Friday, 22 July 2016

புதிய வரிகள் இல்லாத தமிழக பட்ஜெட்

2016-17 ஆம் ஆண்டுக்கான திருத்திய நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வியாழக்கிழமை சட்டப் பேரவையில் தாக்கல் செய்தார். புதிய வரிகள் ஏதும் விதிக்கப்படவில்லை.
ஏழைகளுக்கு 10 லட்சம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும்,ஆண்டு இறுதிக்குள் ஸ்மார்ட் ரேஷன் அட்டை வழங்கப்படும், அக்டோபரில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் ஆகியவை நிதியமைச்சரின் உரையில் இடம்பெற்ற முக்கிய அம்சங்களாகும்.
திருத்திய பட்ஜெட் மதிப்பீடு ரூ.1,48,175.09 கோடியாகவும் ஒட்டுமொத்த கடன் ரூ.2,52,431 கோடியாகவும், வருவாய் பற்றாக்குறை ரூ.15,854.47 கோடியாகவும் மொத்த நிதிப்பற்றாக்குறை ரூ.40,533.84 கோடியாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அதிமுக அரசு மீண்டும் பொறுப்பேற்ற நிலையில், திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கையை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வியாழக்கிழமை காலை 11.00 மணி அளவில் பேரவையில் தாக்கல் செய்தார். அவரது அறிக்கையில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள் வருமாறு:
10 லட்சம் வீடுகள்:
தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டபடி, பல்வேறு திட்டங்களின் கீழ், ஏழைகளுக்காக அடுத்த ஐந்தாண்டுகளில் 10 லட்சம் வீடுகள் கட்டப்படும். மேலும், நகர்ப்புறங்களில் ஏழைக் குடும்பங்களை மறுகுடியமர்த்த ஒரு சிறப்பு நிதியமாக வீட்டுவசதி நிதியத்தை அரசு ஏற்படுத்தும்.
ஸ்மார்ட் குடும்ப அட்டை:
குடும்ப அட்டை தகவல் தொகுப்பை ஆதார் எண்ணுடன் ஒருங்கிணைக்கும் பணி நடந்து வருகிறது. ஆண்டு இறுதிக்குள் ஸ்மார்ட் அட்டை வடிவில் குடும்ப அட்டைகள் வழங்கப்படும்.
அக்டோபரில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த...:
அக்டோபரில் உள்ளாட்சித் தேர்தல்கல் நடத்தப்படும். இதற்காக ரூ.183.24 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
ரூ.6,000 கோடிக்கு புதிய பயிர்க் கடன்கள்:
கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ.6 ஆயிரம் கோடிக்கு புதிய பயிர்க் கடன்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கான பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்யும் நோக்கில் நிகழாண்டில் ரூ.1,680.73 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2,000 புதிய பேருந்துகள்: தமிழகம் முழுவதும் போக்குவரத்து சேவைக்காக 2,000 புதிய பேருந்துகள் வாங்க ரூ.275 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மூத்த குடிமக்களுக்கான பேருந்து பயண அட்டை திட்டத்தின் கீழ் இதுவரை 2.29 லட்சம் பேருக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
18,500 மெகாவாட் கூடுதல் மின்சாரம்: மின்சார உற்பத்தியில் தன்னிறைவு அடைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அடுத்த ஐந்தாண்டுகளில் 13 ஆயிரம் மெகாவாட் அனல் மின்சாரமும், 2 ஆயிரத்து 500 மெகாவாட் புனல் மின்சாரமும், 3 ஆயிரம் மெகாவாட் சூரியமின்சக்தியும் கூடுதலாக உற்பத்தி செய்யப்படும்.
5.35 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி:
ஏற்கெனவே கடந்த ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களில் சில இப்போதும் தொடரும். நிகழ் நிதியாண்டிலும் 5.35 லட்சம் மாணவ-மாணவியருக்கு மடிக்கணினிகள் வழங்குவதன் மூலம், இந்தத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்; இதற்காக ரூ.890 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
மாற்றுத் திறனாளிகளுக்கு 1,000 ஸ்கூட்டர்கள்:
இரு கால்களும் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட விலையில்லாத ஆயிரம் பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கப்படும்.
தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி உலமாக்களுக்கு மாதாந்திர உதவித் தொகை ரூ.1,500 ஆக உயர்த்தி வழங்கப்படும். மேலும், மீனவ தடைக்காலங்களில் வழங்கப்படும் நிவாரணத் தொகை ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது.
மதுரையில் புதிய பால் பொருள்கள் தொழிற்சாலை:
தென் மாவட்டங்களில் பால் வளத்தை ஊக்குவிக்க புதிய பால் பொருள்களைத் தயாரிக்கும் தொழிற்சாலை மதுரையில் ரூ.45 கோடியில் அமைக்கப்படும்.
அனைத்துக் காவல் நிலையங்களும் அரசுக் கட்டடங்களில் இயங்குவதை உறுதி செய்யும் நோக்குடன், 64 காவல் நிலையங்களுக்கு சொந்தக் கட்டடங்கள் கட்டப்படும். காவல் துறையினரின் வீட்டு வசதித் தேவைகளை நிறைவு செய்ய நிகழ் நிதியாண்டில் ரூ.422 கோடியில் 2 ஆயிரத்து 673 வீடுகளுக்கான கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
விலையில்லாத கறவைப் பசுக்களுக்கான அலகுத் தொகை ரூ.30 ஆயிரத்தில் இருந்து ரூ.35 ஆயிரமாக உயர்த்தப்படும்; 12 ஆயிரம் ஏழைப் பெண்களுக்கு பசுக்களும், ஒரு லட்சம் ஏழைக் குடும்பங்களுக்கு நான்கு லட்சம் வெள்ளாடுகள்-செம்மறி ஆடுகளும் அளிக்கப்படும்.
அடுக்குமாடி வீடுகள்:
நிகழ் நிதியாண்டில் 3.5 லட்சம் வீட்டுமனைப் பட்டாக்கள் அரசால் வழங்கப்படும்; நிலம் குறைவாகவும், நிலமதிப்பு அதிகமாகவும் உள்ள இடங்களில் கூட்டுப் பட்டா வழங்கும் புதிய அணுகுமுறை அரசால் கடைப்பிடிக்கப்படும்.
உயர்நிலைக்குழு:
மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட உள்ள 7-வது ஊதியக்குழு பரிந்துரையை மாநில அரசு ஊழியர்களுக்கு வழங்குவது தொடர்பாக ஆய்வு செய்ய உயர்நிலைக்குழு அமைக்கப்படும்.
வீட்டின் கட்டட வடிவமைப்பில் எளிமையான முறை பின்பற்றி, ஊரக வளர்ச்சித் துறை மூலம் கூட்டுப்பட்டா நிலங்களில் அடுக்குமாடி வீடுகள் கட்டித் தரப்படும். பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் ரூ.420 கோடி ஒதுக்கி 20 ஆயிரம் வீடுகள் கட்டப்படும்.
நீர் ஆதாரங்களைப் பயன்படுத்துவோரின் பங்கேற்புடன் செயல்படுத்தப்படும் குடிமராமத்து முறைக்குப் புத்துயிரூட்டவும், நீர்நிலைகளை மீட்டெடுக்கவும் மாநிலம் தழுவிய இயக்கத்தை அரசு மேற்கொள்ளும் என்றும் நிதியமைச்சர் தனது பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார்.
முக்கிய அம்சங்கள்
* நிகழாண்டில் ரூ.6 ஆயிரம் கோடி புதிய பயிர்க் கடன்கள்
* லோக் ஆயுக்த அமைக்கப்படும்
* மாணவர்களுக்கு 5.25 லட்சம் மடிக்கணினிகள்
* அக்டோபரில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த ரூ.183.24 கோடி
* உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.11,514.34 கோடி நிதி
* மாற்றுத் திறனாளிகளுக்கு 1,000 ஸ்கூட்டர்கள்
* உலமாக்கள் உதவித்தொகை ரூ.1,500 ஆக உயர்வு
* 2,000 பேருந்துகள் வாங்க ரூ.275 கோடி
* மதுரையில் பால் பொருள்கள் தயாரிக்க புதிய தொழிற்சாலை
* மீன்பிடி தடைக்கால நிவாரணம் ரூ.5 ஆயிரமாக உயர்வு
* தமிழ்நாடு தொழில் கூட்டமைப்பு நிதியத்துக்கு ரூ.2 ஆயிரம் கோடி
* சாலைப் பாதுகாப்புக்கென ரூ.150 கோடி நிதி
* பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ், ரூ.420 கோடியில் 20 ஆயிரம் வீடுகள்
* 18,500 மெகாவாட் கூடுதல் மின்னுற்பத்தித் திட்டம்
 

No comments:

Post a Comment