Thursday, 19 June 2014

விசில்கள் பறக்கட்டும்

பெரிய சர்ச்சைகள், போராட்டங்களைக் கடந்து உலகக் கோப்பைக்கான கால்பந்துப் போட்டி பிரேசிலில் தொடங்கி யிருக்கிறது. கடுமையான பொருளாதார நெருக்கடியில் ஆழ்ந்துள்ள நாட்டுக்கு, இது மிகப் பெரிய சுமை என்பதில் கருத்து வேறுபாடு இல்லை. கிரேக்கத்தை ஒரு ஒலிம்பிக் போட்டி எப்படித் திவாலாக்கியது என்பதைக் கண்ணெதிரே பார்த்த பிரேசிலியர்களுக்கு உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் ஏற்படுத்தியிருக்கும் பதைபதைப்பு நியாயமானது. ஆனால், எல்லா ஏற்பாடுகளும் செய்து முடித்து, போட்டிகளும் தொடங்கிவிட்ட நிலையில், இதை விவாதிப்பதில் பயன் இல்லை. இனி, போட்டிகளை எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் நடத்தி முடிப்பதில்தான் கவனம் செலுத்த வேண்டும்.

உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டிகள் 1930 முதல் நடைபெறுகின்றன. முதல் போட்டியில் 13 நாடுகள் பங்கேற்றன. இந்த 20-வது உலகக் கோப்பைப் போட்டியில் மொத்தம் 32 நாடுகள் பங்கேற்கின்றன. முதல்முறையாக ‘கோல்-லைன்’ தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் பந்து கோலை நெருங்கியபோது என்ன நடந்தது என்பது நவீன கேமராக்களின் உதவியுடன் ஆட்ட நடுவருக்குத் துல்லியமாக உடனே தெரிவிக்கப்பட்டுவிடும். எனவே, முடிவுகளைத் தவறின்றியும் விரைவாகவும் எடுத்துவிட முடியும். இந்தப் போட்டியில் முதலில் கிடைத்திருக்கும் நன்மை இது.

ஐந்து முறை சாம்பியனான பிரேசில் அணி சொந்த மண் வலிமையோடு களம் இறங்குகிறது. லூயி பிலிப் ஸ்கோலரி தலைமையில் பிரேசில் அணியை எல்லா விதத்திலும் சமநிலை பெற்ற அணி என்று சொல்லலாம். நெய்மார் சிறந்த முன்கள வீரராகத் திகழ்கிறார். இப்போதைய சாம்பியனான ஸ்பெயின் அணியின் தரமும் திறமும் அச்சுறுத்தலாகவே திகழ்கிறது. அத்துடன் சமீபத்தில் ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் அது வென்று அதே உத்வேகத்தில் நிற்கிறது. லயோனல் மெஸ்ஸி தலைமையில் அர்ஜெண்டினா தாக்குதல் திறன் மிகுந்து காணப்படுகிறது. பிரேசிலின் ஆட்டக் களங்கள் அதற்கு நன்கு பரிச்சயமானவை. ஜெர்மனி அணியின் நடுக்கள வீரர்கள் சக்திவாய்ந்தவர்கள். ஆனால், பந்தை எதிர்அணி கோலில் செலுத்தத் திறமையான முன்கள வீரர்கள் இல்லை. இத்தாலி அணியைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. அதன் ஆட்ட உத்திகள் நவீனமானவை. எனவே, அவர்களையும் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது.

கடந்த உலகப் போட்டியில் இரண்டாவது இடம்பெற்ற நெதர்லாந்து, பிரான்ஸ், இங்கிலாந்து அணிகளும் கடுமையான போட்டிகளை அளிக்கும் என்று எதிர்பார்க்கலாம். சிலி, பெல்ஜியம், போஸ்னியா-ஹெர்சகோவினா, ஜப்பான் அணிகளையும் பத்தோடு பதினொன்றாகக் கருதினால் ஆபத்துதான். கால்பந்து ஆட்டத்தின் நுணுக்கங்களை அறிந்து ரசிக்கும் விமர்சகர்களும், ஆட்டத்தின் போக்கில் லயித்து யார், எவர் என்ற பூர்வோத்திரமெல்லாம் பார்க்காத பாமர ரசிகர்களும் விரும்புவது தரமான, நல்ல நட்புறவுடன் கூடிய மகிழ்ச்சியான போட்டிகள்தான். தகுதியுள்ள அணிகளும் வீரர்களும் வெற்றிகளைக் குவிக்க வாழ்த்துவோம்!

No comments:

Post a Comment