Friday, 19 February 2016

சென்னையில் அரசு பஸ்களில் மாதம் 10 முறை பயணம் செய்ய மூத்த குடிமக்களுக்கு இலவச பஸ் பாஸ்; சட்டசபையில் ஜெயலலிதா அறிவிப்பு



சென்னையில் அரசு பஸ்களில் மூத்த குடிமக்களுக்கு இலவச 
பஸ் பாஸ் திட்டம் 24-ந்தேதி முதல் செயல்படுத்தப்படும் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார்.

தமிழக சட்டசபையில் கேள்வி நேரம் முடிந்த பிறகு, 110-விதியின் கீழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு முதல்-அமைச்சர் ஜெயலலிதா பேசினார்.

எம்.ஜி.ஆர். காட்டிய வழி

கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலின் போது அ.தி.மு.க., தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பின் தமிழக மக்களின் நலன் காக்கும் வகையில் எவ்வாறெல்லாம் செயல்படும் என்பது பற்றி அப்போது வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் மிகத் தெளிவாக நாங்கள் குறிப்பிட்டிருந்தோம். எம்.ஜி.ஆர். காட்டிய வழியில் எங்களது புனிதப் பயணம் அமையும் என்ற வாக்குறுதியை அளித்திருந்தோம்.

தமிழகம் ஒருங்கிணைந்த வளர்ச்சிப் பாதையில் பீடுநடை போட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கல்வி, மருத்துவம், விவசாயம், நதிநீர், அடிப்படைக் கட்டமைப்பு, வீடு, மின்சாரம் மற்றும் தொழில் துறை வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்றும், தமிழ் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் தலை நிமிர்ந்து சொந்தக்காலில் நிற்பதற்கான வழி உருவாக்கப்படும் என்றும் எங்களது லட்சியத்தைப் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இந்த லட்சியத்தை எய்துவதற்கு துறை தோறும் எடுக்க உள்ள நடவடிக்கைகள் பற்றியும் தெளிவாக குறிப்பிட்டிருந்தோம்.

மூத்த குடிமக்களுக்கு பஸ் பாஸ்

எங்களது தேர்தல் அறிக்கையில் முதன்மை துறை, உற்பத்தித்துறை மற்றும் சேவைத்துறை ஆகியவை எவ்வாறு மேம்படுத்தப்படும் என்பது பற்றி தெரிவித்திருந்ததோடு, மாணவர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள், இளைஞர்கள், தாய்மார்கள், முதியோர்கள், ஆதரவற்றோர், ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் என ஒவ்வொரு பிரிவினருக்கும் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் பற்றியும் வாக்குறுதி அளித்திருந்தோம்.

மூத்த குடிமக்களுக்கு அரசுப் பேருந்தில் பயணம் செய்ய கட்டணமில்லா பஸ் பாஸ் வழங்கப்படும் என்ற வாக்குறுதியை தேர்தல் அறிக்கையில் நாங்கள் அளித்திருந்தோம். இந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், முதற்கட்டமாக சென்னை மாநகரப் பேருந்துகளில் மூத்த குடிமக்கள் கட்டணமின்றி பயணம் செய்யும் வகையிலான ஒரு திட்டம் செயல்படுத்தப்படும்.

10 டோக்கன்கள்

இதன்படி, 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் குளிர் சாதன வசதி இல்லாத சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழக அனைத்து பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணம் செய்யலாம்.

இதற்கென மாதத்திற்கு 10 டோக்கன்கள் வழங்கப்படும். பேருந்து நடத்துனரிடம் இந்த டோக்கன்களை கொடுத்து கட்டணம் ஏதும் இல்லாமல் மூத்த குடிமக்கள் பயணம் செய்யலாம்.

இந்த திட்டத்தை பயன்படுத்திக்கொள்ள விரும்புபவர்கள் அதற்குரிய படிவத்தில் தங்களது புகைப்படத்தினை இணைத்து அடையாள அட்டை மற்றும் டோக்கன்களை பெற்றுக்கொள்ளலாம்.

இதற்கான விண்ணப்பப் படிவத்தை போக்குவரத்து துறையின் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

இணையதளத்தில் வெளியீடு

இந்த விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட பஸ் டெப்போக்களிலும் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட பஸ் டெப்போக்களில் கொடுத்து அடையாள அட்டை மற்றும் டோக்கன்களை பெற்றுக்கொள்ளலாம்.

எந்தெந்த பஸ் டெப்போக்களில் இந்த வசதி செய்யப்பட்டுள்ளது என்ற விவரம் போக்குவரத்துத் துறையின் இணையதளத்தில் வெளியிடப்படும்.

விண்ணப்பங்கள் கொடுப்பதற்கென கடைசி தேதி என்று எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை. தேவைப்படுவோர் இதற்கான விண்ணப்பத்தை எப்போது வேண்டுமானாலும் அளிக்கலாம்.

தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றம்

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் மூத்த குடிமக்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் இந்த திட்டம் 24-2-2016 முதல் நடைமுறைப்படுத்தப்படும்.

இந்த புதிய திட்டத்திற்கு பொதுமக்களிடையே உள்ள வரவேற்பைக் கண்டறிந்து மற்ற இடங்களுக்கும் இது விரிவுபடுத்தப்படும்.

என்னுடைய இந்த அறிவிப்பின் மூலம் 2011-ம் ஆண்டு அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் எங்களால் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளன என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளுக்கும் மேலாக பல்வேறு நலத் திட்டங்களையும் எனது தலைமையிலான அரசு செயல்படுத்தியுள்ளது என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

முதல்-அமைச்சர் அறிவிப்பு செய்து பேசி முடித்த உடன், இந்திய குடியரசு கட்சி உறுப்பினர் சே.கு.தமிழரசன், கொங்கு இளைஞர் பேரவை உறுப்பினர் தனியரசு, பார்வார்டு பிளாக் கட்சி உறுப்பினர் பி.வி.கதிரவன், உறுப்பினர் எர்ணாவூர் நாராயணன், புதிய தமிழகம் (அதிருப்தி) உறுப்பினர் ராமசாமி, மனிதநேய மக்கள் கட்சி உறுப்பினர் ஜவாருல்லா, தே.மு.தி.க (அதிருப்தி) உறுப்பினர் மா.பா.பாண்டியராஜன், நியமன உறுப்பினர் நான்சி ஆன் சிந்தியா பிரான்சிஸ் மற்றும் அமைச்சர் பி.தங்கமணி ஆகியோர் வாழ்த்தி பேசினர். 

No comments:

Post a Comment