Wednesday 25 March 2015

மோடி, 29-ந் தேதி சிங்கப்பூர் செல்கிறார்; லீ குவான் யூ இறுதிச்சடங்கில் பங்கேற்கிறார்

மறைந்த சிங்கப்பூர் முதல் பிரதமர் லீ குவான் யூவின் இறுதிச்சடங்கில் பங்கேற்க பிரதமர் மோடி சிங்கப்பூருக்கு செல்கிறார்.

காலமானார்

சிங்கப்பூரின் முதலாவது பிரதமரான லீ குவான் யூ நேற்று முன்தினம் காலமானார். அவருக்கு வயது 91. கடந்த சில நாட்களாக உடல்நல குறைவால், ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்த அவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.

குட்டித்தீவாக இருந்த சிங்கப்பூரை உலகமே வியக்கும் வண்ணம், சொர்க்கபுரியாக மாற்றிக்காட்டியவர்,லீ குவான் யூ ஆவார். அவர் 31 ஆண்டுகள், சிங்கப்பூரின் பிரதமராக இருந்தார். தனது அளப்பரிய முயற்சியால், சிங்கப்பூரை தொழில் வளத்திலும், பொருளாதாரத்திலும் முன்னேற செய்தார். இதனால், உலக தலைவர்கள் பலரின் மனம் கவர்ந்த தலைவராக உருவெடுத்தார்.

அவரது மறைவுக்கு பல்வேறு நாட்டுத்தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி பங்கேற்கிறார்

லீ குவான் யூவின் இறுதிச்சடங்குகள், 29-ந் தேதி நடைபெறுகிறது. பிரதமர் நரேந்திர மோடி, சிங்கப்பூருக்கு சென்று, இறுதிச்சடங்கில் நேரில் கலந்து கொள்கிறார். இத்தகவலை மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் நேற்று தெரிவித்தார்.

லீ குவான் யூ மறைவுக்கு பிரதமர் மோடி ஏற்கனவே இரங்கல் செய்தியும் வெளியிட்டுள்ளார்.

தூதரகங்களில் அஞ்சலி

இதற்கிடையே, பல்வேறு நாடுகளில் உள்ள சிங்கப்பூர் தூதரகங்களில் லீ குவான் யூ மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா.வுக்கான சிங்கப்பூரின் நிரந்தர தூதரகத்திலும் அந்நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன் கலந்து கொண்டு, அங்கு வைக்கப்பட்டிருந்த இரங்கல் புத்தகத்தில் கையெழுத்திட்டார்.

இதுபோல், ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள சிங்கப்பூர் தூதரகத்துக்கு ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அங்கு வைக்கப்பட்டிருந்த இரங்கல் புத்தகத்தில் லீ குவான் யூ மறைவுக்கு புகழஞ்சலி செலுத்தி கையெழுத்திட்டார்.

No comments:

Post a Comment