திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ரூ.4.5 லட்சம் மதிப்பில் புதிதாக வாங்கப்பட்டுள்ள நடமாடும் அதிநவீன எக்ஸ்ரே கருவியின் பயன்பாட்டை கல்லூரியின் முதல்வர் அழ.மீனாட்சிசுந்தரம் வியாழக்கிழமை தொடங்கி வைத்தார்.
கருவியை இயக்கி வைத்து அவர் பேசியது:
மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சராசரியாக 800 உள்நோயாளிகளும், 1,200 வெளிநோயாளிகளும் சிகிச்சை பெறுகின்றனர். மருத்துவமனையில் 30 கதிர்வீச்சு திறன் கொண்ட 2 நடமாடும் எக்ஸ்ரே கருவி, 60 கதிர் வீச்சு திறன் கொண்ட ஒரு நடமாடும் எக்ஸ்ரே கருவி ஆகியன உள்ளன. நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாலும், மேலும் பல சிக்கலான நோய்களை கண்டுபிடிக்க எக்ஸ்ரே கருவி தேவைப்பட்டதால் 100 கதிர்வீச்சு திறன் கொண்ட நவீன எக்ஸ்ரே கருவி வாங்கப்பட்டு வியாழக்கிழமை முதல் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
சாதாரணமாக நடமாடும் எக்ஸ்ரே கருவி 60 கதிர்வீச்சு திறனுக்கு குறைவாகவே இருக்கும். இதன் மூலம் நெஞ்சுப்பகுதி, கை கால் எலும்பு பகுதிகளை மட்டுமே படம் எடுக்க இயலும். அத்துடன் எக்ஸ்ரே படத்தை இருட்டறையில் டெவலப் செய்யும்போது சில தவறுகள் நடைபெறவும் வாய்ப்பு உண்டு. முதுகெலும்பு, இடுப்பெலும்புகளை எக்ஸ்ரே படம் எடுக்க இயலாது.
புதிய கருவி முதுகெலும்பு, இடுப்பெலும்பு ஆகியவற்றை துல்லியமாக படம் எடுக்கக்கூடியது. மருத்துவமனையில் 300 கதிர்வீச்சு திறன் கொண்ட 2 எக்ஸ்ரே கருவியும், 600 கதிர்வீச்சு திறன் கொண்ட 1 டிஜிட்டல் எக்ஸ்ரே கருவியும், 100 கதிர்வீச்சு திறன் கொண்ட 2 கருவி களும், அல்ட்ரா சவுண்டு, 3 கருவிகளும், அல்ட்ரா சவுண்டு டாப்ளார் கருவிகளும், சிடி ஸ்கேன், 1 கருவியும் உள்ளன.
விரைவில் இருட்டறையில் எக்ஸ்ரே டெவலப் செய்யாமல் வெளிச்சம் இருக்கும் பகுதியில் கூட டெவலப் செய்யும் வகையிலான அதிநவீன கம்ப்யூட்டர் வசதி கொண்ட டெவலப்பிங் கருவி வாங்கப்படவுள்ளது என்றார் மீனாட்சிசுந்தரம்.
No comments:
Post a Comment