பாபநாசம், பூதலூர், நீடாமங்கலம், நன்னிலத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நிரந்தரமாக நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய மந்திரி சதானந்தகவுடாவிடம் 3 எம்.பி.க்கள் நேரில் சந்தித்து வலியுறுத்தினர்.
3 எம்.பி.க்கள் சந்திப்பு
காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள நீடாமங்கலம், பூதலூர், பாபநாசம், நன்னிலம் ரெயில் நிலையங்களில் தற்காலிகமாக நின்று சென்ற எக்ஸ்பிரஸ்களின் நிறுத்தம் ரத்து செய்யப்படுவதாக திருச்சி கோட்ட ரெயில்வே அறிவித்தது.
இந்த நிலையில் மத்திய ரெயில்வேத்துறை மந்திரி சதானந்தகவுடாவை எம்.பி.க்கள் பரசுராமன் (தஞ்சை), பாரதிமோகன் (மயிலாடுதுறை), கோபால் (நாகை) ஆகியோர் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
தற்காலிகமாக பூதலூர், நீடாமங்கலம், பாபநாசம், நன்னிலம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நிரந்தரமாக நின்று செல்ல உத்தரவிட வேண்டும். மேலும் பட்டுக்கோட்டை- தஞ்சை அகல ரெயில் பாதைப்பணிகளை துரிதப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் அதில் கூறி இருந்தனர்.
நடவடிக்கை எடுக்கப்படும்
அதற்கு மத்திய மந்திரி சதானந்தகவுடா விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். மேலும் ரெயில்வே வாரிய தலைவர் மற்றும் ரெயில்வே போக்குவரத்து உறுப்பினரையும் சந்தித்து இது தொடர்பான கோரிக்கை மனுக்களை 3 எம்.பி.க்களும் அளித்தனர்.
No comments:
Post a Comment