Tuesday 31 March 2015

மத்திய பல்கலை. கட்டடங்களின் உறுதியை ஆய்வு செய்யக் குழு: துணைவேந்தர் தகவல்



திருவாரூர் மத்தியப் பல்கலைக் கழகத்தில் உள்ள அனைத்துக் கட்டடங்களின் உறுதித் தன்மையை ஆய்வு செய்ய குழு அமைக்கப்படும் என்றார் பல்கலைக்கழக துணைவேந்தர் (பொ) த. செங்கதிர்.
பல்கலைக்கழகத்தில் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியது:


இப்பல்கலைக்கழகத்தின் அனைத்துக் கட்டுமானப் பணிகளும், மத்திய பொதுப் பணித் துறை (சிபிடபிள்யுடி) மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பல்கலைக்கழக வளாகத்தில் கட்டப்பட்டு வந்த விருந்தினர் மாளிகையின் முகப்பு கட்டுமானம் ஞாயிற்றுக்கிழமை இடிந்து விழுந்து 5 பேர் உயிரிழந்த விபத்து துரதிருஷ்டமானது.


விபத்து குறித்து தொடர்புடைய துறைகளுக்கு தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளன. மேலும், மத்திய பொதுப்பணித் துறையிடம் விபத்து குறித்து விரிவான அறிக்கை கோரப்பட்டுள்ளது.
இங்கு கட்டப்பட்டுள்ள அனைத்துக் கட்டடங்களின் தரம், உறுதித் தன்மை குறித்து ஆய்வு செய்ய திருச்சி என்ஐடி, சென்னை ஐஐடி நிறுவனங்களின் உதவி கோரப்படும். விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் அனுமதியளித்தால் பல்கலைக்கழக நிர்வாகம் அதை செயல்படுத்தும் என்றார்.


எதிர்பாராதது: மத்திய பல்கலைக்கழகத்தின் பதிவாளர் (பொ) பொன். ரவீந்திரன் கூறியது: பல்கலைக்கழகத்துக்கு வரும் பேராசிரியர்கள், கல்வியாளர்கள், ஆய்வாளர்கள் தங்குவதற்கு நகரில் போதிய வீடுகள் இல்லாததால், ரூ. 20 கோடியில் 104 அறைகளுடனான 4 மாடி விருந்தினர் இல்லம் 3 மாதங்களுக்கு முன்பே பல்கலைக்கழக வளாகத்தில் கட்டி முடிக்கப்பட்டு விட்டது.


தற்போது இக்கட்டடத்தின் நுழைவு வாயில் முகப்பில் உயர்நிலை போர்டிகோ அமைக்கும் பணியின்போதுதான் விபத்து ஏற்பட்டது. இது எதிர்பாராதது என்றார் ரவீந்திரன்.

No comments:

Post a Comment