Saturday, 14 June 2014

இன்று குருதிக் கொடையாளர் தினம்

 

கோப்பு படம்
கோப்பு படம்
 
இன்று உலகம் முழுவதும் குருதிக் கொடையாளர் தினம் கொண்டாடப்படுகிறது.
 
அறிவியல் வளர்ச்சி காரணமாக மனிதர்களுக்கு நோயால் ஏற்படும் உயிரிழப்பு வெகுவாக குறைக்கப்பட்டுவிட்டது. ஆனால், விபத்துகளால் உயிரிழப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. விபத்து காலங்களில் மனிதன் முதலில் அதிக குருதிப் போக்கை சந்திக்கிறான்.
 
மருத்துவத் துறையில் ஏற்பட்ட தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக குருதி அணுக்கள் பிரிக்கப்பட்டு டெங்கு மற்றும் புற்று நோயால் பாதிக்கப்பட்டோர் சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. பேறு காலத்தில் அதிக குருதிப் போக்கால் தாய்மார்கள் உயிரிழப்பதை குறைக்கவும் குருதி தேவைப்படுகிறது.
அறிவியல் வளர்ச்சியால் பல்வேறு சாதனைகளைப் படைத்த மனிதனால் இன்று வரை செயற்கையாக குருதியை உருவாக்க முடியவில்லை. அதனால் இதை, ஒருவர் உடலில் இருந்து எடுத்து மற்றவர்களுக்கு பயன்படுத்த வேண்டியுள்ளது. இங்குதான் குருதிக் கொடை முக்கியத்துவம் பெறுகிறது. குருதிக் கொடை வழங்கும் ஒவ்வொரு வரும் கதாநாயகன்தான் என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. குருதிக் கொடை குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், குருதிக் கொடை அளிப்போரை கவுரவிக்கும் வகையிலும் உலக சுகாதார நிறுவனம் கடந்த 2004-ம் ஆண்டு ஜூன் 14-ம் தேதி முதல் உலக குருதிக் கொடையாளர் தினத்தை அறிவித்து, ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறது.
 
உலகம் முழுவதும் மொத்த மக்கள் தொகையில் 18 சதவீதம் பேர் ஆண்டுதோறும் குருதிக் கொடை வழங்குகின்றனர். இந்த வகையில் ஆண்டுதோறும் 10.80 கோடி அலகுகள் குருதிக் கொடையாக பெறப்படுகிறது. இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் 18 முதல் 24 வயதுக்கு உள்பட்டவர்கள் 41 சதவீதம் பேரும், வளர்ச்சி அடைந்த நாடுகளில் 20 சதவீதம் பேரும் குருதிக் கொடை வழங்குகின்றனர். இத்தகவல் உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் ஒரு கருத்தை தெரிவித்து குருதிக் கொடையை ஊக்குவித்து வருகிறது. இந்த ஆண்டு “தாய்மார்களை காப்பாற்ற பாதுகாப்பான குருதி” என்ற கருத்தை முன்னிறுத்தி குருதிக் கொடையாளர் தினத்தை கொண்டாடுகிறது.
 
உலகம் முழுவதும் ஒவ்வொரு நாளும் 800 தாய்மார்கள் பேறு காலத்தின்போது ஏற்படும் குருதிப் போக்கால் உயிரிழக்கின்றனர். இதைத் தடுக்க வேண்டுமென்றால் குருதிக் கொடையாளர்கள் குருதி வழங்க வேண்டும் என்ற நோக்கில் மேற்கூறிய கருத்தை உலக சுகாதார நிறுவனம் முன்னிறுத்தியுள்ளது.
 
கடந்த 1999- 2001-ம் ஆண்டுகளில் நடைபெற்ற பிரசவங்களில் 1 லட்சம் பிரசவத்திற்கு 327 பேர் பேறு கால குருதிப் போக்கால் உயிரிழந்துள்ளனர். இதை குறைக்கும் விதமாக மத்திய அரசு, தேசிய ஊரக சுகாதார இயக்கத்தை (என்.ஆர்.எச்.எம்.) தொடங்கி கர்ப்பிணித் தாய்மார்கள் கட்டாயம் மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில்தான் பிரசவம் செய்துகொள்ள வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக 2007-2009-ம் ஆண்டுகளில் இறப்பு 212 ஆக குறைந்துள்ளது. தற்போது இந்த அளவு மேலும் குறைந்திருக்கும் என்று சுகாதாரத் துறையினர் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் தன்னார்வ குருதிக் கொடை பிரிவு ஆலோசகர் சம்பத் கூறியதாவது:
தமிழகத்தில் பேறுகால உயிரிழப்பு மிகக் குறைவு. இந்த சாதனைக்கு முக்கிய காரணமாக இருப்பது குருதிக் கொடை. அது குருதிக் கொடையாளர்களாலேயே சாத்தியமாகிறது. அதனால் அவர்களை கவுரவிப்போம். நாமும் குருதிக் கொடை வழங்குவோம். தாய்மார்களை காப்பாற்றுவோம். சனிக்கிழமையன்று தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் உலக குருதிக் கொடையாளர் தின விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தவும், குருதிக் கொடையாளர்களை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்று கவுரவிக்கும் நிகழ்ச்சிகளை நடத்தவும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றார் அவர்.
2



வாசகர் கருத்து(1)
Type in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. நெறியாளர் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும்.2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
3. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நெறியாளருக்கு முழு உரிமை உண்டு.
4. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
5. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
6. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.


No comments:

Post a Comment