Thursday, 28 July 2016

திருவாரூர் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் பழுது ஏற்பட்டதால் ரயில் போக்குவரத்தில் தாமதம்

திருவாரூர் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் செவ்வாய்க்கிழமை பழுது ஏற்பட்டதால் ரயில் போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டது.
சென்னையிலிருந்து காரைக்கால் துறைமுகத்துக்கு செல்லும் சரக்கு ரயில் திருவாரூர் ரயில் நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு வந்தது. பின்னர், என்ஜின் மாற்றப்பட்டு காரைக்காலுக்கு புறப்பட்டுச் சென்றது. இந்த ரயில், தண்டவாளத்தை மாற்றிச் செல்லும் இடத்தில் (பாய்ண்ட்) செல்லும்போது, அந்த இடத்தில் பழுது ஏற்பட்டுள்ளது. சரக்கு ரயில் மெதுவாகச் சென்றதால் அதிர்ஷ்டவசமாக விபத்திலிருந்து தப்பியது.
இதுகுறித்து ரயில் நிலைய தொழில் நுட்பப்பிரிவு அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, பழுதை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
தண்டவாளம் பழுதுக்கு காரணமாக இருந்த இரும்பு கம்பி அகற்றப்பட்டு, பாய்ண்ட் சரி செய்த பிறகு நிலைமை சரியானது. இதையடுத்து ரயில்வே தொழில்நுட்ப அலுவலர்கள் ரயில்கள் இந்த இடத்தில் மெதுவாக செல்ல அறிவுறுத்தினர்.
இதன்காரணமாக, திருச்சியிலிருந்து காரைக்கால் செல்லும் பயணிகள் ரயில் குளிக்கரையில் நிறுத்தப்பட்டு, 1 மணி 40 நிமிடங்கள் தாமதமாக திருவாரூர் ரயில் நிலையத்துக்கு வந்தடைந்தது.
இதேபோல், திருவாரூருக்கு காலை 9.30 மணிக்கு வரவேண்டிய மன்னார்குடி- மயிலாடுதுறை பயணிகள் ரயில் குளிக்கரையில் நிறுத்தப்பட்டு. ஒன்றரை மணி நேரம் தாமதமாக பிற்பகல் 11.10-க்கு வந்தது. எர்ணாகுளத்திலிருந்து காரைக்கால் வரை செல்லும் விரைவு ரயில் திருவாரூர் ரயில் நிலையத்துக்கு காலை 9.50 மணிக்கு வரவேண்டும். இந்த ரயில் கொரடாச்சேரியில் நிறுத்தப்பட்டு சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக வந்தது.
இதேபோல், கோவா - வேளாங்கண்ணி செல்லும் வாஸ்கோடகாமா விரைவு ரயில் சுமார் அரை மணி நேரம் தாமதமாக வந்து சென்றது.

No comments:

Post a Comment