Sunday, 28 February 2016

பாசன வாய்க்கால்களை கோடைகாலத்திலேயே தூர்வார வேண்டும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தல்






























திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பாசன வாய்க்கால்களை கோடைகாலத்திலேயே தூர்வார வேண்டும் என விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

சிறப்பு நிதி

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் மதிவாணன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி மோகன்ராஜ், வேளாண்மை இணை இயக்குனர் மயில்வாகணன், நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் அழகிரிசாமி, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் ராஜேந்திரபிரசாத், வெண்ணாறு கோட்ட செயற்பொறியாளர் ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:-

பாண்டியன் (விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர்): தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக தூர்வாரும் பணிகளுக்கு சிறப்பு நிதியை அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும். பயிர் காப்பீடு திட்டத்தை தனியாரிடம் ஒப்படைக்க கூடாது. விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.

சுந்தரமூர்த்தி (விவசாயிகள் சங்க நிர்வாகி): குடவாசல் பகுதியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு பணம் குறைவாக வழங்கப்படுகிறது. இதனால் விவசாயிகளிடம் இருந்து குறைந்த அளவே நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. இதை கண்காணித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் விரைவாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தூர்வார வேண்டும்

சேதுராமன் (மாவட்ட விவசாயிகள் நலச்சங்க தலைவர்): விவசாயிகள் 2012-13-ம் ஆண்டு பெற்றுள்ள பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். மாவட்டத்தில் உள்ள பாசன வாய்க்கால்களை கோடை காலத்திலேயே தூர்வார வேண்டும்.

பாலகுமாரன் (பேரளம்): நன்னிலம் ஒன்றியத்தில் உழவு பணிக்கு தேவையான எந்திரத்தை மானியத்தில் பெற விவசாயிகள் அதிகம்பேர் பதிவு செய்து உள்ளனர். இவ்வாறு பதிவு செய்து காத்திருப்பவர்களுக்கு இதுவரை எந்திரம் வழங்கப்படவில்லை. காத்திருப்போர் பட்டியலில் உள்ள விவசாயிகளுக்கு விரைவாக எந்திரம் வழங்க வேண்டும்.

சேகர் (எடமேலையூர்): விவசாயிகளிடம் இருந்து உளுந்து, பயறு வகைகளை அரசே கொள்முதல் செய்ய வேண்டும்.

தம்புசாமி (கரும்பு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர்): கடந்த 2 ஆண்டுகளாக விவசாயிகளுக்கு கரும்புக்கான நிலுவை தொகை வழங்கப்படவில்லை. நடப்பாண்டில் கரும்புக்கு அறிவித்துள்ள பரிந்துரை விலையை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். குளிக்கரை ஒட்டக்குடி வாய்க்காலை முழுமையாக தூர்வார வேண்டும். திருவாரூர் மாவட்டத்தில் தேங்காய் விலை வீழ்ச்சியடைந்து உள்ளது. எனவே தேங்காயை அரசே கொள்முதல் செய்ய வேண்டும்.

கட்டுமான பணி

ஜெயராமன் (நமது நெல்லை காப்போம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர்): கட்டிமேடு பாசன பெரிய வாய்க்காலில் உள்ளாட்சித்துறை, கல்வித்துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் பொதுமக்கள் ஏற்படுத்தி உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.

மயில்வாகணன் (வேளாண்மை இணை இயக்குனர்): திருவாரூர் மாவட்டத்தில் 10 இடங்களில் தலா ரூ.1½ கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு கட்டுமான பணி தொடங்கி உள்ளது. வடுவூரில் 15 ஏக்கர் பரப்பில் தென்னை நாற்றாங்கால் உருவாக்கப்பட உள்ளது.

மதிவாணன் (கலெக்டர்): திருவாரூர் மாவட்டத்தில் மழை, வெள்ள பாதிப்பு நிவாரண தொகை ரூ.62 கோடி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி ரூ.46 கோடிக்கு பட்டியல் தயார் செய்து அனுப்பி வைக்கப்பட்டு இதுவரை ரூ.28 கோடி மதிப்பிலான நிவாரணம் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள ரூ.16 கோடிக்கு பட்டியல் தயாரிக்கும் பணிகள் நிறைவு பெற்றிருக்கின்றன. எனவே விவசாயிகளுக்கு வருகிற 29-ந் தேதிக்குள் நிவாரணம் வழங்கப்படும்.

இவ்வாறு விவாதம் நடந்தது. 

No comments:

Post a Comment