Friday, 15 July 2016

திருவாரூர் :குடியிருப்பு வழியாக எரிவாயு குழாய் அமைக்கும் பணி: தடுத்து நிறுத்திய கிராம பொது மக்கள்

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே அனல்மின் நிலையத்திற்கு எரிவாயு கொண்டு செல்ல குடியிருப்பு பகுதி வழியாக பூமிக்கடியில் குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்ட தனியார் நிறுவனத்தை எதிர்த்து கிராம பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதை அடுத்து குழாய் அமைக்கும் பணி வெள்ளிக்கிழமை தடுத்து நிறுத்தப்பட்டது.
மத்திய அரசுக்கு சொந்தமான ஒஎன்சிஜி நிறுவனம் களப்பாலில் உள்ளது. இங்கிருந்து 11 கி.மீ. தூரத்தில் உள்ள திருமக்கோட்டை அனல்மின் நிலையத்திற்கு மின் உற்பத்தி செய்யத் தேவையான எரிவாயு பூமிக்கடியில் குழாய் பதித்து அதன் வழியாக எரிவாயு கொண்டு செல்லப்பட்டு வருகிறது.
தற்போது மின் உற்பத்தி நிலையத்திற்கு அதிகளவில் எரிவாயு தேவைப்படுவதை அடுத்து, கூடுதலாக பூமிக்கடியில் குழாய் அமைக்கும் பணியை தனியார் நிறுவனமான கெயிலிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து, சுமார் ஏழு கி.மீ. தூரத்திற்கு குழாய் அமைக்கப்பட்ட நிலையில், மான்கோட்டைநத்தம் உள்ளிட்ட சில கிராமங்களில் குழாயினை அமைக்க குடியிருப்பு பகுதி அருகிலேயே இடம் தேர்வு செய்யப்பட்டிருந்தது. ஓரிடத்தில் இரண்டு வீட்டிற்கும் இடையில் குழாய் அமைப்பதற்காக ஒப்பந்தப்பணி எடுத்த தனியார் நிறுவனம் அளவீடு செய்து குறியீடுகளைப் போட்டு சென்றுள்ளனர். மான்கோட்டைநத்தம் பகுதியில் வெள்ளிக்கிழமை குழாய் அமைக்கும் பணியை தொடங்குவதாக இருந்தனர்.
இதனை அடுத்து எரிவாயு குழாயில் விரிசல் ஏற்பட்டு தீவிபத்து நிகழ்வுகள் ஏற்பட்டால் உயிரிழப்பு ஏற்படும் ஆபத்து உள்ளது என்றும், திருமக்கோட்டை அனல்மின் உற்பத்தி நிலையத்தின் தேவைக்காக ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டு அதிக அளவில் நீர் எடுக்கப்படுவதால் திருமக்கோட்டை சுற்றுப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து வருவதுடன், மின்நிலையத்திலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாகக் கூறி, புதிதாக குழாய் அமைக்கும் பணியை நிறுத்த வேண்டும், அனல் மின் நிலையத்தை மூட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கிராம பொதுமக்கள் குழாய் அமைக்கும் பணிக்காக கொண்டு வரப்பட்ட இயந்திரத்தை மறித்து வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் த.ஜெயராமன் தலைமை வகித்தார்.
மாநில தலைமை ஆலோசகர் மருத்துவர் இலரா.பாரதிச்செல்வம், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மு.செ.பாண்டியன், கிராம நிர்வாகிகள் பூபாலன், கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் கலந்துகொண்டனர். பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் ஒப்பந்ததாரர் தரப்பினர் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து எரிவாயு கொண்டு செல்ல குழாய் அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது.

No comments:

Post a Comment