பீடி, சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள் வாங்குவதற்கான
குறைந்தபட்ச வயதை 18-ல் இருந்து 25 ஆக உயர்த்துவது குறித்து மத்திய சுகாதார
அமைச்சகம் பரிசீலித்து வருகிறது.
இதுகுறித்து மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர்
லாவ் வர்மா கூறுகையில், “மத்திய அரசுக்கு அளிக்கப்பட்ட பரிந்துரைகளின் அடிப்படையில்
சுகாதார அமைச்சகம் இதனை பரிசீலித்து வருகிறது. இது மாநிலங்களின் அதிகார வரம்புக்கு
உட்பட்டது என்பதால் இது தொடர்பாக அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதம் எழுதவுள்ளோம்”
என்றார்.
புகையிலைக்கு எதிரான இந்தியாவின் நிதிக் கொள்கைகள் குறித்த
ஆய்வறிக்கை ஒன்றை லாவ் வர்மா டெல்லியில் வெள்ளிக்கிழமை வெளியிட்டார்.
அப்போது அவர் பேசுகையில், “உலகில் புகையிலைப் பொருள்கள் பயன்பாட்டால்
ஆண்டுக்கு சுமார் 60 லட்சம் பேர் இறக்கின்றனர். அதாவது ஒவ்வொரு 6 வினாடிகளுக்கும்
ஒருவர் உயிரிழக்கிறார்” என்றார்.
இந்த ஆய்வறிக்கையை ‘பப்ளிக் ஹெல்த் பவுன்டேஷன் ஆப் இந்தியா’ என்ற
அமைப்பு தயாரித்துள்ளது. சுகாதாரத்துக்கு முன்னுரிமை அளிக்கும் நிதிக்கொள்கையை
வலியுறுத்துவதே இதன் நோக்கம்.
நிகழ்ச்சியில் லாவ் வர்மா மேலும் பேசுகையில், “நாட்டில் ஆண்டுக்கு 8
முதல் 9 லட்சம் பேர் புகையிலைப் பொருள்கள் பயன்பாட்டால் இறக்கின்றனர். புற்றுநோயால்
இறக்கும் ஆண்களில் 50 சதவீதம் பேரும், பெண்களில் 20 சதவீதம் பேரும், புகையிலைப்
பொருள்கள் காரணமாகவே இறக்கின்றனர்.
புகையிலைப் பொருள்களுக்கு ஓர் இரவில் தடை விதிப்பதால்
இப்பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாது. மற்றப் பிரச்சினைகள் பலவற்றுக்கும் தீர்வு
காண வேண்டியுள்ளது. தடை விதிப்பதற்கு முன் புகையிலைப் பொருள்கள் தொழிலில் ஈடுபட்
டுள்ள பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.
எனவே படிப்படியாகவே இதற்கு தீர்வு காணமுடியும்” என்றார்.
சிகரெட் விலையை 10 சதவீதம் உயர்த்துவதன் மூலம் சிகரெட் நுகர்வு 3
சதவீதம் குறையும், அரசுக்கு 7 சதவீதம் வருமானம் அதிகரிக்கும் என இந்த
ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதுபோல் சிகரெட் மீதான உற்பத்தி வரியை தற்போதைய
அளவில் இருந்து 370 சதவீதமாக உயர்த்தினால், சிகரெட் நுகர்வு 54 சதவீதம் குறையும்,
அரசு வருவாய் 115 சதவீதம் உயரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“புகையிலைப் பொருள்கள் மீதான தற்போதைய வரி குறைவாக இருப்பது
மட்டுமல்ல, வரிவிதிப்பு முறையும் சிக்கலாக உள்ளது. வரி நிர்வாகமும் சிறப்பாக இல்லை.
இதனால் வரி உயர்வு மூலம் புகையிலைப் பொருள்கள் பயன்பாட்டை
கட்டுப்படுத்த முடியவில்லை” என்று இந்த நிகழ்ச்சியில் கூறப்பட்டது.
No comments:
Post a Comment