Monday 2 March 2015

தங்கத்தை வங்கிகளில் டெபாசிட் செய்து வட்டி பெறலாம்


பொதுமக்கள் தங்கள் கைவசம் உள்ள தங்கத்தை வங்கிகளில் டெபாசிட் செய்து வட்டி பெறலாம் என்ற புதிய திட்டம் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் எவ்வித பயனுமின்றி பொதுமக்களிடம் முடங்கிக் கிடக்கும் தங்கத்தை வெளியே கொண்டு வந்து பயனுள்ள வகையில் பயன்படுத் தவும், தங்க இறக்குமதியை குறைக்கவும் இத்திட்டம் உதவி கரமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
இந்தியாவில் இப்போது 20 ஆயிரம் டன் தங்கம் மக்களிடம் முடங்கிக் கிடக்கிறது. இவை விற்கப்படுவதும் இல்லை, பணமாக்கப்பட்டு பயன்படுத்தப் படுவதும் இல்லை. எனவே பொதுமக்களிடம் அபரிமிதமாக உள்ள தங்கத்தை பணமாக செலாவணியாக்கி அவற்றை நாட்டு நலனுக்கு பயன்படுத்திக் கொள்ள பட்ஜெட்டில் 3 திட்டங் களை அருண் ஜேட்லி அறிவித்துள் ளார். அதன்படி நிலையான வட்டியுடன் தங்கத்தை அடிப்படை யாக கொண்டு பத்திரங்களை அரசு வெளியிடும். தங்கத்தை உலோகமாக வாங்குவதற்கு பதிலாக அரசு வெளியிடும் பத்திரங்களாக வாங்கும் திட்டமும் அறிமுகப்படுத்தப்படுகிறது.
இது மட்டுமல்லாது மக்கள் வங்கிகளில் பணத்தை டெபாசிட் செய்து வட்டி பெறுவதுபோல தங்களிடம் உள்ள தங்கத்தை வங்கிகளில் டெபாசிட் செய்து வட்டி பெற முடியும். தங்க நகைக் கடை வைத்திருப்பவர்களும் இத்திட்டத்தை பயன்படுத்தி பயனடைய முடியும்.
இப்போதுள்ள தங்க டெபாசிட் திட்டம், தங்க கடன் திட்டம் ஆகியவற்றுக்கு மாற்றாக இது செயல்படுத்தப்படும். வங்கி களும், பிற நிதி நிறுவனங்களும் தாங்கள் பெறும் தங்கத்தை பணமாக்கிக் கொள்ள முடியும்.
உள்நாட்டில் வீணாக தேங்கிக் கிடக்கும் தங்கத்தை மறுசுழற்சி செய்வதன் மூலம் வெளிநாட்டில் இருந்து தங்கம் இறக்குமதி செய்யப்படுவது குறையும். இதனால் நடப்பு கணக்கு பற்றாக்குறையும், வர்த்தக பற்றாக்குறையும் பெருமளவில் குறைய வாய்ப்புள்ளது.

No comments:

Post a Comment