Thursday 26 March 2015

வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தும் திட்டம்: வீடுவீடாக வாக்குச் சாவடி அதிகாரிகள் வருகை

வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தும் திட்டத்தின் கீழ், விவரங்களைச் சேகரிக்கும் பணிக்காக வாக்குச் சாவடி அதிகாரிகள் வீடுவீடாகச் செல்லவுள்ளனர். இந்தத் திட்டம் புதன்கிழமை (மார்ச் 25) முதல் மாநிலம் முழுவதும் தொடங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தி விவரங்களை உறுதிப்படுத்தும் (என்.இ.ஆர்.பி.ஏ.பி.) திட்டத்தை இந்திய தேர்தல் ஆணையம் செயல்படுத்துகிறது. இந்தத் திட்டத்தின்படி, வாக்காளர்களின் ஆதார் எண், தொலைபேசி, செல்போன் எண்கள், இ-மெயில் முகவரி ஆகியவை பெறப்பட்டு, வாக்காளர்களின் அடையாள விவரங்களுடன் சேர்க்கப்படும்.
இந்தத் திட்டத்தின்படி, ஒவ்வொரு வீட்டுக்கும் வாக்குச்சாவடி அளவிலான அதிகாரிகள் வருகை தர உள்ளனர். புதன்கிழமை (மார்ச் 25) முதல் ஏப்ரல் 6 ஆம் தேதி வரை வீடுகளுக்கு வந்து அந்த விவரங்களைச் சேகரிப்பார்கள். இந்தப் பணியில் 64 ஆயிரத்து 99 பேர் ஈடுபடுகின்றனர்.

ஆதார் எண் போன்ற விவரங்களை அவர்களிடம் வழங்குவது மட்டுமல்லாமல், வாக்காளர் விவரப் பதிவில் செய்ய வேண்டிய திருத்தங்கள், ஒன்றுக்கு மேற்பட்ட இடத்தில் பெயர் இருந்தால் பெயரை நீக்குவது, இடம் மாறிய விவரத்தை தெரிவிப்பது, பெயர் சேர்ப்பது, இறந்தவர் பெயரை நீக்குவது போன்றவற்றுக்கான விண்ணப்பங்களையும் அவர்களிடம் வாங்கி பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். அதற்கு ஆதாரமான ஆவணங்களையும் அவர்களிடம் கொடுக்க வேண்டும்.

அடுத்ததாக, ஏப்ரல் 12, 26, மே 10, 24 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் அந்தந்த வாக்குச்சாவடிகளில் நடத்தப்படவுள்ளன. மொத்தம் 64 ஆயிரத்து 94 வாக்குச் சாவடிகள் உள்ளன. மேலும் ஏப்ரல் 13-ந் தேதியில் இருந்து மே 31-ந் தேதி வரைக்கும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள், உதவி அதிகாரிகளிடம், தாலுகா அலுவலகம் போன்ற குறிப்பிட்ட சில அரசு அலுவலகங்களில், வாரத்தில் இரண்டு நாள்கள் பிற்பகலுக்கு மேல் ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களைக் கொடுக்கலாம்.

வாக்குச்சாவடி அதிகாரிகளை நேரில் சந்திக்க முடியாதவர்கள், சிறப்பு முகாம்களுக்குச் செல்ல முடியாதவர்கள், தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் விண்ணப்பிக்கலாம். தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை மூலம் நடத்தப்படும் பொது சேவை மையங்கள், அங்கீகரிக்கப்பட்ட 1,383 கம்ப்யூட்டர் மையங்களுக்குச் சென்றாலும், இதற்கான ஆன்லைன் சேவைகளை பெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சிறப்புப் பார்வையாளர்கள்: வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தும் திட்டத்தை செயல்படுத்துவதை கண்காணிப்பதற்காக 3 மாவட்டங்களுக்கு ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி சிறப்புப் பார்வையாளராக நியமிக்கப்படுகிறார்.
அந்த வகையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு நகரம், ஊரமைப்பு இயக்குநர் கிர்லோஷ் குமார், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் தொல்லியல் துறை ஆணையர் டி.கார்த்திகேயன், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலத்துக்கு தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்தின் ஆணையர் ஹர்சகாய் மீனா, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கடலூருக்கு வேலை வாய்ப்பு, பயிற்சி இயக்குநர் சி.சமயமூர்த்தி, நாகை, திருவாரூர், தஞ்சாவூருக்கு தமிழ்நாடு சாலைப் பிரிவுத் திட்ட இயக்குநர் அனில் மேஷ்ராம், நாமக்கல், கரூர், திண்டுக்கல்லுக்கு ஆவணக் காப்பகம், வரலாற்று ஆய்வு ஆணையர் எம்.ஏ.சித்திக், கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களுக்கு தமிழ்நாடு காதி, கிராமத் தொழில் வாரியத்தின் தலைமைச் செயல் அதிகாரி கா.பாலச்சந்திரன், மதுரை, தேனி, விருதுநகருக்கு கோ-ஆப்டெக்ஸ் நிர்வாக இயக்குநர் டி.என்.வெங்கடேஷ், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டைக்கு மாற்றுத் திறனாளிகள் நல ஆணையர் கே.மணிவாசன், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலாளர் ஏ.கார்த்திக் ஆகியோர் சிறப்புப் பார்வையாளராக இருப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment