Thursday, 4 February 2016

ஸிகா வைரஸூக்கு இந்தியாவில் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு


பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் வேகமாகப் பரவி வரும் ஸிகா வைரஸூக்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்துள்ளதாக ஹைதராபாதைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் "பாரத் பயோடெக்' நிறுவனம் அறிவித்துள்ளது.
விரைவில் அந்தத் தடுப்பு மருந்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
டெங்கு, சிக்குன் குனியா உள்ளிட்ட நோய்களைப் பரப்பும் ஏடிஸ் வகைக் கொசுக்கள் மூலம் ஸிகா வைரஸ் பரவுகிறது. உகாண்டா நாட்டில் உள்ள ஸிகா என்ற வனப்பகுதியில் கடந்த 1947-ஆம் ஆண்டு இந்த வைரஸ் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது.
ஆப்பிரிக்கா மற்றும் ஆசியக் கண்டங்களில் குறைந்த அளவு பரவி வந்த இந்த வைரஸின் தாக்கமானது, கடந்த 2007-ஆம் ஆண்டு பசிபிக் பெருங்கடல் பகுதிக்கு அருகே உள்ள யாப் என்ற தீவில் வசித்த 75 சதவீதம் பேரைத் தாக்கியது.
அதன் பிறகு பிரேசிலில் கடந்த ஆண்டு முதல் ஸிகா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. அந்நாட்டில் பிறக்கும் குழந்தைகளுக்கும் அதன் தாக்கம் இருப்பதாகக் கூறப்படுகிறது.
உலக சுகாதார அமைப்பின் ஆய்வறிக்கையின்படி, 23 நாடுகளில் ஸிகா வைரஸ் பாதிப்பு உள்ளது. கர்ப்பிணிப் பெண்களை ஏடிஸ் வகை கொசுக்கள் கடித்து ஸிகா வைரஸ் தாக்கம் ஏற்பட்டால் பிறக்கும் குழந்தைகளுக்கு கை, கால்கள் நீண்டோ அல்லது தலை சிறுத்தோ இருக்கும் எனக் கூறப்படுகிறது.
தேங்கிய நீரில் உருவாகும் ஸிகா வைரஸ் கொசுக்கள், பகல் வேளைகளில் மட்டுமே கடிக்கும். இந்த வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு கடுமையான காய்ச்சல் இருக்கும்.
தடுப்பு மருந்து: இந்நிலையில், அனைத்து நாடுகளுக்கும் அச்சுறுத்தலாக விளங்கி வரும் இந்த ஸிகா வைரஸூக்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்துள்ளதாக "பாரத் பயோடெக்' நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனத்தின் தலைவர் கிருஷ்ணா எல்லா, ஹைதராபாதில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
ஸிகா வைரஸூக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிகள் எங்களது ஆய்வுக் கூடத்தில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. தற்போது அந்த ஆராய்ச்சியில் புதிய திருப்புமுனை ஏற்பட்டுள்ளது.
ஸிகா வைரûஸ ஒழிக்கவல்ல தடுப்பு மருந்து கண்டறியப்பட்டுள்ளது. விரைவில் அது பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படும். இந்தியாவில் அந்த வகை வைரஸ்களின் தாக்கம் எதுவுமில்லை என்றாலும், பாதிப்புக்குள்ளான வெளிநாட்டினருக்கு இந்தத் தடுப்பு மருந்துகள் உதவும்.
உலகிலேயே ஸிகா வைரஸூக்கு முதன்முதலாக தடுப்பு மருந்து கண்டுபிடித்த பெருமை நமக்குக் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார் அவர்.
அந்நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறை இயக்குநர் டாக்டர் சுமதி கூறியதாவது:
ஸிகா வைரஸூக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிகள் ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்டு வந்தன. பிரேசிலில் அந்த வைரஸின் தாக்கம் வீரியமடைந்ததை அடுத்து, இந்தத் தடுப்பு மருந்து ஆராய்ச்சியில் எங்களுக்கு புதிய உத்வேகம் பிறந்தது.
அதன் விளைவாகவே தடுப்பு மருந்தைக் கண்டறிய முடிந்தது. கர்ப்பிணிப் பெண்களுக்கும், குழந்தைப்பேறு அடையும் வயதுடைய பெண்களுக்கும் இந்தத் தடுப்பு மருந்து மிகவும் அவசியம் என்றார் அவர்.
மத்திய அரசு நடவடிக்கை: ஸிகா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளும் இந்தியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும், கர்ப்பிணிப் பெண்கள், அத்தகைய நாடுகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஸிகா வைரஸ் தாக்கமானது இந்தியாவில் பரவாமல் தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதற்காக மத்திய சுகாதாரத் துறை இயக்குநரகம் சார்பில் கூட்டுக் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

No comments:

Post a Comment