Sunday 22 February 2015

துபாயில் 79 மாடி குடியிருப்பில் தீ - வீடுகளில் சிக்கியிருந்தவர்கள் பத்திரமாக மீட்பு


துபாயில் தீப்பற்றி எரிந்த அடுக்குமாடி குடியிருப்பு. | படம்- ராய்ட்டர்ஸ்
ஐக்கிய அரசு எமிரேட்ஸின் முக்கிய நகரமான துபாயில் உள்ள 79 மாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டது.
1105 அடி உயரமுள்ள இந்த கட்டிடம் உலகிலேயே மிக உயரமான, ஆடம்பரமான அடுக்குமாடி குடியிருப்புகளில் ஒன்றாகும். அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் உயிரிழப்போ, பெரிய அளவில் யாருக்கும் காயமோ ஏற்படவில்லை. புகையால் மூச்சுத்திணறல் ஏற்பட்ட சிலருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சனிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் கட்டிடத்தில் 50-வது தளத்தில் தீப்பிடித்துள்ளது. இதைத் தொடர்ந்து அடுத்தடுத்த தளங்களுக்கு தீ பரவியது. இதையடுத்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியை மேற்கொண்டனர். கட்டிடத்தில் தீப்பிடித்ததை அடுத்து வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் எழுந்து அலறி அடித்துக் கொண்டு வெளியேறினர். வெளியேற முடியாமல் சிக்கியவர்களை மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டனர்.
கட்டிடம் உயரமானது என்பதாலும், காற்று வீசியதாலும் எளிதாக தீயை அணைக்க முடியவில்லை. பல மணி நேர போராட்டத்துக்குப் பிறகுதான் தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டது. குடியிருப்பின் சுமார் 20 மாடிகள் முற்றிலுமாக நாசமாகிவிட்டன. கட்டிடத்தில் எரிந்த தீ சில கி.மீ. தொலைவு வரை தெரிந்ததாக சுற்றுவட்டார மக்கள் தெரிவித்துள்ளனர்.
குடியிருப்பின் அடுத்தடுத்த மாடிகளுக்கு தீ பரவியபோது ஜன்னல் கண்ணாடிகள் பெரும் சத்தத்துடன் வெடித்துச் சிதறி கீழே விழுந்தன. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலுமாக தடை செய்யப்பட்டது. பக்கத்தில் இருந்த அடுக்குமாடி கட்டடங்களில் இருந்தவர்களும் வெளியேற்றப்பட்டனர். அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. விபத்துக்கு காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவரவில்லை. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
தீ முற்றிலுமாக அணைக்கப்பட்ட பிறகு பக்கத்து அடுக்குமாடி குடியிருப்புகளை சேர்ந்தவர்கள் தங்கள் வீடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் துபாயில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தீப்பிடித்த கட்டிடத்தின் பெரும்பாலான பகுதிகள் உருக்குலைந்துவிட்டன. தீயினால் கட்டிடம் எந்த அளவுக்கு பலவீனமாகியுள்ளது என்பதை வல்லுநர்கள் குழு ஆராய இருக்கிறது. அதன் பிறகு அந்த கட்டிடத்தை மறுசீரமைப்பு செய்வதா அல்லது இடிக்க வேண்டுமா என்பது முடிவு செய்யப்படும்.
உலகில் அதிக உயரமான அடுக்குமாடி குடியிருப்புகள் கொண்ட பகுதிகளில் ஒன்றாக துபாய் உள்ளது. 2012-ம் ஆண்டில் இங்குள்ள 34 மாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டது. சிகரெட்டில் இருந்த தீ அணைக்கப்படாமல் வீசப்பட்டதே அந்த விபத்துக்கு காரணம் என பின்னர் தெரியவந்தது.-ஏ.எப்.பி.

No comments:

Post a Comment