Thursday 11 February 2016

சேவை மையங்களுக்கு வரும் மக்களுக்கு உதவி செய்ய வேண்டும்'


சேவை மையங்களுக்கு சான்றிதழ் பெற வரும் மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன் கூறினார்.
திருவாரூரில் புதன்கிழமை மின் ஆளுமை திட்டத்தின் கீழ் புதிய ஒருங்கிணைந்த சேவைகள் குறித்த பயிற்சியை தொடங்கி வைத்து ஆட்சியர் பேசியது:
திருவாரூர் மாவட்டத்துக்குள்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், புதுவாழ்வு திட்டம், அரசு கேபிள் டிவி கார்ப்பரேசன், தமிழ்நாடு மின்னணு நிறுவனம் ஆகிய பொது சேவை மையங்களில் புதிய சேவைகளாக பிறப்பு, இறப்புச் சான்றிதழ், காவல்துறை ஆன்லைன் புகார், திருமணப் பதிவு, போக்குவரத்துத்துறை, குடிமைப் பொருள், தமிழ்நாடு தொழில்துறை, ஜிடிபி ஆகிய சேவைகள் வழங்கப்படுகிறது.
இந்த சேவைகளைச் சிறப்பாக மேற்கொள்ள பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சியை பெற்று சேவை பெற வரும் பொதுமக்களுக்கு அவர்கள் கேட்கும் சான்றிதழ்களைப் பெற்றுத் தர வேண்டும். சேவை மையங்களால் பொதுமக்கள் சான்றிதழ் பெறுவதில் பெருமளவு காலநேர விரயம் குறைக்கப்படுகிறது.
சேவை மையங்களுக்கு வரும் பொதுமக்களிடம் கணினி உள்ளீடு செய்பவர்கள் மிகவும் கணிவுடன் நடந்துகொண்டு அவர்களிடம் சரியான தகவல்களைப் பெற்று கணினியில் உள்ளீடு செய்ய வேண்டும் என்றார் மதிவாணன்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் த. மோகன்ராஜ், மாவட்ட தகவலியல் அலுவலர் புகழேந்தி, உதவி தகவலியல் அலுவலர் ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment