Saturday 21 February 2015

மருத்துவர் பரிந்துரையின்றி மருந்துகள் விற்பனை செய்தவருக்கு ஓராண்டு சிறை


மருத்துவரின் பரிந்துரையில்லாமல் மருந்து விற்ற, மருந்துக் கடை (மெடிக்கல்ஸ்) உரிமையாளருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து திருவாரூர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உதயமார்த்தாண்டபுரத்தில் ஆறுமுகநாதன் என்பவர் மருந்துக் கடை நடத்தி வந்தார். இவர் தனது கடையில் மருத்துவர் பரிந்துரையின்றி மருந்துகள் விற்பனை செய்வதாக பொதுமக்கள் சார்பில் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு மனு அனுப்பட்டது.
இதனடிப்படையில் அப்போதைய நாகை மாவட்ட மருந்துகள் ஆய்வாளர் ஆர். இளங்கோவன் கடந்த 26.9.2012 அன்று ஆறுமுகநாதனின் மருந்துக் கடையில் ஆய்வு நடத்தியபோது மருத்துவர் பரிந்துரையின்றி, மருந்தாளுநர் மேற்பார்வையின்றி, ரசீதுகளின்றி மருந்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து ஆறுமுகநாதன் மீது 6.6.2013 அன்று திருவாரூர் மாவட்ட முதன்மை உதவி நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.
வழக்குத் தொடுத்த மருந்துகள் ஆய்வாளர் இளங்கோ பணியிட மாற்றத்துக்குப் பிறகு மன்னார்குடி சரக மருந்துகள் ஆய்வாளர் ஆர். தனபால் வழக்கை நடத்தி வந்தார்.
இந்நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி ராமு ஆறுமுகநாதனுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை, ரூ. 20,000 அபராதம் விதித்து வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தார்.
ஆறுமுகநாதன் 6.3.2015 வரை முன்ஜாமீன் பெற்றுள்ளதால், ஜாமீன் காலம் நிறைவடைந்தபின் கைது செய்யப்படலாம் எனத் தெரிகிறது.

No comments:

Post a Comment