Wednesday 4 February 2015

வாகன பெருக்கத்துக்கேற்ப சாலை வசதி இல்லாததால் அதிகரிக்கும் விபத்துகள்


திருவாரூர் மாவட்டத்தில் வாகன பெருக்கத்துக்கேற்ப சாலை வசதிகள் இல்லாததால், விபத்து நிகழ்வுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
திருவாரூர் மாவட்டத்தில் 9 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் உள்ள நிலை யில், சுமார் 3 லட்சம் இருசக்கரம், நான்கு சக்கரம் உள்ளிட்ட மோட்டார் வாகனங்கள் இருக்கும் என மதிப்பிடப்படுகிறது.
கிழக்குக் கடற்கரை சுற்றுலா மற்றும் புனிதத் தலங்களுக்கு செல்ல திருவாரூர் பிரதான சாலையாக இருப்பதால், வெளிமாநிலம் மற்றும் மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா, சரக்கு வாகனங்கள் வந்து செல்கின்றன. ஆனால், அதற்கேற்ற சாலை வசதிகள் இல்லையென்று நிச்சயமாக கூறலாம். இருக்கும் சாலைகளோ கவலை தரும் வகையில் உள்ளன. இதனால் ஏற்படும் விபத்துகளால் உயிரிழப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
திருவாரூர் நகரில் பொது வழிப்பாதையில் பேருந்து நிலையம் அமைந்துள்ளதால், பேருந்துகள் மட்டுமன்றி, கனரக வாகனங்களும் நகருக்குள் பயணிக்கின்றன. இதனால், போக்குவரத்து நெரிசல் அதிகமாகி ஏற்படும் விபத்துகளால் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. திருவாரூர் நகரத்தில் மட்டும் கடந்த 15 நாள்களில் ஏற்பட்ட விபத்துகளில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்தோர் ஏராளம்.
மாவட்டத்தில் மாநிலச் சாலைகள் கிராமச் சாலைகள் போலவும், தேசிய நெடுஞ்சா லைகள் மாநிலச் சாலைகள் போலவும் காட்சி அளிக்கின்றன. தஞ்சாவூர் - திருவாரூர் - நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலையாக அமைக்க பல ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரையில் எந்த முன்னேற்றமும் இல்லை. இதேபோல், திருவாரூர் அரைவட்டச் சுற்றுச்சாலை திட்டமும் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
நகரில் வணிக நிறுவனங்கள் உள்ள மிகக் குறுகிய சாலை வழியாக அதிகளவிலான வாகனங்கள் இயக்கப்படுவதால் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் மற்றும் தொடர்புடையத் துறையினர் சாலை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு விபத்துகளை கட்டுக்குள் கொண்டு வரவேண்டும்.

No comments:

Post a Comment