தமிழக அரசின் 2015} 16 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் ரூ. 650 கோடிக்கு வரிச் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கொசுவலை, ஏலக்காய், மோட்டார் பம்புகள், செல்லிடப்பேசிகள் ஆகியவற்றின் மீது விதிக்கப்பட்டிருந்த மதிப்புக் கூட்டு வரி குறைக்கப்பட்டுள்ளது. இதனால், வெளிச் சந்தையில் அவற்றின் விலை வெகுவாகக் குறையும்.
புதிய வரிகள் கிடையாது: மாநிலத்தின் சொந்த வரி வருவாயில் குறைந்த வளர்ச்சியே உள்ள போதும், புதிய வரிகள் எதையும் விதிக்க வேண்டாம் என அரசு முடிவு செய்துள்ளதாக நிதிநிலை அறிக்கையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
ஐந்தாவது முறையாக தனது நிதிநிலை அறிக்கையை புதன்கிழமை தாக்கல் செய்தார், பன்னீர்செல்வம். இந்த அறிக்கையில் உற்பத்தித் துறையை ஊக்குவிப்பதற்காக சில முக்கிய வரிச் சலுகைகளை வழங்க அரசு முன்வந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, வரி விகிதங்களில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள்:
பசுமை எரிசக்தி உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் வகையில், உயிரி எரிபொருள் மூலம் (கரும்பு சக்கையைத் தவிர) உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் மீதான வரி விலக்கிக் கொள்ளப்படும்.
மீன்பிடி கயிறுகள், மீன்பிடி மிதவைகள், மீன்வலை முறுக்கு நூல், மீன்பிடி விளக்குகள், மீன்பிடி திருப்புகை போன்ற மீன்பிடிப்புக்கு பயன்படும் துணைப் பொருள்கள் மீது விதிக்கப்படும் மதிப்புக்கூட்டு வரி முற்றிலுமாக விலக்கிக் கொள்ளப்படும்.
அனைத்து வகையான கொசு வலைகளுக்கு இப்போது விதிக்கப்படும் 5 சதவீத மதிப்புக்கூட்டு வரி முற்றிலுமாக விலக்கிக் கொள்ளப்படும்.
நெய்தலுக்கு முன்பாக நூலுக்குப் பசையிடுவது தொடர்பான ஒப்பந்தப் பணிகளுக்கு மதிப்புக் கூட்டு வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும். ஏலக்காய் மீது இப்போது விதிக்கப்பட்டு வரும் மதிப்புக்கூட்டு வரி 5 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாக குறைக்கப்படும்.
மின்சேமிப்புக்கான கருவிகளின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், அனைத்து வகையான ஒளி உமிழ் டையோடு விளக்குகள் (எல்.இ.டி.,) மீது இப்போது விதிக்கப்படும் மதிப்புக் கூட்டு வரி 14.5 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்படும்.
மாநிலத்திலுள்ள குறு, சிறு, நடுத்தரத் தொழில் துறையினரை ஊக்குவிக்கவும், விவசாயிகளுக்கு நன்மை ஏற்படவும், காற்றழுத்தக் கருவிகள், 10 குதிரைத் திறன் வரையிலான மோட்டார் பம்புகள், அவற்றின் பாகங்கள் மீது இப்போது விதிக்கப்படும் மதிப்புக்கூட்டு வரி 14.5 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்படும்.
செல்லிடப்பேசிக்கு வரி குறைப்பு: செல்லிடப்பேசிகள் மீது இப்போது விதிக்கப்படும் மதிப்புக்கூட்டு வரி, 14.5 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்படும். தமிழகத்தில் உள்ள உற்பத்தித் தொழிற்சாலைகள் அண்டை மாநிலங்களில் உள்ள உற்பத்தி நிறுவனங்களுடன் சிறப்பாக போட்டியிடுவதை ஊக்குவிக்கும் வகையில், மாநிலங்களுக்கு இடையிலான விற்பனையில் தமிழ்நாடு மதிப்புக் கூட்டு வரி சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட 3 சதவீத உள்ளீட்டு வரி திரும்பப் பெறப்படும்.
சி படிவமின்றி நடைபெறும், மாநிலங்களுக்கு இடையேயான பொருள் விற்பனைகளிலும், உள்ளீட்டு வரி வரவை வணிகர்கள் பெற்றுக் கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையால் சி படிவமின்றி பொருள்களின் மீதான மாநிலங்களுக்கு இடையேயான விற்பனையை மேற்கொள்ளும் வணிகர்களுக்கு கூடுதல் சுமை தவிர்க்கப்படும் என தனது அறிவிப்பில் ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார்.
முக்கிய பிரச்னைகள்: நிதிநிலை அறிக்கையில் ரூ.650 கோடிக்கு வரிச் சலுகைகள் அறிவிக்கப்பட்டிருந்த போதும், பிரதானத் துறைகளுக்குத் தேவையான நிதி
ஒதுக்கப்பட்டுள்ளது. தொழில் துறையினரை ஊக்குவிக்கவும், புதிதாகத் தொழில் தொடங்குவோர் எளிதாக அனுமதிகளைப் பெறும் வகையில் ஒற்றைச் சாளர முதலீட்டாளர் இணையதளம் வரும் நிதியாண்டில் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சென்னையில் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வரும் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டங்களைத் தொடர்ந்து, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களிலும் அத்தகைய திட்டங்கள் ரூ.1,947 கோடியில் செயல்படுத்தப்படும் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
வேளாண் துறைக்கு அதிக நிதி: முதன்மைத் துறைகள் என்று அழைக்கப்படும் வேளாண்மை போன்ற துறைகளுக்கு கடந்த நிதியாண்டுகளைக் காட்டிலும் அதிகமாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வேளாண்மைத் துறைக்கு இதுவரை இல்லாத அளவில் ரூ.6,613.68 கோடியும், உணவு மானியத்துக்கு ரூ.5,300 கோடியும், நெடுஞ்சாலைத் துறைக்கு ரூ.8,228.24 கோடியும், சுகாதாரத் துறைக்கு ரூ.8,245.41 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து சமூக பாதுகாப்புத் திட்டங்களுக்கும் நிதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், வரும் நிதியாண்டில் வருவாயில் பற்றாக்குறை ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ரூ.4,616.02 கோடி அளவுக்கு வருவாயில் பற்றாக்குறை ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த நிதிநிலை அறிக்கை வருவாய் பற்றாக்குறையைக் கொண்டதாக உள்ளது. கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் ரூ.211 கோடி அளவுக்கு வருவாய் உபரி ஏற்படும் என மதிப்பிடப்பட்டிருந்தது. வணிக வரிகள் உள்பட சில முக்கியத் துறைகளில் வருவாய் அளவு குறைந்ததால் இந்த அளவுக்கு பற்றாக்குறை ஏற்படும் என நிதித் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
தமிழக நிதிநிலை அறிக்கை சிறப்பம்சங்கள்
* கொசு வலைகளுக்கான மதிப்புக் கூட்டு வரி முற்றிலும் ரத்து.
* உயிரி எரிபொருள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் மீதான வரி ரத்து.
* செல்லிடப்பேசிகளுக்கான மதிப்புக்கூட்டு வரி 14.5 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைப்பு.
* மோட்டார் பம்புகள், பாகங்கள், ஏலக்காய் ஆகியவை மீதான மதிப்புக் கூட்டு வரி குறைப்பு.
* அனைத்து மாவட்டங்களிலும் பன்றிக்காய்ச்சல், டெங்கு உள்ளிட்ட தொற்று நோய்களைக் கண்டறியும் வசதி.
* ராமநாதபுரம், தூத்துக்குடியில் ரூ. 1,947 கோடியில் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டங்கள்.
* நக்சலைட்டுகள் ஊடுருவ வாய்ப்புள்ள மலைப்பகுதிகளுக்கு சிறப்பு கவனம் அளிக்கும் வகையில் ரூ.75 கோடியில் சிறப்புப் பகுதி மேம்பாட்டுத் திட்டம்.
* தொழில் தொடங்குவதற்கான வழிமுறைகளை எளிமையாக்க ஒற்றைச்சாளர முதலீட்டாளர் இணையதளம்.
* உற்பத்தித் தொழிற்சாலைகளுக்கான 3 சதவீத உள்ளீட்டு வரி ரத்து.
* மீன்பிடி கயிறுகள், மிதவைகள், மீன்வலை முறுக்கு நூல் போன்ற மீன் பிடிப்புக்குப் பயன்படும் துணைப்பொருள்களுக்கு மதிப்புக் கூட்டு வரியிலிருந்து விலக்கு.
* எல்இடி விளக்குகளுக்கான மதிப்புக் கூட்டு வரி 14.5 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைப்பு.
* ஏரிகள், அணைக்கட்டுகள், வாய்க்கால்களைப் புனரமைத்தல் உள்ளிட்ட நீர்ப்பாசனத் துறை பணிகளுக்காக ரூ.3,727 கோடி நிதி ஒதுக்கீடு.
* தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு 67 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம்.
* நாட்டிலேயே முதல் முறையாக தரவு ஆய்வு மையம் (டேடா அனலடிக்ஸ் சென்ட்டர்).
* இலங்கை அகதிகள் நலனுக்காக ரூ.108 கோடி ஒதுக்கீடு.
* குறு, சிறு, நடுத்தரத் தொழில் துறைக்கு ரூ. 365 கோடி.
* சென்னை மாநகர வளர்ச்சித் திட்டத்துக்கு ரூ. 500 கோடி
* திறன்மிகு நகரங்கள் திட்டத்துக்கு ரூ. 400 கோடி.
* ரூ. 1,101 கோடியில் சென்னையில் மழைநீர் வடிகால் பணி.
* 60,000 பசுமை வீடுகள் கட்ட ரூ. 1,260 கோடி.
* 6,000 கி.மீ கிராமச் சாலைகள் அமைக்க ரூ. 1,400 கோடி.
* கிராமப்புற தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 15 லட்சம் கழிவறைகள்.
* 2 லட்சம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க ரூ. 150 கோடி.
* ரூ.5,500 கோடிக்கு பயிர்க் கடன் வழங்க இலக்கு.
* உரங்கள் கிடைப்பதை உறுதி செய்திட தமிழ்நாடு கூட்டுறவு இணையத்துக்கு ரூ.150 கோடி நிதி ஒதுக்கீடு.
முக்கியத் துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு
(ரூ.கோடியில்)
ஓய்வூதியம் 18,668.
பள்ளிக் கல்வி 20,936.50
நெடுஞ்சாலை 8,228.24
சுகாதாரம் 8,245.41
மின்சார மானியம் 7,136
வேளாண்மை 6,613.68
காவல் துறை 5,568.81
உணவு மானியம் 5,300
உயர் கல்வி 3,696.82
வறுமை ஒழிப்பு 862.40
மெட்ரோ ரயில் 615.78
டீசல் மானியம் 500
இலவச பஸ் பாஸ் 480
வரவு - செலவு (ரூ. கோடியில்)
வருவாய் வரவுகள் 1,42,681.33
வருவாய் செலவினங்கள் 1,47,297.35
வருவாய்ப் பற்றாக்குறை (-)4,616.02