Sunday, 1 June 2014

நாளை பள்ளிகள் திறப்பு: கடும் வெயிலால், தள்ளிவைக்க வலியுறுத்தல்









பள்ளி கல்வித் துறை அறிவிப்புப்படி, தமிழகம் முழுவதும், நாளை (2ம் தேதி) பள்ளிகள் திறக்கப்படுகின்றன. ஆனால், 'அக்னி நட்சத்திரம் முடிந்தும், வெயிலின் கொடுமை நீடிப்பதால், பள்ளி திறப்பு தேதியை, 10 நாட்களுக்கு, தள்ளிவைக்க வேண்டும்' என, அனைத்து தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர். 'பத்தாம் வகுப்பு மாணவர்கள், வெயிலால் பாதிக்கக்கூடாது என, பொது தேர்வு நேரத்தை, ஒரு மணி நேரம் முன்னதாக மாற்றிய தமிழக அரசு, இப்போது, மவுனம் காப்பது ஏன்?' என, ஆசிரியர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

எந்த மாற்றமும் இல்லை:'கோடை விடுமுறைக்குப் பின், தமிழகம் முழுவதும், நாளை, 2ம் தேதி, பள்ளிகள் திறக்கப்படும்' என, பள்ளிக்கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன், ஏற்கனவே அறிவித்து இருந்தார். கடுமையான வெயில் வாட்டி வதைப்பதை சுட்டிக்காட்டி, 'பள்ளி திறப்பு தேதியில் மாற்றம் வருமா?' என, சில தினங்களுக்கு முன், இயக்குனரிடம், நிருபர்கள் கேட்டதற்கு, 'எந்த மாற்றமும் இல்லை; அறிவித்தபடி, 2ம் தேதி, அனைத்துப் பள்ளிகளும் திறக்கப்படும்' என, இயக்குனர் தெரிவித்தார்.




இலவச பொருட்கள்:நாளை, பள்ளி திறந்ததும், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியருக்கு, இரு ஜோடி இலவச சீருடை, பாட புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் உள்ளட்ட, பல இலவச பொருட்களை வழங்க, பள்ளி கல்வித்துறை, ஏற்பாடு செய்து உள்ளது. இந்த பணியை கவனிக்க, மாவட்டந்தோறும், இணை இயக்குனர்கள், பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள், இரு நாட்களுக்கு முன், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்குச் சென்று, தேவையான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.




10 நாட்களுக்கு:இந்நிலையில், தலைநகர் சென்னை உட்பட, பல மாவட்டங்களில், நேற்றும், வெயில் உக்கிரமாக இருந்தது. அக்னி நட்சத்திரம் முடிந்தும், வெயிலின் கோரம் தொடர்வதால், பள்ளி திறப்பு தேதியை, 10 நாட்களுக்கு தள்ளிவைக்க வேண்டும் என, அனைத்து தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.

:
சிறுவர்கள் எப்படி செல்வர்?பல மாவட்டங்களில், 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் மேலாக, வெயில் வாட்டி வதைக்கிறது. பெரியவர்களே, பகலில், வெளியில் செல்ல பயந்து, வீட்டில் முடங்கிக் கிடக்கின்றனர். சிறுவர்கள், எப்படி, பள்ளிகளுக்கு செல்வர்? 'பள்ளி திறப்பு தேதியை, 15 நாட்களுக்கு, தள்ளிவைக்க வேண்டும்' என, பள்ளி கல்வித்துறை அமைச்சர், வீரமணி, துறை முதன்மை செயலர், சபிதா ஆகியோரிடம், மனு கொடுத்துள்ளோம். பள்ளி திறப்பு தேதியை, ஒரு வாரம் தள்ளி வைப்பதால், பெரிய பாதிப்பு ஏற்படாது. இவ்வாறு, அவர் கூறினார்.

கடந்த சில தினங்களாக வெயில் நிலவரம்
* சென்னையில், கடந்த சில தினங்களாக, 39 டிகிரி செல்சியஸ் (102 டிகிரி பாரன்ஹீட்) முதல், 40 டிகிரி செல்சியஸ் (104.4 டிகிரி பாரன்ஹீட்) வரை பதிவாகியுள்ளது.
* திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில், நேற்று முன்தினம் 41 டிகிரி செல்சியஸ் (105.8 டிகிரி பாரன்ஹீட்) வெப்பம் பதிவாகியது.
* திருச்சி, வேலூர், தஞ்சாவூர், மதுரை, தர்மபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களில், வெப்பம், 100 டிகிரி பாரன்ஹீட்டை ஒட்டியே பதிவாகி வருகிறது. இன்னும் சில தினங்களுக்கு, இதே நிலை நீடிக்கும் என தெரிகிறது. இதனால், பொது மக்கள் பகல் நேரங்களில் வெளியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment