Tuesday 24 March 2015

திருவாரூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்


               
திருவாரூர் நகர பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்திய ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதற்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இடையூறு

திருவாரூர் நகரில் கடைவீதி உள்ளிட்ட பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த இடங்களில் தரை கடைகள், தள்ளுவண்டி கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களின் ஆக்கிரமிப்புகள் அதிகமாக காணப்பட்டன. இதனால் நகர பகுதிக்குள் வாகன போக்குவரத்துக்கும், பாதசாரிகளின் நடமாட்டத்திற்கும் இடையூறு ஏற்பட்டது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர்.

நகரசபை கூட்டங்களின்போது நகர மன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள் அதை உடனடியாக அகற்றி கொள்ள வேண்டும் என திருவாரூர் நகராட்சி சார்பில் கடந்த சில நாட்களாக அறிவிப்பு செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்று ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் நகராட்சி நிர்வாகம் அதிரடியாக ஈடுபட்டது.

அகற்றம்

இதில் திருவாரூர் பஸ்நிலையத்தில் தொடங்கி கடைவீதி வரை இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. ஆக்கிரமிப்பு அகற்றும் பணிக்கு முன்பாக சில வர்த்தக நிறுவனங்கள் தாமாகவே முன்வந்து தங்கள் கடை முன்பு இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி கொண்டனர். சில கடைகள் முன்பாக சிமெண்டு தளங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இவற்றை நகராட்சி பணியாளர்கள் நேற்று பொக்லின் எந்திரத்தின் உதவியுடன் உடைத்தனர். அதேபோல நடை பாதை கடைகள் முழுவதுமாக அகற்றப்பட்டன.

நகராட்சியின் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிக்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக பொதுமக்கள் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆக்கிரமிப்பை அகற்றுவது வரவேற்கத்தக்கது. ஆனால் ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் சடங்கு போல ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதை ஏற்று கொள்ள முடியாது. ஆக்கிரமிப்பை அகற்ற ஆண்டுதோறும் நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் மீண்டும் கடைகாரர்கள் நடைபாதையை ஆக்கிரமித்து கொள்கிறார்கள். எனவே மாதத்திற்கு 2 முறையாவது ஆய்வு நடத்தி, உடனுக்குடன் ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு செய்தால் போக்குவரத்து நெரிசலும், விபத்துகளும் குறையும். இவ்வாறு பொதுமக்கள் கூறினர்.

No comments:

Post a Comment