Tuesday, 17 June 2014

சூரிய மின்சக்திக்கு அரசு மானியம் உண்டா?

(கோப்புப் படம்/என்.ஸ்ரீதரன்)

சூரிய மின்சக்தி குறித்த தகவல்களை எங்கே பெறலாம்?
சூரிய மின்சக்தி குறித்து தெரிந்துகொள்ள, தமிழக எரிசக்தித் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். கூடுதல் விவரங்களை www.teda.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
 
சென்னை தவிர மற்ற மாவட்டத்தினர் யாரை தொடர்பு கொள்வது?
சென்னையைத் தவிர மற்ற மாவட்டத்தினர், அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஊரக வளர்ச்சித் துறை அலுவலகத்தில் தொடர்பு கொள்ளலாம் அல்லது சென்னை தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை அலுவலகத்தை 044-28224830, 28236592, 28222973 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
 
சூரிய மின்சக்தி சாதனங்கள் பொருத்த தனியார் நிறுவனங்களை தொடர்பு கொள்ளலாமா?
சூரிய மின்சக்திக்கான சாதனங்கள் விற்கும் கடைகள், நிறுவனங்களை பொதுமக்கள் அணுகலாம். தனியார் நிறுவன முகவரி தெரியாதவர்கள், தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையைத் தொடர்பு கொண்டு சூரியமின் சக்தி பிரிவு அதிகாரிகளை சந்தித்தால், அவர்கள் மூலம் சூரிய மின்சக்தி பொருத்தும் முறைகளைத் தெரிந்து கொள்ளலாம்.
 
சூரிய மின்சக்தி சாதனங்கள் பொருத்த அரசின் மானியம் உண்டா?
சூரிய மின்சக்தி சாதனங்கள் பொருத்த ஆகும் செலவில், மத்திய அரசு சார்பில் 30 சதவீதம் மானியம் கிடைக்கும். இதை தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை மூலமே பெற முடியும்.
 
தமிழக அரசின் மேற்கூரை சூரிய மின் திட்டம் என்பது என்ன?
தமிழக முதல்வரின் மேற்கூரை சூரிய மின்சக்தி திட்டத்தில், ஒரு கிலோவாட் சூரியசக்தி மின் உற்பத்தி உபகரணங்களை பொருத்தி, அதில் உற்பத்தியாகும் மின்சாரம், மின் வாரிய கேபிளுடன் இணைத்து பயன்படுத்தப்படும். இத்திட்டத்துக்கு மத்திய அரசின் 30 சதவீத மானியத்துடன், தமிழக அரசின் சார்பில் 20 சதவீதம் கூடுதல் மானியம் கிடைக்கும்.
 
நெட் மீட்டர் (இருவழிக் கணக்கீடு) என்பது என்ன?
சூரிய மின்சக்தி பொருத்தும் இடங்களில், நெட் மீட்டர் எனப்படும் இருவழிக் கணக்கீடு மீட்டர் பொருத்தப்படும். இருவழிக் கணக்கீடு மீட்டர் மூலம், சூரிய மின்சக்தி உற்பத்தியின் அளவு மற்றும் சம்பந்தப்பட்ட மின் இணைப்பில் பயன்படுத்திய மின்சார அளவு ஆகிய இரண்டும் ஒரே நேரத்தில் கணக்கிடப்படும்.
 
தமிழக அரசின் சூரிய மின்சக்தி திட்டத்தில் யாருக்கு அனுமதி உண்டு?
தமிழக அரசின் மேற்கூரை சூரியசக்தி திட்டத்தில் வீடுகள், வணிக நிறுவனங்களுக்கு மட்டும் அனுமதி உண்டு. ஒரு இணைப்புக்கு ஒரு கிலோவாட் மட்டுமே மானியத்துடன் அனுமதி கிடைக்கும். மற்றவர்கள் மத்திய அரசின் மானியத்துடன் மட்டும், எத்தனை கிலோவாட் வேண்டுமானாலும் சூரியசக்தி பொருத்தலாம்.

No comments:

Post a Comment