Tuesday, 3 June 2014

சமூகநீதிதான் முதல் படி

உத்தரப் பிரதேசத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்த சகோதரிகள் இருவர் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டுத் தூக்கில் தொங்கவிடப்பட்ட சம்பவம் நம் மனசாட்சியை நோக்கி எழுப்பப்பட்ட கூக்குரல். கடந்த 27-ம் தேதி அந்தச் சிறுமிகள் காணாமல் போன பிறகு, அதுகுறித்துக் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கச் சென்ற அந்தச் சிறுமிகளின் குடும்பத்தினரை போலீஸார் துரத்திவிட்டிருக்கின்றனர். அந்தச் சிறுமிகள் தூக்கில் தொங்க விடப்பட்ட நிலையில், பிணமாக மீட்கப்பட்ட பிறகு நடத்தப்பட்ட விசாரணையில், சம்பவத்தில் ஒரு போலீஸ்காரருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்திருக்கிறது. காவல் துறையினரின் அநீதியும் அலட்சியமும் போதாதோ என்று நினக்கும்படி உத்தரப் பிரதேசத்தின் முதல்வர் அகிலேஷ் யாதவ் நடந்துகொண்டிருக்கிறார். இந்தச் சம்பவம்குறித்துக் கேள்விகேட்ட பெண் நிருபர்களிடம் “நீங்கள் பத்திரமாகத்தானே இருக்கிறீர்கள்?” என்று எரிந்துவிழுந்திருக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு இதேபோல் அவரது தந்தையும் ஒரு கேள்வி எழுப்பினார்: “பையன்கள் தவறு செய்வது (அதாவது பாலியல் வன்முறையில் ஈடுபடுவது) சகஜம். அதற்காக, அவர்களைத் தூக்கில் போட முடியுமா, என்ன?”

ஆட்சியாளர்கள் இப்படி இருந்தால் மக்கள் வேறு எப்படி இருப்பார்கள் என்பதைத்தான் இவையெல்லாம் நமக்குக் காட்டுகின்றன. பாலியல் வன்முறைகளெல்லாம் பெரிய குற்றமாகக் கருதப்பட்டிராத பழங்காலத்தின் நீட்சிதான் முலாயம் சிங், அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோரின் அணுகுமுறை.

பாலியல் வன்முறை என்பது பொதுவாக எல்லாப் பெண்களுக்குமான பெரும் எதிரி என்றாலும், அதன் எளிய இலக்குகள் தலித் பெண்கள்தான். இந்தியச் சாதி அமைப்பின் அடித்தளத்தில் தலித் பெண்கள் இருக்கிறார்கள். ஒரு பெண் என்ற முறையில் அவர்கள் மீது வர்க்க, பாலின, சாதிய ஒடுக்குமுறைகள் பாய்கின்றன. தேவதாசி முறை எனும் வடிவிலான பாலியல் அடிமை முறையில் இந்தியாவில் துன்பப்படுவோரில் 93 % பேர் தலித்துகள்; 7% பேர் பழங்குடிகள் என்கிறது ஐ.நா-வின் ஆய்வு.

டெல்லி சம்பவம் நடந்த 2012-ம் ஆண்டில் மட்டும் 1,574 தலித் பெண்கள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதாக ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. இந்தப் புள்ளிவிவரம் சொல்லாத இன்னொரு தகவல்: தலித் பெண்கள் மீதான இதுபோன்ற பாலியல் வன்முறைகளில் பத்தில் ஒன்று மட்டுமே வெளியில் தெரிகிறது.

வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் -1989 பாலியல் பலாத்காரத்தை ஒரு வன்கொடுமையாக அறிவித்திருந்தாலும் அதன் அமலாக்கம் பெண்களைப் பாதுகாக்கவில்லை. எனவே, இந்தச் சட்டத்தின் ஓட்டைகள் சிலவற்றை அடைத்து 2014-ல் மத்திய அரசு ஒரு அவசரச் சட்டத்தைக் கொண்டுவந்தது. அதற்குள் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிட்டது. புதிய அரசு பதவியேற்ற ஆறு வாரங்களுக்குள் அதனைச் சட்டமாக மாற்ற வேண்டும். இந்தப் பாலியல் வன்முறைப் படுகொலைகளின் பின்னணியில் தனது சமூகநீதிப் பார்வையை மோடி அரசு நிரூபிக்க வேண்டும்.

No comments:

Post a Comment