Sunday, 31 July 2016

டெல்லி விமான நிலையத்தில் அ.தி.மு.க.–தி.மு.க. எம்.பி.க்கள் கைகலப்பு



டெல்லி விமான நிலையத்தில் திருச்சி சிவா எம்.பி.க்கும், அ.தி.மு.க. பெண் எம்.பி.க்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியானது.
தாக்குதல்டெல்லி மேல்–சபை தி.மு.க. உறுப்பினர் திருச்சி சிவா, டெல்லியில் இருந்து சென்னை வருவதற்காக நேற்று பிற்பகல் 2.45 மணி அளவில் விமான நிலையத்துக்கு சென்றார். விமானத்தில் ஏறுவதற்கான வழக்கமான நடைமுறைகள் முடிந்த பின்னர், அவர் திடீரென்று தனது சென்னை பயணத்தை ரத்து செய்து விட்டு வெளியே வந்தார்.
அப்போது, சென்னை வருவதற்காக விமான நிலையத்துக்கு வந்த அ.தி.மு.க. எம்.பி. சசிகலா புஷ்பா, எதிரே வந்த திருச்சி சிவாவை பார்த்தும், பாய்ந்து சென்று அவரது சட்டையை பிடித்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்குள் கைகலப்பு ஏற்பட்டதாகவும், அப்போது சசிகலா புஷ்பா திடீரென்று திருச்சி சிவாவின் கன்னத்தில் அறைந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த களேபரத்தில் திருச்சி சிவா கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலி அறுந்து கீழே விழுந்தது.
பரபரப்புஉடனே அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த போலீசார் விரைந்து வந்து இருவரையும் தடுத்து நிறுத்தி சமாதானப்படுத்தினார்கள். திருச்சி சிவாவை அங்கிருந்து அனுப்பி வைத்தனர். சசிகலா புஷ்பா விமானத்தில் ஏறுவதற்காக உள்ளே சென்றார்.
இரு எம்.பி.க்களுக்கு இடையே ஏற்பட்ட இந்த கைகலப்பால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவம் பற்றி பின்னர் திருச்சி சிவா கூறுகையில், ‘‘சசிகலா புஷ்பா காரணம் இன்றி திடீரென்று சட்டையை பிடித்து இழுத்து என்னை தாக்கினார்’’ என்றார்.
சசிகலா புஷ்பா கூறுகையில், அ.தி.மு.க. ஆட்சி பற்றியும், முதல்–அமைச்சர் ஜெயலலிதா பற்றியும் திருச்சி சிவா தவறாக விமர்சித்ததால் அவரது கன்னத்தில் அறைந்ததாக தெரிவித்தார்.

No comments:

Post a Comment