Monday 2 February 2015

வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தால் 2 ஆண்டுகள் சிறை: புதிய சட்டம் வருகிறது


வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருள் கொடுக்கப்படுவதை கடும் குற்றமாகக் கருதி 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க வழிவகை செய்யும் விதமாக புதிய சட்டம் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்கான மசோதாவை பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே தாக்கல் செய்ய மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.
உள்ளாட்சித் தேர்தல் முதல் நாடாளுமன்றத் தேர்தல் வரை அனைத்துத் தேர்தல்களிலும், வாக்காளர்களுக்குப் பணம், மது, வீட்டு உபயோகப் பொருள்கள், இதர பரிசுப் பொருள்கள் வழங்கப்படுவதைத் தடுப்பது குறித்து தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருகிறது.
தற்போது நடைமுறையில் உள்ள இந்திய தண்டனைச் சட்டம் 171பி/171இ ஆகிய பிரிவுகளின் கீழ், வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பவர்கள் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுப்பதற்கு வாரண்ட் தேவைப்படுகிறது.
இந்தப் பிரிவின் கீழ் கைது செய்யப்படுபவர்களுக்கு ஓராண்டு மட்டுமே சிறைத் தண்டனை வழங்க முடியும். இதில் ஜாமீனில் வெளிவருவதற்கான சாத்தியக்கூறுகளும் அதிகமாக உள்ளன.
எனவே, வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்படுவதைத் தடுக்க கடுமையான சட்டம் கொண்டு வருவது குறித்து பரிசீலிக்குமாறு மத்திய அரசுக்கு கடந்த 2012ஆம் ஆண்டு தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்தது.
இதன் அடிப்படையில் புதிய சட்டம் குறித்த முன்மொழிவை தேர்தல் ஆணையத்திடம் மத்திய உள்துறை அமைச்சகம் தற்போது அளித்துள்ளது. இதன்படி, வாக்காளர்களுக்குப் பணம், பரிசுப் பொருள் கொடுப்பது கடும் குற்றமாகக் கருதப்படும்.
மேலும், வாரண்ட் இல்லாமல் விசாரிக்க வழிவகுக்கும் சட்டப்பிரிவுகளின் கீழ் இந்தக் குற்றங்களைக் கொண்டு வரவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த சட்டப் பிரிவுகளின் மூலம், பணம் பதுக்கப்பட்டதாகத் தகவல் கிடைத்தவுடன் நீதிமன்ற அனுமதி இல்லாமல் சம்பந்தப்பட்ட இடங்களில் காவல் துறை அதிரடிச் சோதனை நடத்த முடியும்.
மேலும், குற்றம் சாட்டப்பட்டவர்களை வாரண்ட் இல்லாமல் கைது செய்யவும், அவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை அளிப்பதற்கும் புதிய மசோதா வழிவகுக்கிறது.
பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல்: இந்த மசோதாவை விரைவாகத் தயாரிக்குமாறு சட்டத் துறை அமைச்சக அதிகாரிகளுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து உள்துறை அமைச்சக உயர் அதிகாரி கூறுகையில், "நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் மசோதா தயாராகிவிட்டால், அதனை பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வில் தாக்கல் செய்ய திட்டமிடப்படுள்ளது' என்றார்.

No comments:

Post a Comment