Wednesday 25 March 2015

முழு அடைப்பு போராட்டத்தையொட்டி வருகிற 28-ந் தேதி திருவாரூர் மாவட்டத்தில் பஸ்-ரெயில் மறியல்

முழு அடைப்பு போராட்டத்தையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் பஸ்-ரெயில் மறியல் செய்வது என அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

முழு அடைப்பு போராட்டம்

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் சென்னையில் அனைத்து கூட்டம் நடந்தது. கூட்டத்தில் காவிரியின் குறுக்கே அணை கட்ட முயற்சி செய்யும் கர்நாடக மாநில அரசை கண்டித்தும், கர்நாடகத்தின் முயற்சியை மத்திய அரசு தடுத்து நிறுத்தவும், காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் பங்கீட்டு ஒழுங்காற்று குழு ஆகியவற்றை உடனடியாக அமைக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் வருகிற 28-ந் தேதி மாநிலம்தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது.

அனைத்து கட்சி கூட்டம்

சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி திருவாரூர் மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டத்தை வெற்றிகரமாக நடத்துவது தொடர்பான அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் நேற்று திருவாரூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கிருஷ்ணமணி தலைமை தாங்கினார். இயற்கை உழவர் இயக்க மாநில செயலாளர் ஜெயராமன், மாவட்ட தலைவர் வரதராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தி.மு.க. மாவட்ட செயலாளர் பூண்டி கே.கலைவாணன் கலந்து கொண்டு பேசினார்.

நாம் தமிழர் கட்சி மண்டல ஒருங்கிணைப்பாளர்¢ சந்திரசேகரன், காங்கிரஸ் கமிட்டி மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், மனித நேய கட்சி நிர்வாகி சீனிஜெகபர்சாதிக், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகி மதிவாணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகி மகேந்திரன், தே.மு.தி.க. நகர செயலாளர் செந்தில், வர்த்தக நலச்சங்க மாவட்ட தலைவர் ராமமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

பஸ்-ரெயில் மறியல்

முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் நாளில் பஸ், ரெயில் மறியல் செய்வது. அனைத்து கட்சி பிரமுகர்கள், விவசாய சங்க நிர்வாகிகள் ஆகியோரை ஒருங்கிணைத்து திருவாரூரில் பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்துவது. காவிரியில் தமிழகத்திற்கு உண்டான உரிமையை மீட்பதற்காக நடைபெறும் இந்த முழு அடைப்பு போராட்டம் வெற்றிகரமாக நடைபெற பொதுமக்களை ஒத்துழைப்பு வழங்கும்படி கேட்டுகொள்வது என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

No comments:

Post a Comment