Monday, 16 June 2014

ஆதார் அட்டை திட்டத்தைக் கைவிட முடிவு?

கோப்பு படம்

 
ஆதார் அட்டை திட்டத்தைக் கைவிட மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
 
கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் ஆதார் அட்டை திட்டம் கொண்டு வரப்பட்டது. இத் திட்டத்தை செயல்படுத்த தனி ஆணையம் அமைக்கப்பட்டது.
இந்த ஆணையம் சட்ட அங்கீகாரம் இன்றி தொடங்கப்பட்டிருப்பதாக பல்வேறு தரப்பில் குற்றச்சாட்டுகள் எழுந்தன. குறிப்பாக பிரவீண் தலால் உள்ளிட்ட சட்ட நிபுணர்கள் ஆணையத்தின் அரசியல் சாசன அந்தஸ்து குறித்து ஆரம்பம் முதலே கேள்வி எழுப்பி வருகின்றனர்.
 
இதுதவிர ஆதார் அட்டை திட்டத்தை முழுவதுமாக ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்திலும் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அரசின் சலுகைகளைப் பெற ஆதார் அட்டையை கட்டாயப்படுத்தக்கூடாது என்று கண்டிப்புடன் உத்தரவிட்டது.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு ஆதார் அட்டை திட்டத்தை தொடருவதா, வேண்டாமா
என்பது குறித்து தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
 
இதுதொடர்பாக மத்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு அலுவலகத்தில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் அண்மையில் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஆதார் அட்டை திட்டத்தைக் கைவிட பெரும்பாலானோர் பரிந்துரைத்ததாகக் கூறப்படுகிறது. இந்தப் பரிந்துரைகள் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பப்பட்டுள்ளன.
மேலும் இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி. அச்சுதன் சில நாட்களுக்கு முன்பு பிரதமருக்கு அனுப்பிய கடிதத்தில், அமெரிக்காவின் உளவுப் பிரிவான தேசிய பாதுகாப்பு அமைப்பு (என்.எஸ்.ஏ.), ஆதார் அட்டைக்காக சேகரிக்கப்பட்ட ரகசிய தகவல்களை திருடியிருப்பதாக தெரிவித்துள்ளார்.
 
இந்தப் பின்னணியில் ஆதார் அட்டை திட்டத்தை ரத்து செய்வது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
எனினும் இதற்கு மாற்றாக அனைத்து குடிமக்களுக்கும் பன்நோக்கு தேசிய அடையாள அட்டை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இத் திட்டம் மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலகத்தில் ஒப்படைக்கப்படும் என்றும் இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றும் டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment