Sunday 1 February 2015

பசுமை வீடு கட்டலாமா?


இயற்கையின் வளத்தைச் சுரண்டாமலும், சூழலுக்குப் பாதிப்பு இல்லாத வகையிலும் கட்டிடம் அமைப்பதன் அவசியத்தைப் பெரும்பாலானோர் இப்போது உணரத் தொடங்கயிருக்கின்றனர். இந்த நோக்கத்தை முன்வைத்து, இயற்கையை எந்தவகையிலும் பாதிக்காமல் அதனுடைய வளத்தைப் பயன்படுத்திக் கொள்ளும் வீடுகளைத்தான் பசுமை வீடுகள் என்கிறோம்.
ஆனால், இந்தப் பசுமை வீடுகளைப் பற்றிய அறிமுகம் இல்லாமலேயே பண்டைய தமிழர்கள் கட்டிய வீடுகள் பசுமைக் கட்டிடக் கலையைப் பறைசாற்றும் வகையில் இருந்திருக்கின்றன. திண்ணை, முற்றம், உயரமான ஜன்னல், வராந்தா என இயற்கைக் காற்றோட்டத்துக்கும், வெளிச்சத்துக்கும் பஞ்சமல்லாத வகையில் அந்த வீடுகள் அமைந்திருந்தன.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, அவைதான் பசுமை வீடுகளுக்கான சிறந்த முன்னுதாரணங்களாக இன்றளவும் இருக்கின்றன. ஒரு கட்டிடத்தைக் கட்டி முடித்தபின் அதைப் பசுமைவீடாக மாற்றுவதைவிட அதைக் கட்டும்போதே அதற்கான திட்டமிடலைச் செய்வதுதான் சிறந்தது. பசுமை வீட்டை அமைப்பதற்கான சில வழிமுறைகள்.
கட்டுநர்களின் கவனத்துக்கு
கட்டுநர்கள் கட்டுமானங்களை வடிவமைப்பதற்கு முன்னர் மரங்கள், கிணறுகள் போன்ற இயற்கை வளங்களுக்குப் பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்வது அவசியம். பெரும்பாலான பெரிய அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கட்டும்போதே ETP(Effulient Treatment Plant) RO(Riverse Osmosis) போன்ற கழிவு நீர் மற்றும் உப்பு நீர் சுத்திகரிப்பு அமைப்புகளை அமைக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.
ஆனால், தனிவீடுகளாகக் கட்டும்போது இடவசதி, பொருட்செலவு போன்றவற்றைக் காரணம் காட்டி இந்த அமைப்புகளைத் தவிர்த்துவிடுகிறார்கள். இந்த அமைப்புகளின் அவசியத்தை வீடுகட்டுபவர்களுக்கு எடுத்துச்சொல்வது கட்டுநர்களின் கடமை. அதேமாதிரி, இப்போது கட்டுமானங்களில் சிமெண்ட்டை மட்டும்தான் பிரதானமாகப் பயன்படுத்தி வருகிறோம். சிமெண்ட் உற்பத்தியில் பெருமளவு கார்பன்-டை- ஆக்ஸைடு வெளியேறுகிறது.
இதைக் குறைப்பதற்கு சிமெண்ட்டுக்கு மாற்றாக நிலக்கரிச் சாம்பல், சிலிகாஃபியூம், வார்ப்புகளிலிருந்து கிடைக்கும் மணல், இரும்புக் குழம்பு கலந்த ஸ்வாக் போன்ற பொருட்களை கான்கிரீட் தயாரிக்கும்போது ஒரு பகுதியாக சிமெண்ட்டுடன் சேர்த்துக்கொள்ளலாம்.
ஆற்றல் பயன்பாடு
ஒரு கட்டிடத்தில் வசிப்பதற்குப் பலவிதமான ஆற்றல்கள் தேவைப்படுகின்றன. இவற்றை நாம் பயன்படுத்தும் விதத்தில்தான் பசுமை வீட்டின் அடிப்படைகள் தீர்மானிக்கப்படுகின்றன. வீட்டில் அதிகமாகப் பயன்படுத்துவது மின்சக்திதான்.
ஒரு வீட்டின் மின்சாரத் தேவையைக் குறைக்க வீடுகட்டும்போதே வெளிச்சமும், காற்றோட்டமும், போதுமான தட்பவெப்பநிலையும் இருக்குமாறு வடிவமைக்க வேண்டும். வீட்டுக்குள் வெளிச்சமும், காற்றோட்டமும் இருந்தால் பகலில் மின்சாரத்தின் தேவை குறையும். அத்துடன் மின்சாரத்துக்கு மாற்றாக சூரிய ஆற்றலையும் வீட்டுக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
மறுசுழற்சி
பசுமைக் கட்டிடத்தின் முக்கியமான அம்சம் தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதுதான். மறுசுழற்சி செய்யப்படும் நீரைப் பல்வேறு விதமாக உபயோகப்படுத்தும் முறைகளைப் பசுமை வீடுகளில் பின்பற்றப் பட வேண்டும். மறுசுழற்சி செய்த தண்ணீரைத் தோட்டங்களுக்கும், கழிவறைகளுக்கும் உபயோகிக்கலாம். தண்ணீரை மட்டுமல்லாமல் வீடுகளில் பயன்படுத்தும் பல்வேறு பொருட்களையும் இந்த மறுசுழற்சி முறைக்கு உட்படுத்தலாம்.
கூரை வடிவமைப்பு
கான்கிரீட் தளங்கள் அமைப்பதுதான் இப்போது சுலபமானதாக இருக்கிறது. ஆனால், கான்கிரீட் தளங்கள் வெப்பத்தை வீட்டுக்குள் பரப்பும் தன்மையுடன் இருக்கின்றன. இதற்கு மாற்றாக, ஜேக் ஆர்ச்(Jack Arch) கூரைகளை அமைக்கலாம். இவை செங்கற்களைக் கொண்டு வளைவான அமைப்பாக உருவாக்கப்படுபவை.
இந்த ஜேக் ஆர்ச் மேல்கூரைகளை அமைப்பதற்கு நேரம் அதிகம் செலவானாலும் பட்ஜெட் குறைவுதான். கான்கிரீட் தளங்கள் அமைப்பதற்கு என்ன பட்ஜெட் ஆகிறதோ, அதேதான் ஆகும்.

No comments:

Post a Comment