Thursday 5 March 2015

தமிழகத்தில் 3 லட்சம் செயலற்ற எரிவாயு இணைப்புகள்: 6 மாதம் பயன்படுத்தாவிட்டால் இணைப்பு துண்டிப்பு


சமையல் எரிவாயு நேரடி மானியத் திட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு, தமிழகத்தில் சுமார் 3.40 லட்சம் எரிவாயு இணைப்புகள் செயலற்றவை எனக் கண்டறியப்பட்டுள்ளன.
மத்திய அரசின் சமையல் எரிவாயு நேரடி மானியத் திட்டம் தமிழகம் உள்பட நாடு முழுவதும் கடந்த ஜனவரி 1-ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது.
தமிழகத்தைப் பொருத்தவரை 1.53 கோடி சமையல் எரிவாயு இணைப்புகள் உள்ளன.
இவற்றில் திங்கள்கிழமை (மார்ச் 2) நிலவரப்படி சுமார் 1.25 கோடி வாடிக்கையாளர்கள் நேரடி மானியத் திட்டத்தில் இணைந்துள்ளனர். சுமார் 17 சதவீதம் பேர் இந்தத் திட்டத்தில் இணையாமல் உள்ளனர்.
நேரடி மானியத்திட்டத்தில் சேர வரும் மார்ச் 31-ஆம் தேதி வரை கால அவகாசம் உள்ளது. இதன்பிறகு, ஜூன் மாத இறுதியில் இந்தத் திட்டம் முழுமையாக அமல்படுத்தப்படும்.
நேரடி மானியத் திட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு செயலற்ற எரிவாயு இணைப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் பிப்.28-ஆம் தேதி வரை சுமார் 3.40 லட்சம் எரிவாயு இணைப்புகள் செயலற்றவை எனக் கண்டறியப்பட்டுள்ளன.
இந்த எண்ணிக்கை கடந்த 2014-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்துக்கு முன்பு இணைப்பை பயன்படுத்தாதவர்களின் எண்ணிக்கையை விட அதிகம்.
இணைப்பு துண்டிப்பு: செயலற்ற எரிவாயு இணைப்புகளில் 6 மாதங்களாக தொடர்ந்து எரிவாயு உருளைக்கு முன்பதிவு செய்யாமல் இருப்பவர்களுக்கு இணைப்பு தானாகவே துண்டிக்கப்பட்டுவிடும். இவர்கள் மீண்டும் "உங்கள் வாடிக்கையாளரை அறியும் வசதிக்கான (கே.ஒய்.சி)' படிவத்தை பூர்த்தி செய்து, முகவரிச் சான்று, அடையாளச் சான்று கொடுத்து எரிவாயு இணைப்பைப் பெற்றுக் கொள்ளலாம்.
ஆனால் போலி இணைப்புகள் எனக் கண்டறியப்பட்டவர்கள், தங்களது இணைப்பு உண்மையானது என நிரூபித்தால் மட்டுமே அவர்களுக்கு மீண்டும் இணைப்பு வழங்கப்படும்.
சென்னையில் அதிகம்: சென்னையில் மட்டும் சுமார் 1 லட்சத்து 7 ஆயிரம் இணைப்புகள் செயலற்ற நிலையில் உள்ளன. இதற்கு அடுத்தபடியாக வேலூரில் 34 ஆயிரம், காஞ்சிபுரத்தில் 30 ஆயிரம், திருப்பூரில் 25 ஆயிரம், கோவையில் 19.5 ஆயிரம் செயலற்ற இணைப்புகள் உள்ளன என எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
10 சதவீதம் போலியானவை?
நேரடி மானியத் திட்டத்தின் மூலம் ஒன்றுக்கும் மேற்பட்ட இணைப்பு வைத்திருப்பதைக் கண்டறிய முடியும்.
ஒரே முகவரியில் இரண்டு இணைப்புகளை வைத்துள்ளவர்கள், ஒரு இணைப்புக்கு மட்டும் முன்பதிவு செய்வதாலும் செயலற்ற எரிவாயு இணைப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
போலி எரிவாயு இணைப்பு வைத்துள்ளவர்கள் யார் என்ற விவரம் நேரடி மானியத் திட்டம் முழுமையாக அமல்படுத்தப்பட்ட பின் ஜூலை மாதத்தில்தான் தெரிய வரும். இருப்பினும் இதுவரை நேரடி மானியத் திட்டத்தில் இணையாத வாடிக்கையாளர்களில் சுமார் 10 சதவீத இணைப்புகள் போலியானவையாக இருக்கலாம் என எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment