Sunday 8 February 2015

வயிற்றுக்கு இதம் தரும் மணத்தக்காளி


தாவரவியல் பெயர்: Solanum nigrum
அடையாளம்: தமிழகத்தில் பரவலாகப் பயன்படுத்தப்படும் கீரை வகைகளில் ஒன்று. ஆசியா-ஐரோப்பாவை தாயகமாகக் கொண்ட இது, சிறிய செடி வகையைச் சேர்ந்தது. இதன் இலைகளைக் கீரையாகச் சமைத்துச் சாப்பிடலாம். சிவப்பு, கருப்பு நிறங்களில் காணப்படும் இதன் பழங்களை நிலக் காய்ச்சலில் காய வைத்து வற்றலாகப் பயன்படுத்தலாம்.
இனப்பெருக்கம்: விதைகளைக் கொண்டே இதை இனப்பெருக்கம் செய்ய முடியும்.
வரலாற்றில்: பிரிட்டனில் நெடுங்காலமாக இது இருந்ததற்கான சான்றுகள் உள்ளன. கி.பி. முதல் நூற்றாண்டைச் சேர்ந்த ரோம இயற்கையாளர் பிளினி, டிஸ்கார்டிஸ் உள்ளிட்டோர் இதைப் பற்றி குறிப்பிட்டுள்ளனர்.
கைமருத்துவ பயன்பாடு: அஜீரணம், இருமல், ஆஸ்துமா, வீக்கம், வயிற்றுப்புண், தோல் நோய்கள், காய்ச்சல், வாந்தி, பேதி உள்ளிட்டவற்றைக் குணப்படுத்த மணத்தக்காளி பயன்படுகிறது.
இலைகளைக் கீரையாகச் சமைத்துச் சாப்பிடுவதால் வாய்ப்புண், வயிற்றுப்புண், மலச்சிக்கல், வயிற்று உப்புசம் போன்றவை நீங்கும். இதற்குக் காரணம் அதில் உள்ள ஊட்டம், குடலுக்கு இதம் தரும் தன்மை, பசியை அதிகரிக்கும் தன்மையாலும்தான். தோல் நோய், மஞ்சள் காமாலை, ஆஸ்துமா, கண் பார்வை, நீர் பிரிதல் போன்றவற்றுக்கும் மணத்தக்காளி உதவும்.
மணத்தக்காளி இலைகளைத் துளசி அல்லது எலுமிச்சைச் சாற்றுடன் அரைத்துப் பூச, மூட்டுகளில் ஏற்படும் வலி, வீக்கம் குறையும். மணத்தக்காளிக் காயை அரைத்துப் பாலாடையுடன் கலந்து பூசினால் தேமல் மறையும்.
- நேயா





No comments:

Post a Comment