Sunday, 21 February 2016

இன்று 1.16 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து


திருவாரூர் மாவட்டத்தில் 5 வயதுக்குள்பட்ட 1.16 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து ஞாயிற்றுக்கிழமை புகட்டப்படுகிறது. இதற்காக 870 முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சொட்டு மருந்து வழங்க ஊரக பகுதிகளில் 800, நகர்பகுதிகளில் 70 என 870 முகாம்கள் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், சத்துணவு மையங்கள், வளர்கல்வி மையங்கள், பள்ளிகள், புகைவண்டி நிலையங்கள், பேருந்து நிலையங்கள் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.
இதுதவிர நடமாடும் குழுக்கள் மூலம் போக்குவரத்து வசதி இல்லாத இடங்களுக்கு தேசிய ஊரக வேலை உறுதி அளிக்கும் திட்டத்தின்கீழ் பணிகள் நடைபெறும் இடங்களிலும் சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
காய்ச்சல் கண்ட குழந்தைகள், முகாம் அன்று பிறந்த குழந்தைகள், ஏற்கெனவே எத்தனை முறை சொட்டு மருந்து கொடுத்திருந்தாலும் தற்போது சொட்டு மருந்து தவறாமல் கொடுக்க வேண்டும். பணி நிமித்தம் காரணமாக இடம் பெயர்ந்து செல்லும் கீழ்க்கண்ட மக்களுக்கு சிறப்ப கவனம் செலுத்தி அவரவர்கள் பணியிடத்தில் சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
செங்கல் சூளை தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், சாலைப்பணி தொழிலாளர்கள், கைரேகை பார்ப்பவர்கள், ஆடு, மாடு மற்றும் வாத்து மேய்ப்பவர்கள், பிற மாநில தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்படும். (பொம்மை செய்பவர்கள்).
இப்பணியில் சுகாதாரம், ஊட்டச்சத்து, ஊரக வளர்ச்சி, கல்வித்துறை, வருவாய்த் துறை, மாணவர்கள், தன்னார்வலர்கள் ரோட்டரி சங்கத்தினர் ஆகியோர் சொட்டு மருந்து வழங்குபவர்களாகவும், மேற்பார்வையாளர்களாகவும், கண்காணிப்பாளர்களாகவும் 3,480 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பணியை மேற்பார்வையிட ஆரம்ப சுகாதார நிலைய அளவில் 112 மேற்பார்வையாளர்களும், வட்டார அளவில் 10 கண்காணிப்பாளர்களும், மாவட்ட அளவில் 7 மேற்பார்வையாளர்கள் என மொத்தம் 129 அலுவலர்கள் பணியாற்ற உள்ளனர். பொதுமக்கள்  இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி 5 வயதுக்குள்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கி போலியோ இல்லாத இந்தியாவை உருவாக்க ஒத்துழைக்க கேட்டுக் கொள்ளப்படுகின்றனர் என அதில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment