்யப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். அதனை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

இதனை தொடர்ந்து கிராம மக்கள் கடலங்குடியில் இருந்து ஒ.என்.ஜி.சி. இடத்திற்கு செல்லும் சாலையின் குறுக்கே மூங்கில் கம்புகளை வைத்து தடுப்பு அமைத்தனர். இதனால் உள்ளே சென்ற வாகனங்கள் வெளிவர முடியாமல் சிறைபிடித்தனர். மேலும் வெளியில் இருந்து வாகனங்கள் உள்ளே செல்ல முடியாத சுழ்நிலை உருவானது. இதனால் அந்த பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டது. 

Wednesday, 13 April 2016

tnelections2016:சட்டமன்ற தேர்தலில் திருவாரூர் தொகுதியில் மீண்டும் கருணாநிதி போட்டி



:
சட்டமன்ற தேர்தலில் திருவாரூர் தொகுதியில் மீண்டும் தி.மு.க. தலைவர் கருணாநிதி போட்டியிடுகிறார். வரும் 25-ந் தேதி அவர் வேட்புமனு தாக்கல் செய்கிறார். 

5 முறை முதல்-அமைச்சர்

தமிழ்நாடு முதல்-அமைச்சராக 5 முறை இருந்தவர் என்ற சிறப்பை பெற்றவர், தி.மு.க. தலைவர் கருணாநிதி. இவர் 1957-ம் ஆண்டு முதல் முறையாக குளித்தலை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டசபைக்கு வந்தவர். தொடர்ந்து, 1962-ம் ஆண்டு தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட்டார். 

பின்னர், 1967-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் சென்னையில் உள்ள சைதாப்பேட்டை தொகுதியில் கருணாநிதி போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1971-ம் ஆண்டு அதே சைதாப்பேட்டை தொகுதியிலும், 1977 மற்றும் 1980-ம் ஆண்டுகளில் அண்ணாநகர் தொகுதியிலும், 1989 மற்றும் 1991-ம் ஆண்டுகளில் துறைமுகம் தொகுதியிலும், 1996, 2001, 2006-ம் ஆண்டுகளில் சேப்பாக்கம் தொகுதியிலும் போட்டியிட்டு கருணாநிதி தொடர் வெற்றி பெற்றார். 

திருவாரூரில் மீண்டும் போட்டி

கடந்த 44 ஆண்டுகளாக சென்னையில் உள்ள தொகுதியிலேயே போட்டியிட்ட கருணாநிதி, கடந்த சட்டமன்ற தேர்தலில் (2011-ம் ஆண்டு) திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 

சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிட்டு தொடர்ச்சியாக 12 வெற்றிகளை பெற்றுள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதி, நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலிலும் திருவாரூர் தொகுதியிலேயே மீண்டும் போட்டியிட இருக்கிறார். 

இதை, அவரது தேர்தல் சுற்றுப்பயண அறிக்கை நேற்று உறுதிப்படுத்தியது. திருவாரூரில் உள்ள திருக்குவளையில் தான் கருணாநிதி பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, 2-வது முறையாக தனது சொந்த தொகுதியில் அவர் களம் இறங்குகிறார். 

வேட்புமனு தாக்கல்

வரும் 25-ந் தேதி திருவாரூர் செல்லும் தி.மு.க. தலைவர் கருணாநிதி அன்று காலை வேட்புமனு தாக்கல் செய்கிறார். அன்று இரவு அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகிறார்.

Tuesday, 12 April 2016

தேர்தல் விழிப்புணர்வுக் கையெழுத்து இயக்கம் தொடக்கம்

திருவாரூர் பேருந்து நிலையத்தில் திங்கள்கிழமை தேர்தல் விழிப்புணர்வுக் கையெழுத்து இயக்கத்தை மத்திய தேர்தல் விழிப்புணர்வுப் பார்வையாளர் விஜய்குமார் தொடங்கி வைத்தார்.
திருவாரூர் பேருந்து நிலையத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில், சட்டப்பேரவைத் தேர்தல் விழிப்புணர்வு விடியோ படக்காட்சி திரையிடப்பட்டிருந்ததைப் பார்வையிட்டு, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் திரையிடப்பட வேண்டும் என அலுவலர்களிடம் அறிவுறுத்தினார்.
தொடர்ந்து புதுவாழ்வுத் திட்டத்தின் மூலம் தேர்தல் விழிப்புணர்வுக் கலைநிகழ்ச்சி மற்றும் பாரத் கல்விக் குழுமத்தின் சார்பில் மாணவர்கள் பங்கேற்ற தேர்தல் விழிப்புணர்வு சாகச நிகழ்ச்சிகளைப் பார்வையிட்டார்.
பேருந்து நிலையத்தில் மாணவ, மாணவிகள், பொதுமக்களிடம் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டுமென்பதை அறிவுறுத்தும் விதமாக கையெழுத்து இயக்கத்தை முதல் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார்.
இதையடுத்து, திருவாரூர் பேருந்து நிலையம் அருகில் நகராட்சி பிரிவு அலுவலகத்தில் வாக்காளர் சேவை மையத்தைப் பார்வையிட்டு, அதன் செயல்பாடுகள் குறித்து தேர்தல் நடத்தும் அலுவலரிடம் கேட்டறிந்தார்.
தொடர்ந்து பேருந்து நிலையத்தில் தேர்தல் விழிப்பர்வுத் துண்டுப்பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கி மே 16 ஆம் தேதி கட்டாயம் வாக்களிக்க வேண்டுமென அறிவுறுத்தினார்.

Monday, 11 April 2016

கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய "ஸ்மார்ட் ரேஷன் கார்டு'


    "ஸ்மார்ட் ரேஷன் கார்டு' என்னும் புதிய முயற்சியை சென்னை ராமாபுரத்திலுள்ள ஈஸ்வரி பொறியியல் கல்லூரி மாணவர்கள் தொடங்கியுள்ளனர்.
 இதுகுறித்து கல்லூரியின் கணினி அறிவியல் துறையின் தலைவர் டாக்டர் கே.எம். ஆனந்த்குமார் கூறியதாவது:
 ரேஷன் பொருட்களை விநியோகம் செய்வதில் உள்ள குளறுபடிகள், பிரச்னைகளை நீக்கும் விதமாக இந்த புதிய "ஸ்மார்ட் ரேஷன் கார்டு' திட்டத்தை எங்கள் மாணவர்கள் உருவாக்கியுள்ளனர்.
 வங்கி கிரெடிட் கார்டைப் போலவே இந்தக் கார்டில் பயனாளரின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் இடம்பெறும். இதைக் கொண்டு சென்று ரேஷன் கடைகளில் கொடுக்கும்போது அந்தந்த பொருட்கள் அவர்களுக்கு மட்டுமே கிடைக்கும்படி செய்யலாம். அவர் பெயரில் வேறு யாரும் பொருட்களை வாங்க முடியாது. இந்தப் புதிய திட்டம் நுகர்வோருக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எந்தத் தவறும் நிகழாது. வேறு யாரும் பொருட்களை வாங்க முடியாது. நுகர்வோருக்கும் நேரம் காலம் மீதமாகும் போன்ற நல்ல விஷயங்கள் இதில் உள்ளன.
 சமூகத்துக்குப் பயன்படும் வகையில் இந்தத் திட்டத்தை எங்களது பிரிவு மாணவர்கள் கார்த்திகேயன், கிரண் ராஜ், ஆனந்தன் ஆகியோர் உருவாக்கியுள்ளனர்.
 கல்லூரியின் தலைவர் டாக்டர் ஆர். சிவக்குமார், முதல்வர் டாக்டர் கே.எஸ். சீனிவாசன் ஆகியோரது வழிகாட்டுதலின் பேரில் திட்டத்தை உருவாக்கியுள்ளோம். 
 தமிழக அரசு இந்தத் திட்டத்தை எடுத்துச் செயல்படுத்தும்போது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சமுதாயத்துக்குத் தேவையான மிகவும் அவசியமான திட்டமாகும் இது.என்றார் அவர்.
 

Sunday, 10 April 2016

tiruvarur :தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார் அதிமுக வேட்பாளர் பன்னீர்செல்வம்

திருவாரூர் அதிமுக வேட்பாளர் ஏ.என்.ஆர். பன்னீர்செல்வம் சனிக்கிழமை பிரசாரத்தைத் தொடக்கினார்.




திருவாரூர் மாவட்டத்தில் அதிமுக சார்பில் திருவாரூர், நன்னிலம், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி ஆகிய 4 சட்டப் பேரவை தொகுதிகளுக்கு தேர்தல் அலுவலகம் சனிக்கிழமை திறக்கப்பட்டு பிரசாரம் தொடங்கப்பட்டது.
திருவாரூர் சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார்.
இதையொட்டி திருவாரூர் பனகல் சாலையில் சட்டப் பேரவைத் தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டது. அதைத் தொடாóந்து அங்கிருந்து வேட்பாளாó பன்னீர்செல்வம் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கினார்.
பனகல்சாலை, நேதாஜிசாலை, கடைவீதி, பேருந்து நிலையம் வரை மக்களைச் சந்தித்து இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்.
இதில் நகர செயலர் ஆர்.டி. மூர்த்தி, ஒன்றியச் செயலர் பி.கே.யூ. மணிகண்டன், நகராட்சித் தலைவர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

#tnelections2016 #ac168thiruvarur #tiruvarur

Saturday, 9 April 2016

திருவாரூர் மாவட்ட தேர்தல் விழிப்புணர்வுப் பார்வையாளர் இன்று வருகை


மத்திய தேர்தல் ஆணையத்தால் அனுப்பப்பட்டுள்ள தேர்தல் விழிப்புணர்வுப் பார்வையாளர் விஜயகுமார், திருவாரூர், நாகை மாவட்டங்களுக்கு சனிக்கிழமை (ஏப். 9) வருகிறார்.
18 வயது நிரம்பிய எந்த ஒரு இந்தியக் குடிமகனும் வாக்களிக்காமல் இருக்கக் கூடாது என்பதற்காக இந்திய தேர்தல் ஆணையம் 100 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற வேண்டுமென பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.
இதற்காக தேர்தல் ஆணையம் பிரசார ஊர்திகள், பிரசாரப் பாடல்கள், கலைநிகழ்ச்சிகள், பேரணிகள், ஊர்வலங்கள், வீடுகளில் அன்றாடம் பயன்படுத்தப்படும் காஸ் சிலிண்டர்கள், குடிநீர் கேன்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஒட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.
இந்த விழிப்புணர்வுப் பணிகள் எப்படி நடைபெற்றுள்ளது, இதில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரின் செயல்பாடுகள் எப்படி உள்ளது என்பதை ஆய்வு செய்வதற்காக இரு மாவட்டங்களுக்கு ஒரு தேர்தல் விழிப்புணர்வுப் பார்வையாளரை முதன்முறையாக மத்திய அரசின் சார்பில் அனுப்ப இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
அதன்படி, திருவாரூர், நாகை மாவட்டங்களுக்கு மத்திய அரசின் இந்திய ஆட்சிப் பணியாளர் தகுதியில் உள்ள விஜயகுமாரை, தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. வெள்ளிக்கிழமை சென்னை வந்த தேர்தல் விழிப்புணர்வுப் பார்வையாளர் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி மற்றும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களைச் சென்னையில் சந்தித்தார்.
தொடர்ந்து, சனிக்கிழமை 9-ஆம் தேதி காலை திருவாரூர் வரும் தேர்தல் விழிப்புணர்வுப் பார்வையாளர், மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்டத்தில் எவ்வளவு வாக்காளர்கள் உள்ளனர்.
அவர்கள் வாக்களிக்கக் கூடிய இடங்கள் எத்தனை உள்ளது. இதற்காக வாக்காளர்களிடம் எப்படிப்பட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பதை அனைத்து அரசுத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். மேலும், முதன்முறையாக அமைக்கப்பட்டுள்ள 15 பேர் கொண்ட தேர்தல் விழிப்புணர்வுக் குழுவினரிடம் கலந்தாலோசிக்கிறார்.
பின்னர், வாக்குச்சாவடி மையங்களுக்குச் சென்று அங்கு அடிப்படை வசதிகள் உள்ளதா என்பதை ஆய்வு செய்த பின்னர், நாகை மாவட்டத்துக்குச் சென்று ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக மாவட்ட நிர்வாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Friday, 8 April 2016

TNelections2016 : திருவாரூர் தொகுதி - பார்வை

தொகுதி பெயர்: திருவாரூர்


வரிசை எண்: 168
சிறப்புகள்: பண்டைய தமிழகத்தின் சோழ மண்டலத்தின் ஒரு பகுதியே திருவாரூர். கரிகாலன் கி.பி. 50 முதல் 95 வரை ஆண்டதாக வரலாற்று ஆசிரியர்களின் கருத்து.
கரிகாலனுக்கும் முற்பட்ட புராண காலச் சோழர்களான முசுகுந்தன், புறாவுக்காக தன் சதையை அறுத்துக் கொடுத்த சிபிச்சக்கரவர்த்தி, கன்றுக்காக மகனைக் கொன்ற மனுநீதிச்சோழன் மூவரும் வாழ்ந்த இடமாகக் கூறப்படும் இடம் திருவாரூர். திருவாரூரையும் தியாகராஜ சுவாமி கோயிலையும் பிரித்து வரலாறே எழுத முடியாது. காவிரி ஆற்றின் வளமான வண்டல் பகுதியை உள்ளடக்கியது திருவாரூர் சோழ அரசர்கள் முடிசூட்டிக் கொள்ளும் 5 ஊர்களுள் இதுவும் ஒன்று. (மற்ற ஊர்கள் காவிரிப்பூம்பட்டினம், உறையூர், செய்ஞலுர், கருவூர்).
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு பேரவைத் தொகுதிகளில் வாக்காளர் எண்ணிக்கையின் அடிப்படையில் திருவாரூர் தொகுதி 2-ஆவது இடத்தில் உள்ளது.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்: திருவாரூர் நகராட்சி முழுவதும் மட்டுமின்றி திருவாரூர் ஒன்றியத்துக்குள்பட்ட 34 ஊராட்சிகள், கூத்தாநல்லூர் நகராட்சி முழுவதும், மன்னார்குடி ஒன்றியத்தில் சில ஊராட்சிகளும், கோட்டூர் ஒன்றியத்தில் 5 ஊராட்சிகளும், கொரடாச்சேரி பேரூராட்சி முழுவதும் மட்டுமின்றி இந்த ஒன்றியத்தில் 5 ஊராட்சிகள் தவிர மற்ற ஊராட்சிகள் அனைத்தும் இத்தொகுதியில் அடங்கியுள்ளன.
கிராம ஊராட்சிகள்: குடவாசல் வட்டம் (பகுதி): காப்பணமங்கலம், அரசவனங்காடு, தீபங்குடி, கீரங்குடி, புலவநல்லூர், வடகண்டம், மணக்கால், எண்கண், காரையப்பாலையூர், நெய்குப்பை, கீழப்பாலையூர், உத்திரங்குடி, எலையூர், திருக்களம்பூர், செல்லூர், மேல் ஆதிச்சமங்கலம், அர்ப்பார், ஆய்க்குடி, அம்மையப்பன், திருக்கண்ணமங்கை, அகரதிருநல்லூர், காட்டூர், இளவங்கர்குடி, ஆனைவடபாதி, காவனூர், நட்டுவாக்குடி, அத்திசோழமங்கலம், கிருஷ்ணக்கோட்டகம், ஊர்க்குடி.
வாழவநல்லூர், புத்தூர், அபிவிருத்தீஸ்வரம், கமுககுடி, விஸ்வநாதபுரம், பெருமாள் அகரம், நாலில் ஒன்று, மேலதிருமதிக்குன்னம், தியாகராஜபுரம், குளிக்கரை, பெருத்தரக்குடி, தேவர்கண்டநல்லூர், கமலாபுரம், எருக்காட்டூர், பருத்தியூர், கண்கொடுத்தவனிதம், மேலராதாநல்லூர், திட்டாணிமுட்டம், விடயபுரம், முசிரியம், திருவிடைவாசல் மற்றும் களத்தூர் கிராமங்கள்.
நீடாமங்கலம் வட்டம் (பகுதி): வக்ரநல்லூர், சித்தனங்குடி, வெங்காரம்பேரையூர், புனவாசல், பூந்தாழங்குடி, கீழமணலி, ஓகை பேரையூர், அகரவேளுக்குடி, பழையனுர், கொத்தங்குடி, வடகோவனூர், தென்கோவனூர், திருராமேஸ்வரம், மஞ்சனவாடி, ஓவர்ச்சேரி, வெற்குடி சாத்தனூர், காக்கையடி, வடபாதிமங்கலம், ஹரிச்சந்திரபுரம், புள்ளமங்கலம், கிளியனூர், பெரியகொத்தூர், மணக்கரை, பாலக்குறிச்சி, சித்திரையூர், சேந்தங்குடி, குலமாணிக்கம், மாவட்டக்குடி, செருவாமணி மற்றும் மாரங்குடி கிராமங்கள்.
வாக்காளர்கள்: ஆண்கள் - 1,25,424, பெண்கள் - 1,27,029, திருநங்கைகள் - 13 என மொத்தம் 2,52,466 பேர்.
மொத்த வாக்குச்சாவடிகள்: 301
இதுவரை எம்.எல்.ஏக்கள்....
1962 அம்பிகாபதி - காங்கிரஸ்
1967 தனுஷ்கோடி - மார்க்சிஸ்ட்
1971 தாழை மு. கருணாநிதி - திமுக
1977 தாழை மு. கருணாநிதி - திமுக
1980 எம். செல்லமுத்து - மார்க்சிஸ்ட்
1984 எம். செல்லமுத்து - மார்க்சிஸ்ட்
1989 வி. தம்புசாமி - மார்க்சிஸ்ட்
1991 வி. தம்புசாமி - மார்க்சிஸ்ட்
1996 ஏ. அசோகன் - திமுக
2001 ஏ. அசோகன் - திமுக
2006 உ. மதிவாணன் - திமுக
2011 மு. கருணாநிதி - திமுக
இத்தொகுதியில், 1962 முதல் 2011 வரை நடைபெற்ற 12 சட்டப்பேரவைத் தேர்தல்களில் திமுக 6 முறையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 5 முறையும், காங்கிரஸ் ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.
தேர்தல் நடத்தும் அலுவலர் தொடர்பு எண்கள்:
திருவாரூர் கோட்டாட்சியர்
இரா. முத்துமீனாட்சி,
தொடர்பு எண்கள்:
04366-222277, 9445000464.

#tnelections2016   #ac168thiruvarur   #tiruvarur