Monday 23 February 2015

விவசாயிகள் நலனை அரசு காத்திடும்: குடியரசுத் தலைவர் உரையின் முக்கிய அம்சங்கள்


நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உரை.
தேச அளவிலான அரசியல் களத்தில், நிலம் கையகப்படும் சட்ட விவகாரம் வலுத்துள்ள நிலையில், விவசாயிகள் நலன் காத்திடும் அத்தனை முயற்சிகளையும் மத்திய அரசு மேற்கொள்ளும் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று காலை தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உரையாற்றினர்.
இந்த உரையில், சர்ச்சைக்குரிய நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவருவது குறித்த அறிவிப்பு ஏதும் இல்லை. எனினும், இந்தச் சட்டம் குறித்து பேசும்போது, விவசாயிகள் நலன் பாதுகாக்கப்படும் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நம்பிக்கை தெரிவித்தார்.
குடியரசுத் தலைவர் உரையின் முக்கிய அம்சங்கள்:
நாடாளுமன்றத்தின் மரபுகள் பேணப்படும். கூட்டத்தொடர் சுமுகமாக நடத்தப்படும்.
உள்நாட்டிலும், வெளிநாட்டு வங்கிகளிலும் கருப்புப் பணம் பதுக்கலை தடுக்க அரசு அனைத்து தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்.
அண்டை நாடுகளுடன் சுமுக உறவைப் பேணுவதில் இந்தியாவின் எதிர்கால நலன் இருக்கிறது என்பதை உணர்ந்து அதற்கேற்ப அரசு இயங்குகிறது.
மேற்கு ஆசியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா நாடுகளுடனான உறவை மேம்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வெளிநாடு வாழ் இந்தியர்கள் நலனில் அரசு உரிய கவனம் செலுத்தி வருகிறது.
நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ள தீவிரவாதத்தை வேரறுக்க அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தேசிய நதி நீர் இணைப்புத் திட்டங்களை உரிய ஆலோசனையின் பேரில் நிறைவேற்ற அரசு முனைப்புடன் உள்ளது.
* இந்த அரசு ஆட்சிக்கு வந்த பிறகு பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.17 வரை குறைக்கப்பட்டுள்ளது.
சட்டத்துறையில் சீர்திருத்தங்கள்
நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி 7.4% என்ற இலக்கை நோக்கி முன்னேறி வருவது இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கு நல்ல முன்மாதிரியாகும்.
* தேசிய நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் இறுதி வடிவம் பெற்றுள்ளது. விரைவில் ஸ்மார்ட் நகரங்கள் உருவாக்கும் பணி தொடங்கும்.
* நீதிபதிகள் நியமனக் குழு உள்ளிட்ட சட்டத்துறை சீர்திருத்தங்களை இந்த அரசு மேற்கொண்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய நேரடி மானிய திட்டமாக இந்தியாவின் சமையல் எரிவாயு மானியதிட்டம் உள்ளது.
2020-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அனைவருக்கும் வங்கிக் கணக்கை தொடங்கும் 'ஜன் தன்' திட்டம் 100% எட்டவுள்ளது. 6 மாத காலத்தில் இது சாத்தியமாகியுள்ளது.
*திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோரை ஊக்குவிப்பதற்கான துறை ஒன்றை இந்த அரசு ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் ஏராளமானோர் பயன் பெறுவர்.
*நாட்டின் அடிமட்டத்தில் இருக்கும் ஏழை, எளிய மக்களுக்கும் நலம் பயக்கும் வகையில் வளர்ச்சி காண்பதே இந்த அரசின் நோக்கம்.
நிலம் கையகப்படுத்தும் சட்டம்...
நிலம் கையகப்படுத்தும் சட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், அவர்களது குடும்பத்தார் நலனைப் பேணுவதில் அரசு முழுமுதற் கவனம் செலுத்துகிறது.
விவசாயிகள் நலன் பாதுகாக்கப்படும் வகையில், நிலம் கையகப்படுத்துதலில் வெளிப்படைத்தன்மையை கடைபிடித்தல் மற்றும் நியாயமான நிவாரணம் பெறுவதற்கான உரிமையைப் பேணுதல் ஆகியனவற்றை உறுதி செய்யும் வகையில் புனர்வாழ்வு மீள்குடியேற்றம் சட்டத்தில் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன்மூலம், அத்தியாவசிய கட்டமைப்புப் பணிகளை மேற்கொள்ளும்போது நிலம் கையகப்படுத்துவதில் இருக்கும் நடைமுறைச் சிக்கல்களை கணிசமாக குறைக்க வழிவகை செய்யப்படும்.
வளர்ச்சிப் பாதையில் பொருளாதாரம்
*அனைத்து எம்.பி.க்களும் தங்கள் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 50% பணத்தை தொகுதியின் தூய்மைப் பணிகளுக்காக செலவிட வேண்டும்.
அரசாங்கத்தின் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளால், இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் செல்கிறது.
* நாட்டின் பணவீக்கம் வரலாறு காணாத அளவுக்கு குறைந்துள்ளது. அதிலும், அரசின் நடவடிக்கைகளால் மொத்த விற்பனை பணவீக்கம் 3 மாத இடைவெளியில் இரண்டாவது முறையாக மைனஸ் அளவில் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment