Saturday 6 February 2016

ஊராட்சி அளவில் வேலைவாய்ப்பு முகாம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே நடைபெறவுள்ள தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் குறித்து மாவட்டத்தில் ஊராட்சி அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று உணவு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ஆர். காமராஜ் கூறினார்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாம் குறித்த முன்னேற்பாடு கூட்டத்தில் அமைச்சர் பேசியது:
நன்னிலம் அருகே சொரக்குடி ஆரூரான் தொழில்நுட்பக் கல்லூரியில் பிப். 14 ஆம் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
இதில் 350-க்கும் மேற்பட்ட தனியார்துறை வேலைவாய்ப்பு அளிக்கும் நிறுவனங்கள் பங்கேற்று சுமார் 10,000-க்கும் மேற்பட்டவர்களுக்கு பணி வாய்ப்புகளை வழங்கவுள்ளன. 8 முதல் பிளஸ் 2 வரை படித்தவர்கள், பட்டயப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ, பொறியியல் பட்டதாரிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் பங்கேற்று பயன்பெறலாம்.
தவிர, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலம் திறன் எய்தும் பயிற்சி பதிவும், வெளிநாட்டில் வேலைவாய்ப்புக்கும் பதிவு செய்யப்படுகிறது.
முகாமில் பல்வேறு நிறுவனங்கள் பங்கேற்பதால், வேலை தேடும் ஆண், பெண்கள் வேலைவாய்ப்புப் பெற இது ஒரு வாய்ப்பாக இருக்கும்.
முகாம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கிராம ஊராட்சிகளில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மூலம் ஊராட்சித் தலைவர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் வேலைவாய்ப்பு முகாம் தொடர்பான தகவல்கள் முழுமையாக மக்களைச் சென்றடைய வைக்க வேண்டும்.
பிரசார வாகனத்தில் ஒலிபெருக்கி மூலம் ஒவ்வொரு ஊராட்சிகளிலும் அனைத்துத் தரப்பு மக்களுக்கு வேலைவாய்ப்பு முகாம் தொடர்பான தகவலை கொண்டு சேர்க்க வேண்டும். மருத்துவத்துறையைப் பொருத்தவரை முகாம் நடைபெறும் தினத்தன்று சுழற்சி முறையில் மருத்துவர்களைப் பணியமர்த்த வேண்டும்.
போக்குவரத்துத் துறை முகாம் நாளில் சிறப்பு பேருந்துகளை இயக்க வேண்டும். காவல்துறை தகுந்த பாதுகாப்பு வழங்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. கல்வித் துறை ஆசிரியர்கள் மாணவ, மாணவிகள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவ, மாணவிகளை பணியில் ஈடுபடுத்த வேண்டும்.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் மாற்றுத் திறனாளிகளுக்கு பிரத்யேகமாக தனி அரங்கு அமைக்கப்பட்டு, தனியார் வேலைவாய்ப்பு நிறுவனங்கள் அவர்கள் இருப்பிடத்துக்குச் சென்று தகுதியானவர்களைத் தேர்வு செய்ய உள்ளனர் என்றார் காமராஜ்.
முன்னதாக, வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ள வளாகத்தை அமைச்சர் காமராஜ் ஆய்வு செய்தார்.

No comments:

Post a Comment