திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் 110 பேருக்கு ரூ.9 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை உணவுத்துறை அமைச்சர் ஆர். காமராஜ் சனிக்கிழமை வழங்கினார்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஆட்சியர் எம். மதிவாணன் தலைமை வகித்தார். நாகை நாடாளுமன்ற உறுப்பினர் கே.கோபால் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் 70 பேருக்கு சுயதொழிலுக்கான வங்கிக்கடன் மானியத் தொகை தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.7 லட்சத்துக்கு காசோலைகள் வழங்கப்பட்டன. மேலும் 40 மாற்றுத் திறனாளிகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் மதிப்பிலான மோட்டார் பொருந்திய தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன.
நலத்திட்ட உதவிகளை வழங்கி அமைச்சர் காமராஜ் பேசியதாவது: சாதாரண மக்களின் தேவைகளை நிறைவேற்றுவது மட்டுமில்லாமல் மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது.
மாற்றுத்திறனாளிகளுக்கு அவரவர் தேவை மற்றும் மாற்றுத்திறனின் தன்மைக்கு ஏற்ப தேசிய அடையாள அட்டை, முடநீக்கு சாதனம், செயற்கை கால், நவீன செயற்கை கால், மூன்றுசக்கர வண்டி, மோட்டர் பொருந்திய தையல் இயந்திரம் போன்ற உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
கல்வி பயிலும் மாணவ,மாணவியருக்கு கல்வி உதவித்தொகை, சுயதொழில் புரிய விருப்பமுள்ளவர்களுக்கு ரூ.10 ஆயிரம் மானியத்துடன் கூடிய வங்கிக் கடனுதவி, திருமண உதவித்தொகையாக ரூ.25 ஆயிரம் முதல் கல்வித்தகுதிக்கு ஏற்றவாறு ரூ.50 ஆயிரம் வரை மற்றும் 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்படுகிறது. இலவச பேருந்து வசதி போன்ற உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன என்றார் காமராஜ்.
விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் டி.மோகன்ராஜ், மாவட்ட ஊராட்சி தலைவர் ஜெயலெட்சுமி அம்பிகாபதி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் ரவீந்திரன், வருவாய் கோட்டாட்சியர்கள் ஆர். முத்துமீனாட்சி (திருவாரூர்), ஏ செல்வசுரபி (மன்னார்குடி), நகர்மன்றத் தலைவர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment