Friday, 26 February 2016

ரயில்வே நிதிநிலை அறிக்கை: திருவாரூர் மக்கள் ஏமாற்றம்


ரயில்வே நிதிநிலை அறிக்கையில் திருவாரூர் பகுதிகளில் எவ்வித ரயில்வே திட்டங்களுக்கும் அறிவிப்பு இல்லாததால் ரயில் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு வியாழக்கிழமை தாக்கல் செய்த இடைக்கால ரயில்வே நிதிநிலை அறிக்கையில் தமிழக மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத அறிக்கையாக உள்ளது.
திருவாரூர் பகுதி ரயில் பயணிகளின் கோரிக்கையான, திருவாரூர் ரயில் நிலையம் முன்னோடி ரயில் நிலையமாக மாற்றாதது, திருவாரூர் - காரைக்குடி அகல ரயில்பாதை பணி நிறைவேற்றாதது உள்ளிட்ட எவ்வித திட்டமும் அறிவிப்பு இல்லாததால் திருவாரூர் ரயில் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட ரயில் மற்றும் பேருந்து பயணிகள் சங்கத் தலைவர் ஆர். தட்சிணாமூர்த்தி கூறியது:
திருவாரூரிலிருந்து தென் மாவட்டங்களுக்கு ரயில் விடாதது ஏமாற்றம். இதேபோல், மீட்டர்கேஜ் வழித்தடம் இருக்கும்போது இயங்கிய நாகூர் - கொல்லம் ரயில், நாகூர் - விழுப்புரம் பயணிகள் விரைவு ரயில் விடாதது ரயில் பயணிகளிடையே ஏமாற்றம் அளிக்கிறது.
திருவாரூர் வழியாகச் செல்லும் என்று அறிவிக்கப்பட்ட மன்னார்குடி - சென்னை விரைவு ரயில் திருவாரூர் வழியாக இயக்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றாதது ஏமாற்றம் அளிக்கிறது.
கீழ்தஞ்சை மாவட்டம் ரயில்வே நிதிநிலை அறிக்கையில் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் மத்திய ரயில்வே அமைச்சரிடம் வலியுறுத்தி ரயில் பயணிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.

No comments:

Post a Comment