திருக்குறளை சீனம், அரபு மொழிகளில் மொழி பெயர்க்கும் பணிகள் முடிந்துள்ளதாக தமிழ் வளர்ச்சி, செய்தித் துறை செயலாளர் மூ. ராசாராம் தெரிவித்தார்.
தமிழ் வளர்ச்சித் துறையும், மதுரை உலகத் தமிழ்ச் சங்கமும் இணைந்து சென்னை அரசு அருங்காட்சியகத்தில் உலகத் தாய்மொழி நாள் விழாவை சனிக்கிழமை கொண்டாடின.
விழாவுக்கு தலைமை தாங்கி தமிழ் வளர்ச்சி, செய்தித் துறை செயலாளர் மூ. ராசாராம் பேசியதாவது:
கடந்த 4 ஆண்டுகளில் தமிழின் வளர்ச்சி சிறப்பாக உள்ளது. எப்போதும் இல்லாத அளவுக்குக் கடந்த மூன்றரை ஆண்டுகளில் தமிழ் மொழி வளர்ச்சிக்காக ரூ.300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழின் சிறப்புகளை பிற நாட்டு அறிஞர்களும் எடுத்துரைத்துள்ளனர். மதத்தைப் பரப்ப வந்தவர்கள் கூட தமிழை நேசித்தனர். தமிழுக்கு 11 ஆயிரம் ஆண்டு வரலாறு உள்ளது.
ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து ஆகிய நாடுகளில் வாழும் அபோரிஜின்கள், மோரீஷஸ் நாட்டு மக்களுக்கும் தமிழர்களுக்கும் உருவ ஒற்றுமை உள்ளது. அந்த நாடுகள் கடலில் மூழ்கிய குமரிக் கண்டத்தின் பகுதிகளாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
மொழியை அழித்து விட்டால் இனம் அழிந்து விடும். சிங்கப்பூர், மலேசியாவில் தேசிய மொழியாக தமிழ் உள்ளது. தாய் மொழியில் படித்தால்தான் சிறப்பு. இந்தியாவில் 4 வகையான மொழிக் குடும்பங்கள் உள்ளன. தென்னிந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளுக்கும் தாய் தமிழே.
தமிழகத்தில் 36 வகையான பழங்குடியினர் உள்ளனர். வேலை தேடி வெளி இடங்களுக்குச் செல்வது, இடம் பெயர்வது போன்ற காரணங்களால் அவர்களது மொழிகள் அழிந்து வருகின்றன. அவற்றின் மீதும் நாம் கவனம் செலுத்த வேண்டும்.
தமிழை அடுத்த நூற்றாண்டுக்கு கொண்டு செல்ல வேண்டுமானால் கணினியில் தமிழைச் சேர்க்க வேண்டும். மின்னஞ்சல், குறுஞ்செய்திகளை தமிழில்தான் அனுப்ப வேண்டும்.
உலகப் பொதுமறையான திருக்குறளை அதிகம் பேர் பேசும் சீனம், அரபு மொழிகளில் மொழி பெயர்க்க அரசு உத்தரவிட்டிருந்தது. மொழி பெயர்ப்புப் பணிகள் தற்போது நிறைவுற்றுள்ளன. அதேபோல, பாரதியார், பாரதிதாசன் பாடல்களையும் சீனம், அரபு மொழிகளில் மொழி பெயர்க்கும் பணிகள் முடிந்துள்ளன என்றார் ராசாராம்.
விழாவில் சிறப்புரையாற்றிய "தினமணி' ஆசிரியர் கே. வைத்தியநாதன் பேசியதாவது:
தாய் மொழிப் போராட்டத்தை முதலில் தொடங்கி வைத்தவர்கள் தமிழர்கள்தான் என்பது பரவலாக அறியப்படவில்லை. மேற்கு பஞ்சாப், சிந்து பகுதிகளும், கிழக்கு வங்காளமும் இணைந்து பாகிஸ்தான் உருவானது. அப்போது பாகிஸ்தான் ஆட்சி அதிகாரத்தில் பஞ்சாப் பகுதியைச் சேர்ந்தவர்களே அதிகம் இருந்தனர்.
பாகிஸ்தானுக்கான ஆட்சி மொழி அறிவிக்கப்பட்ட போது, வங்க மொழி புறக்கணிக்கப்பட்டது. இதைக் கண்டித்து 1952-ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தில் 4 வங்க இளைஞர்கள் உயிரிழந்தனர். அதன் நினைவாகத்தான் "உலகத் தாய்மொழி நாள்' அனுசரிக்கப்படுகிறது.
ஆனால், அதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே, 1937-ஆம் ஆண்டு தமிழகத்தில் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்றது. தாய்மொழிக்காக நடத்தப்பட்ட முதல் போராட்டம் அதுதான். வரலாற்றை எழுதியவர்கள் தென்னகத்தைப் புறக்கணித்து விட்டனர். அதில் ஒன்று தமிழ் மொழிக்கான போராட்டத்தைப் பதிவு செய்யாமல் விட்டதாகும்.
இன்னும் 100 ஆண்டுகளில் 25 மொழிகள் அழியும் நிலையில் உள்ளன என்று ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. இந்த 25 மொழிகளில் 8-ஆவது இடத்தில் தமிழ் உள்ளது.
காரணம் என்ன? சொந்த மக்களால் கைவிடப்படுவது, வேற்று மொழியின் ஆதிக்கம் அதிகரித்து மொழியின் கழுத்து நெரிக்கப்படுவது, மொழியைப் பயன்படுத்தாமல் ஒதுக்கிவிடுவது, தாய் மொழி மதிப்பு குறைவானது என அந்த மொழியினரே கருதுவது உள்ளிட்ட காரணங்களாலே மொழி அழியும் நிலைக்குத் தள்ளப்படுகிறது.
இவையனைத்தும் தமிழுக்கு நேர்ந்து வருகிறது என்று நான் எச்சரிக்க விரும்புகிறேன். மொழியை இழந்துவிட்டால், நம் அடையாளத்தை இழந்துவிடுவோம்.
இந்தியாவில் கடந்த 50 ஆண்டுகளில் 220 மொழிகள் அழிந்துள்ளன. அந்த நிலை தமிழுக்கு நேர்ந்துவிடக்கூடாது.
பேசும்போது, இயன்றவரையில் தமிழ்ச் சொற்களை பயன்படுத்த வேண்டும் என்பதை நாம் இயக்கமாக மாற்ற வேண்டும்.
ஆங்கிலம் உள்ளிட்ட பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ் வார்த்தைகளை கண்டுபிடிக்க வேண்டும்.
தாய்மொழிக் கல்வி: இப்போது ஆயிரக்கணக்கில் ஆங்கில மழலையர் பள்ளிகள் தொடங்கப்படுகின்றன. அடிப்படைக் கல்வி தமிழில் மட்டுமே இருக்க வேண்டும். உயர் கல்வியை ஆங்கிலத்தில் படித்துக் கொள்ளலாம். அடிப்படைக் கல்வியை தாய்மொழியில் பெற்றால்தான் புரிதல் ஏற்படும். சாதனை புரிந்த அப்துல் கலாம், சர்.சி.வி. ராமன் போன்ற பலரும் ஆரம்பக் கல்வியை தமிழில் பயின்றவர்கள்தான்.
தமிழில் பேசுவோம், தாய்மொழியில் பேசுவோம் என்று தமிழகம் முழுவதும் ஒவ்வோர் ஊரிலும் உள்ள தமிழ் ஆர்வலர்களும், மாணவர்களும் இயக்கமாக முன்னெடுத்துச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. நமது தலைமுறையுடன் தமிழை அழிந்து போக விட்டுவிட முடியாது. தாய்மொழி அழிந்தால் நமது இனத்தின் அடையாளம் அழிந்துவிடும் என்பதை மறந்து விடாதீர்கள்.
"பேசும்போது இயன்றவரையில் தமிழ்ச் சொற்களை பயன்படுத்துவேன்' என்ற உறுதிமொழியை உலகத் தாய் மொழி தினத்தில் அனைவரும் ஏற்கவேண்டும் என்றார் அவர்.
முன்னதாக அலுவலகக் கோப்புகளில் தமிழ் மொழியைச் சிறப்பாகப் பயன்படுத்தியதற்காக கூட்டுறவு சங்கத்தின் துணைப் பதிவாளர் (கடன் அற்றவை) க. பத்மஜாவுக்கு கேடயம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கவியரங்கமும் கருத்தரங்கமும் நடைபெற்றன.
நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் கா.மு.சேகர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் கோ. விசயராகவன், மதுரை உலகத் தமிழ்ச் சங்க தனி அலுவலர் (பொறுப்பு) பசும்பொன், தமிழ் வளர்ச்சித் துறை துணை இயக்குநர் கோ. செழியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.