Monday 30 March 2015

நாடு முழுவதும் 1.27 கோடி போலி சமையல் எரிவாயு இணைப்புகள் துண்டிப்பு



இணையதளம் மூலம் ஒருங்கிணைக்கப்பட்ட வாடிக்கையாளர்களின் தகவல்களால், நாடு முழுவதும் 1.27 கோடி சமையல் எரிவாயு இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
இந்தியா முழுவதும் சமையல் எரிவாயு உருளைகளைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை சுமார் 15 கோடிக்கும் அதிகமாக உள்ளது.
இதில், மார்ச் 28-ஆம் தேதி நிலவரப்படி 12.2 கோடிப் பேர் நேரடி மானிய திட்டத்தில் இணைந்துள்ளனர்.
போலி சமையல் எரிவாயு இணைப்புகள் மூலம் நடைபெறும் முறைகேடுகளைத் தடுக்க, இணையதளம் மூலம் அனைத்து எண்ணெய் நிறுவன வாடிக்கையாளர்களின் தகவல்களும் ஒன்றிணைக்கப்பட்டுள்ளன.
இதன்மூலம், புதிய எரிவாயு இணைப்பு பெறுவதற்காக சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள், சம்பந்தப்பட்ட எண்ணெய் நிறுவனங்கள் மூலம் நேரடியாக சரிபார்க்கபட்ட பின்னரே புதிய இணைப்புக்கான அனுமதி வழங்கப்படுகிறது.
இதுதவிர, ஏற்கெனவே விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களையும் எண்ணெய் நிறுவனங்கள் ஒருங்கிணைத்து ஆய்வு செய்து வருகின்றன.
சரிபார்க்கும் பணியின்போது, விண்ணப்பதாரரின் பெயரில் ஏற்கெனவே ஏதேனும் எரிவாயு இணைப்பு உள்ளதா என்பது உள்ளிட்ட விவரங்கள் ஆய்வு செய்யப்படுகின்றன.
யாருடைய இணைப்பு துண்டிக்கப்படும்?: ஒரே முகவரியில், ஒரே பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்ட இணைப்பு வைத்துள்ளவர்கள், ஒரே முகவரியில் வேறு பெயர்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட இணைப்புகள் வைத்துள்ளவர்களின் இணைப்புகள் போலி இணைப்புகள் என வரையறுக்கப்பட்டு, அவர்களது இணைப்பு துண்டிக்கப்படுகிறது.
இப்படி போலியான இணைப்பை பெற்றிருப்போரின் இணைப்பைத் துண்டிப்பதற்கு முன்னர் எண்ணெய் நிறுவனங்கள் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டு அவற்றை திருப்பி ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
மேலும், உங்கள் வாடிக்கையாளரை அறிந்துகொள்ளும் வசதிக்கான (கே.ஒய்.சி) படிவம் அளித்து தங்களது இணைப்பு போலியானது அல்ல என்று நிரூபிப்பவர்களுக்கு மீண்டும் இணைப்பு வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்பணம் ரூ.723 கோடி மிச்சம்: நேரடி மானியத் திட்டத்தில் இணையும் வாடிக்கையாளர்களுக்கு முன்வைப்புத் தொகையாக ரூ.568 வழங்கப்படுகிறது.
எனவே, இதுவரை ரத்து செய்யப்பட்ட 1.27 கோடி போலி எரிவாயு இணைப்புகள் மூலம் அரசுக்கு சுமார் ரூ.723 கோடி முன்வைப்புத் தொகையும், பல கோடி ரூபாய் மானியமும் மிச்சமாகியுள்ளது.
மேலும், போலி இணைப்புகளை பெற்றிருப்பவர்கள், எரிவாயு உருளைகளை மானிய விலையில் பெற்று, அவற்றை ரூ.800 முதல் ரூ.1,000 வரை விற்று வருகின்றனர்.
போலி இணைப்புகள் துண்டிக்கப்பட்டதையடுத்து, தற்போது இந்த முறைகேடும் குறைந்து வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
10-இல் ஒருவர் கூட ஒப்படைப்பதில்லை...
 
எண்ணெய் நிறுவனங்கள் நோட்டீஸ் அனுப்பிய பின்னரும், போலி இணைப்பு வைத்துள்ளவர்களில் 10-இல் ஒருவர்கூட தானாக முன்வந்து இணைப்பை ஒப்படைப்பதில்லை.
இதன் காரணமாக, குறிப்பிட்ட கால அவகாசத்துக்கு பிறகு அந்த இணைப்புகளை எண்ணெய் நிறுவனங்கள் துண்டிக்கின்றன.
"இந்தியன் ஆயில்', "இந்துஸ்தான் பெட்ரோலியம்', "பாரத் பெட்ரோலியம்' ஆகிய 3 எண்ணெய் நிறுவனங்களையும் சேர்த்து மார்ச் 1-ஆம் தேதி வரை நாடு முழுவதும் மொத்தம் 1.27 கோடி போலி எரிவாயு இணைப்புகளை கண்டறியப்பட்டு, அவை துண்டிக்கப்பட்டுள்ளன.
அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 18.8 லட்சம் போலி இணைப்புகளும், தமிழகத்தைப் பொருத்தவரை 3 லட்சம் இணைப்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளன. மேலும், இவ்வாறு போலி இணைப்புகளைக் கண்டறிந்து அவற்றை ரத்து செய்யும் பணிகள் தொடர்ந்து நடைபெறும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment