சிறுபான்மை மொழிப் பாடத்தை முதன்மைப் பாடமாகக் கொண்டு தேர்வு எழுத அனுமதி பெற்றவர்கள், விரும்பினால் தமிழை முதன்மைப் பாடமாகக் கொண்டு தேர்வு எழுதலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்கக இணை இயக்குநர் அமுதவல்லி, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் (மார்ச் 2016), தமிழ்நாடு தமிழ் கற்பித்தல் சட்டத்தின் படி, அனைத்து மாணவர்களும் பகுதி-1இல் தமிழை முதற்பாடமாகக் கொண்டு தேர்வு எழுத வேண்டும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு, பெயர்ப் பட்டியலிலும் தமிழே முதன்மை மொழிப்பாடமாகப் பதிவு செய்யப்பட்டது.
இதற்கிடையே, சென்னை உயர்நீதிமன்ற இடைக்காலத் தீர்ப்பின்படி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்த 7,889 மாணவர்களுக்கு மட்டும் தமிழ் மொழிப் பாடம் எழுதுவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு, அவர்களின் சிறுபான்மை மொழிப் பாடத்தை முதன்மை மொழிப் பாடமாகக் கொண்டு தேர்வு எழுத அனுமதி அளித்து பெயர்ப் பட்டியலிலும் திருத்தம் மேற்கொள்ள தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், வேலூர் மற்றும் சென்னை மாவட்டங்களுக்கு உள்பட்ட பள்ளிகளில் படித்து வரும் சில மாணவர்கள் (உயர்நீதிமன்ற தீர்ப்பு பெற்றவர்கள்) தமிழ் மொழியையே முதல் மொழிப் பாடமாகக் கொண்டு பகுதி-1இல் தேர்வு எழுத விருப்பம் தெரிவித்துள்ளதாக, அம்மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மூலம் தெரியவந்துள்ளது.
எனவே, சென்னை உயர்நீதிமன்ற இடைக்காலத் தீர்ப்பு பெற்ற 7,889 மாணவர்களில் எவரேனும் தமிழ் மொழியையே முதல் மொழிப் பாடமாகக் கொண்டு பகுதி-1இல் தேர்வு எழுத விரும்பினால், அவர்களை அவ்வாறே தேர்வு எழுதுவதற்கு அனுமதிக்கலாம். அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அந்த மாணவர்களின் விருப்பக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டு தமிழை முதல் மொழிப் பாடமாகக் கொண்டு தேர்வு எழுத அனுமதிக்கலாம். பெயர்ப் பட்டியலில் சிறுபான்மை மொழிப்பாடத்தை திருத்தம் செய்ய வேண்டாம் என சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment