Friday 20 March 2015

ரேஷன் பொருட்கள் குறைபாடு இருந்தால் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் : அமைச்சர் காமராஜ்



தமிழ்நாடு மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அலுவலர்களின் செயல்பாடுகள் குறித்த மாநில அளவிலான ஆய்வுக் கூட்டம், 20.03.2015 இன்று சென்னை, சேப்பாக்கம் எழிலகத்தில் உணவு, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் இரா.காமராஜ் தலைமையில் நடைபெற்றது.
இன்று வரை 11 இலட்சத்து 6 ஆயிரத்து 453 புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் 3 இலட்சத்து 56 ஆயிரத்து 738 போலி அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டு ரத்து செய்யப்பட்டுள்ளன என்று தமிழக அமைச்சர் இரா. காமராஜ் தெரிவித்தார்.
அமைச்சர் புதிய குடும்ப அட்டைகள் கோரி பெறப்படும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து 60 நாட்களுக்குள் அட்டைகள் வழங்கப்பட வேண்டுமென்று அறிவுறுத்தினார்.
போலி குடும்ப அட்டைகளை களைய நடவடிக்கைகள் மேற்கொண்டு, நியாயவிலைக் கடைகள் வேலை நேரத்தில் திறக்கப்பட்டு விநியோகம் சீரான முறையில் நடைபெறுவதையும், பொது விநியோகத் திட்ட கிடங்குகளிலிருந்து, நியாய விலை அங்காடிகளுக்கு நகர்வு செய்யப்படும் லாரிகள், மாவட்ட ஆட்சியரால் அங்கீகரிக்கப்பட்ட வழித்தடங்களிலேயே நகர்வு செய்யப்பட்டு, அரிசி மூட்டைகளின் எடையை துல்லியமாக குறிப்பிட்டு, அங்காடிகளுக்கு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டுமென்றும் அமைச்சர் அறிவுறுத்தினார்.
பொது விநியோகத் திட்டத்தில் காணப்படும் குறைபாடுகளை களைவதற்கு, உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மூலமாக மாதந்தோறும் இரண்டாவது சனிக்கிழமைகளில் நடத்தப்படும் குறைதீர் முகாம்களில், ஜுன் 2011 முதல் மார்ச் 2015 வரையிலான காலத்தில் 3 இலட்சத்து 42 ஆயிரத்து 482 மனுக்கள் பெறப்பட்டு, அவற்றில் 3 இலட்சத்து 26 ஆயிரத்து 629 மனுக்கள் அன்றைய தினத்திலேயே தீர்வு செய்யப்பட்டும், மீதமுள்ள 15 ஆயிரத்து 853 மனுக்கள் பின்னரும் தீர்வு செய்யப்பட்டுள்ளன.
பொது மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ள இவ்வகை முகாம்களை நடத்தும் ஒரே மாநிலம் இந்தியாவிலேயே தமிழ்நாடு மட்டும்தான்.
நுகர்வோர் வாங்கும் பொருட்களின் தரம் தொடர்பான குறைபாடுகள் குறித்து தொலைபேசி, மின்னஞ்சல் மூலம் உடனுக்குடன் தீர்வு காண, மாநில நுகர்வோர் சேவை மையத்தினை 044 – 28 59 28 28 என்ற தொலைபேசி எண்ணிலும், consumer@nic.in என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொண்டு பயன் பெறலாம். மேலும் கீழ்க்கண்ட கைபேசி எண்களில் குறுஞ்செய்திகளும் அனுப்பலாம் 72999 8002, 86800 18002,  86800 28003  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment