கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்கள் திருநெல்வேலி பகுதியில் உள்ள பேட்டை என்கிற ஊரில் அரசர்களுக்கு துணி விற்றுக்கொண்டு இருந்த மதத்தலைவரான மியாகான் ராவுத்தர் அவர்களின் மகனாக பிறந்தார். இளமைக்காலத்திலேயே தந்தையை இழந்து அன்னையின் அரவணைப்பில் அவர் வளர்ந்தார். காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கு கொண்டு கல்லூரி பட்டப்படிப்பு தேர்வை புறக்கணித்தார். பின்னர் முஸ்லீம் லீக் அமைப்பில் இணைந்து செயல்பட்டார்.
விடுதலைக்கு பின்னர் டிசம்பர் மாதத்தில் 1948 இல் கராச்சியில் முஸ்லீம் லீக் கட்சி பாகிஸ்தான் பகுதிக்கு ஒன்று என்றும்,இந்தியாவிற்கு இன்னொன்று என்றும் உடைந்தது. அங்கே பாகிஸ்தான் பகுதியின் தலைவராக திகழ்ந்த லியாகத் அலிகான் ,"உங்களுக்கு என்ன உதவி வேண்டுமானாலும் கேளுங்கள் காயிதே மில்லத் அவர்களே ! எப்பொழுதும் உதவக்காத்திருக்கிறோம்" என்ற பொழுது ,"எங்களுக்கான தேவைகளை,சிக்கல்களை நாங்களே தீர்த்துக்கொள்வோம். எங்களுக்கு என்று ஒரு தேசமிருக்கிறது. நீங்கள் எங்களுக்கு செய்கிற உதவி ஏதேனும் இருக்குமானால் அது பாகிஸ்தானில் உள்ள இந்துக்கள்,சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்துவர்களை பாதுகாப்போடு பார்த்துக்கொள்வது தான் !: என்று கம்பீரமாக சொல்லிவிட்டு நடந்தார்.
இந்திய அரசியல் நிர்ணய மன்றத்தின் உறுப்பினராக செயல்பட்டார். அப்பொழுது எது தேசிய மொழியாக ஏற்கப்பட வேண்டும் என்கிற விவாதம் எழுந்தது. பழமையான மொழியே தேசிய மொழியாக வேண்டும் என்கிற வாதம் வைக்கப்பட்ட பொழுது அமைதியாக எழுந்த காயிதே மில்லத் அவர்கள் இப்படி பேசினார் :
" ஒரு உண்மையை இச்சபை முன்பு துணிவோடு கூற விரும்புகிறேன். . இந்த நாட்டு மண்ணில் பேசப்பட்ட மொழிகளில் மிகவும் பழமையானதும், ஆரம்ப காலத்தில் இருந்து பேசப்பட்டு வரும் மொழியாக இருப்பதும் தமிழ்தான். எனது கூற்றை எந்த வரலாற்று ஆசிரியராலும் மறுக்க முடியாது. எந்தப் புதை பொருள் ஆராய்ச்சியாளராலும் எதிர்க்க முடியாது. உயர்தரமான இலக்கிய வளங்களும், நயங்களும் நிறைந்த மொழி தமிழ். . இது எனது தாய் மொழி என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். அம்மொழியை நான் நேசிக்கிறேன். அம்மொழியைப் பற்றி நான் பெருமைப்படுகிறேன். பழமையான மொழியைத்தான் இந்நாட்டின் தேசிய மொழியாக்க வேண்டுமென்றால் இந்தியாவின் தேசிய மொழியாகத் தமிழைத்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும்’ ( Part XIV A Languages – Page : 1471 to 1474 – Date 14th September 1949 – Vol : IX)
தேவிக்குளம்,பீர்மேடு ஆகிய பகுதிகள் கேரளாவுக்கு போய் சேரும் என்கிற சூழல் நிலவிய பொழுது காமராஜர் அவர்கள் அவை இந்தியாவில் தானே இருக்கிறது என்று சொல்லிவிட இவரோ நாடாளுமன்றத்தில் தனது கட்சிக்கு கேரளாவில் தான் செல்வாக்கு அதிகம் என்று தெரிந்திருந்த பொழுதும் அஞ்சாமல் ,"தேவிக்குளம்,பீர்மேடு ஆகிய பகுதிகளை கேரளாவுக்கு கொடுக்க வேண்டும் என்று இங்கே கேட்கிறார்கள். அவை எல்லையோர பகுதிகள். தமிழர்கள் பெரும்பான்மையாக இருக்கும் பகுதிகள். அங்கே அவர்கள் வந்துவிட்டு போகிறவர்கள் என்று அப்பகுதி அரசு சொல்கிறது. பின்னர் எவ்வாறு கடந்த தேர்தலில அவர்கள் அங்கே பெரும்பான்மையாக ஓட்டளித்தார்கள் என்று விளக்க முடியுமா ? அப்பகுதி தமிழகத்தோடு தான் இணைக்கப்பட வேண்டும் !" என்று முழங்கினார்.
சீனா மற்றும் பாகிஸ்தான் உடன் போர் நேர்ந்த பொழுது இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்கள் அனைவரும் பாரத தேசத்துக்காக போராடுவார்கள் எங்களின் ஆதரவு முழுமையாக அரசுக்கு உண்டு என்றவர்,சீனா இந்தியாவை தாக்கிய பொழுது ,"சீனாவுக்கு எதிராக முதல் எதிரியாக என்னுடைய பெயரை பதிந்து கொள்ளுங்கள். என் மகனையும் போர்க்களத்துக்கு அனுப்பி வைக்கிறேன்." என்று நாடாளுமன்றத்தில் தன்னுடைய தேசபக்தியை பதிவு செய்தார். பாகிஸ்தானில் இருந்து வருகிற அகதிகளை கண்டுகொண்ட அரசு மலாய்,பர்மா மற்றும் இலங்கையில் இருந்து வரும் அகதிகளிடம் கரிசனத்தோடு நடந்துகொள்ள வேண்டும் என்றும் நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தார்.
நேரு அவர்கள் முதல் தேர்தலில் காங்கிரஸ் சின்னத்தில் தேர்தலை சந்திக்க வேண்டும் என்று இவரைக்கேட்டு கொண்ட பொழுது நாங்கள் தனித்தே நிற்போம் என்று தன்மானத்தோடு சொன்னார். அடுத்தடுத்து மூன்று நாடாளுமன்ற தேர்தல்களில் மஞ்சேரி தொகுதிப்பக்கம் வாக்கு கேட்க ஒருமுறை கூட போகாமலே வெல்கிற அளவுக்கு அவர் செல்வாக்கு கொண்டவராக இருந்தார். இத்தனைக்கும் அவர் தேவிக்குளம்,பீர்மேடு சிக்கலில் தமிழகத்துக்கு ஆதரவான நிலையை எடுத்தார் என்பதை கவனிக்க வேண்டும்.
அண்ணாவின் கூட்டணியில் பல்வேறு கட்சிகளை இணைத்து காங்கிரஸ் தோல்வியடைவதை உறுதி செய்கிற வித்தையை அவர் சாதித்தார். அவர் எளிமையின் உச்சமாக இருந்தார். கட்சிக்கு என்று சேர்கிற நிதியில் பைசாவைக்கூட தனக்கென்று அவர் செலவு செய்து கொண்டதில்லை. அவரின் கட்சி அலுவலகத்துக்கு அவர் எப்படி வந்து சேருவார் தெரியுமா ? க்ரோம்பேட்டையில் இருக்கும் எளிய வீட்டில் இருந்து தொடர்வண்டியில் ஏறி பீச் நிலையம் வந்து சேர்ந்து அங்கிருந்து ரிக்சாவில் மண்ணடி போய் சேர்வார்.
மிலாதுநபி விழா நடந்து கொண்டிருந்தது. ஒரு திராவிட இயக்க பிரமுகர் இந்து மத வழிபாட்டு நம்பிக்கையை விமர்சித்து பேசிக்கொண்டு இருந்தார். அவரின் பேச்சை உடனே முடிக்க செய்த கண்ணியமிகு காயிதே மில்லத் இப்படி விளக்கம் தந்தார் ,இது புனிதமிகுந்த மிலாது விழா மேடை. இதில் நபிகள் நாயகத்தின் சிறப்பு, இஸ்லாத்தின் மேன்மை பற்றி மட்டுமே பேசவேண்டும். பிற மதத்துக் கடவுள்களைப் பற்றி கேலி செய்து பேசக் கூடாது. இஸ்லாமிய மார்க்கம் ‘பிற மதத்துக் கடவுள்களைப் பற்றி கேவலம் செய்து பேசாதீர்கள்’ என்று அறிவுறுத்தியிருக்கிறது" என்று அறிவித்தார்.
பதினான்கு கல்வி நிறுவனங்களை ஏற்படுத்தி இஸ்லாமிய பிள்ளைகள் கல்வியறிவு பெற வழிகோலினார். மேல்சபை,சட்டசபை,லோக் சபா என பல்வேறு ஆட்சி பீடங்களில் பதவி வகித்தாலும் அவரிடம் சொந்தமாக கார் கூட கிடையாது. எளிமை,தேசபக்தி,மொழிப்பற்று,மக்கள் செல்வாக்கு என்று அனைத்தையும் ஒருங்கே பெற்றிருந்த கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்களை அவரின் பிறந்தநாளன்று (ஜூன் ஐந்து ) நினைவு கூர்வோம்
No comments:
Post a Comment