Wednesday 3 February 2016

ஸிகா வைரஸ்: பீதி அடைய வேண்டாம்


ஸிகா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் எதுவும் இல்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தயார் நிலையில் உள்ளதால், யாரும் பீதி அடைய வேண்டாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ஸிகா வைரஸ் குறித்து தமிழக அரசின் சார்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, சென்னையில் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதையடுத்து, சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜய்பாஸ்கர் கூறியது:
ஸிகா வைரஸ் பாதிப்பு ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, பசிபிக் உள்ளிட்ட நாடுகளில் அதிகமாக உள்ளதால் உலகளாவிய பொது சுகாதார அவசர நிலையை உலக சுகாதார நிறுவனம் பிரகடனப்படுத்தியுள்ளது.
இந்தியாவில் ஸிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்படவில்லை. இருப்பினும், தமிழகத்தில் பரவாமல் இருப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நோய் பரவுவதற்கு காரணமான, ஏடிஸ் வகை கொசு ஒழிப்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வட்டத்துக்கும் 10 நபர்கள், ஒரு பேரூராட்சிக்கு 20 பேர், மாநகராட்சிகளில் தேவையான தாற்காலிகப் பணியாளர்கள் உள்ளிட்டோர் குழுக்களாகச் சென்று கொசுப்புழு வளரும் இடங்களை கண்டறிந்து, அழிக்கும் பணியில் ஈடுபடுகின்றனர்.
இதற்காக 9,861 புகை அடிப்பான்கள், வாகனத்தில் பொருத்தப்பட்ட 247 புகை அடிப்பான்கள், கூடுதலாக கையால் எடுத்துச் செல்லப்படும் 175 புகை அடிப்பான்கள், வாகனத்தில் பொருத்தப்படும் 25 புகை அடிப்பான்கள் வாங்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளன.
ஏடிஸ் வகை கொசுக்களை ஒழிப்புப் பணி முழு வீச்சில் நடைபெறுவதால், நோய் பரவ வாய்ப்பு அறவே இல்லை என்றார்.
இதையடுத்து, சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியது: நோயின் அறிகுறிகளுக்கேற்ப இப்போது புழக்கத்தில் உள்ள மருந்துகளைக் கொண்டே நோயை எளிதில் கட்டுப்படுத்த முடியும்.
தேவையான மாத்திரைகள் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கையிருப்பு உள்ளது. மேலும் விமான நிலையங்கள், துறைமுகங்கள் ஆகிய இடங்களில் இந்த நோய்கள் தாக்கிய நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு ஸிகா வைரஸ் அறிகுறிகள் உள்ளதா என்றும் பரிசோதிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
பொது சுகாதாரத் துறை இயக்குநர் குழந்தைசாமி உள்ளிட்ட பலர் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment