Tuesday 31 March 2015

செல்வ மகள் சேமிப்புத் திட்டம்: 3.9 லட்சம் கணக்குகள் தொடக்கம்


தமிழகத்தில் செல்வமகள் சேமிப்புக் கணக்குத் திட்டத்தின் கீழ், 3.9 லட்சம் சேமிப்புக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாக அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.
  பெண் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்து வருவதைத் தடுக்கவும், அவர்களுக்கு உயர் கல்வி கிடைப்பதை உறுதிசெய்யும் வகையிலும், மத்திய அரசால் செல்வ மகள் (சுகன்யா சம்ரித்தி) சேமிப்புக் கணக்கு என்கிற திட்டம் தொடங்கப்பட்டது.
நிகழாண்டில் ஜனவரி 30-ஆம் தேதி, நாடு முழுவதும் இந்தத் திட்டம் பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது. தமிழகத்தில் அஞ்சல் துறை வாயிலாக செல்வமகள் சேமிப்புக் கணக்குத் திட்டம் என்ற பெயரில் இந்தத் திட்டம் பிப்ரவரியில் அறிமுகம் செய்யப்பட்டது.

13 ஆயிரம் கணக்குகள்

இந்தத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்ட இரண்டு மாதத்தில், பொது மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. செல்வ மகள் சேமிப்புக் கணக்குத் திட்டம் தொடங்க வருபவர்களின் வசதிக்காக, மார்ச் 22, 29 ஆகிய இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளிலும் அஞ்சலகங்கள் இயங்கும் என அஞ்சல் துறையால் அறிவிக்கும் அளவுக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்து வருகிறது.
சென்னை மண்டலத்தில் கடந்த இரு ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் சுமார் 13 ஆயிரத்து 500 சேமிப்புக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாக அஞ்சல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து, சென்னை நகர மண்டல அஞ்சல் துறைத் தலைவர் மெர்வின் அலெக்ஸாண்டர் கூறியதாவது:
தமிழகத்தில் செல்வ மகள் சேமிப்புக் கணக்குத் திட்டத்துக்கு, மிகுந்த வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் கணக்குத் தொடங்க வருபவர்களின் வசதிக்காக, கடந்த இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளில், வழக்கம் போல் சென்னை நகர மண்டலத்துக்குள்பட்ட 20 தலைமை அஞ்சலகங்களும், 55 துணை அஞ்சலகங்களும் செயல்பட்டன.
ரூ.60 கோடிக்கு முதலீடு
இந்த இரு நாள்களிலும் சென்னை நகர மண்டலத்தில் மட்டும் சுமார் 13 ஆயிரத்து 500 சேமிப்புக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. திட்டம் தொடங்கப்பட்ட இரண்டு மாதங்களில் இதுவரை சென்னை நகர மண்டலத்தில் 1.65 லட்சம் கணக்குகளும், தமிழக அஞ்சல் வட்டத்தில் 3.9 லட்சம் சேமிப்புக் கணக்குகளும் தொடங்கப்பட்டுள்ளன.
இதன் வாயிலாக ஏறத்தாழ ரூ.60 கோடி அளவுக்கு முதலீட்டுத் தொகை கிடைக்கப் பெற்றுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், அஞ்சல் துறையால் நடப்பு நிதியாண்டில் 1 கோடி அளவுக்கு சேமிப்புக் கணக்குகள் தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்துக்கு பொதுமக்கள் அளித்து வரும் அபரிமிதமான ஆதரவால், நிர்ணயித்த இலக்கைக் காட்டிலும் கூடுதலான கணக்குகள் தொடங்கும் வாய்ப்பு உள்ளது என்றார் அவர்.
 
திட்டத்தின் சிறப்பு அம்சம்:
 செல்வமகள் சேமிப்புக் கணக்கு தொடங்க பெண் குழந்தையின் பிறப்புச் சான்றிதழ், முகவரி சான்றிதழ், அடையாளச் சான்று ஆகியவற்றை கொண்டு செல்ல வேண்டும்.
 10 வயதுக்குள் இருக்கும் பெண் குழந்தைகள் பெயரில், பெற்றோரோ அல்லது பாதுகாவலரோ சேமிப்புக்  கணக்கைத் தொடங்கலாம். ஒரு பெற்றோர் அதிகபட்சமாக 2 பெண் குழந்தைகளுக்கு மட்டுமே கணக்கு தொடங்க முடியும்.
 கணக்கு தொடங்கியதிலிருந்து, 14 ஆண்டுகளுக்குப் பணம் செலுத்த வேண்டும். 21-வது ஆண்டில் கணக்கு முதிர்வடையும். அப்போது கணக்கில் சேர்ந்திருக்கும் பணத்தை அந்தப் பெண் குழந்தையே எடுத்துக் கொள்ளலாம்.
 கணக்கு வைத்துள்ள பெண்ணுக்கு 18 வயது நிரம்பினால், அவரது கல்வி, திருமண செலவுக்காக கணக்கில் உள்ள தொகையில் 50 சதவீதத்தை பெற்றுக் கொள்ளும் வசதியும் உண்டு.
 முதலில் ரூ.1,000 செலுத்தி கணக்கு தொடங்க வேண்டும். அதைத் தொடர்ந்து ரூ.100 மடங்கில் எவ்வளவு வேண்டுமானாலும் செலுத்தலாம்.
 நிகழ் நிதியாண்டில் 9.1 சதவீதம் வட்டி வழங்கப்படும். தற்போதுள்ள சிறுசேமிப்புத் திட்டங்களிலேயே அதிக வட்டி வழங்கப்படும் திட்டம் இதுவாகும்.
 இந்த கணக்கில் செலுத்தப்படும் தொகைக்கு 80 சி பிரிவின் கீழ் வருமான வரியிலிருந்து விலக்கு பெற முடியும்.
 உதாரணமாக, மாதந்தோறும் ரூ.1,000 வீதம் ஆண்டுக்கு ரூ.12,000 செலுத்தினால் 14 ஆண்டுகள் நிறைவில் நாம் செலுத்திய ரூ.1.68 லட்சம் வட்டியுடன் சேர்த்து ரூ.3.30 லட்சமாக இருக்கும்.
 இந்தக் கணக்கு 21-வது ஆண்டில் நிறைவடையும்போது முதிர்வுத் தொகையாக ரூ.6.07 லட்சம் பெறலாம். இது தோராயமான கணக்கு தான். வட்டி விகிதம், செலுத்தும் தொகை அதிகமாகும்போது முதிர்வுத் தொகையும் பன்மடங்கு அதிகரிக்கும் என அஞ்சல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment